மழையை நனைத்தவள்

மழையை நனைத்தவள்

குடைப் பிடித்து செல்கிறாய்
மழை அழுகிறது ...

உன்னைத் தொட முயன்று
தோற்றுப் போனதால் .

வெயிலுக்கு அஞ்சி
மரத்தடியில் அமர்கிறாய்
அம்மரத்திற்கு மட்டும்
அன்று வசந்த காலம்...

பூக்களனைத்தும்
உன் கூந்தலையே
நாடுகின்றன...

ஏனோ
உன் கூந்தலில்
மட்டும் பூக்கள்
மரணிப்பதே இல்லை...

உன் சிரிப்புதான்
என்னைக் கவிஞனாக்கியது
பலரைப் பைத்தியமாக்கியது...

வெட்கப்பட்டு சிரித்தாய்
மரபுக் கவிதை...

குழந்தையைக் கொஞ்சினாய்
புதுக் கவிதை...

கண் சிமிட்டினாய்
ஹைக்கூ கவிதை...

பகலில் தோன்றிய
பௌர்ணமி நிலவாய்
நீ...

தெப்பக்குளம் தண்ணீரால்
நிறைந்திருக்க
மனமோ கண்ணீரால் ...

அன்று ,
இதே குளத்தில்
நீ கால் தடமிட்டு
வரைந்து சென்ற
கோலம் அழிந்திருக்குமே...

காதல் பந்தயத்தில்
பெயர்க் கொடுத்தப்
பிறகு சொன்னார்கள் ,

நீ
வேற்று மதத்தவள் என்று,

மதம்
யானைகளுக்கும்
மனிதர்களுக்கும்
மட்டும் தான் பிடிக்கும்.

நீயும்,நானும்
சாமியின் பிள்ளைகள்...

இதயம் வருந்துகின்றது
உன்னோடு பேசக் கிடைத்த
தருணங்களை
தவறவிட்டதற்காக...

சொன்ன காதல்
சுகமானதென்றால்
சொல்லபடாத என் காதல்
புனிதமானது...

உன்னிடம் ஒரே
ஒரு கேள்வி
நான் பேசிய
மௌன வார்த்தைகளில்
ஒன்றுக்கு கூடவா
பொருள் புரியவில்லை உனக்கு.

உதிர்ந்து விழுந்த
உன் தலைமுடியை
எடுத்து பத்திரபடுத்தி
வைக்க விரும்பவில்லை ...

எனக்கான சந்தோசம்
உன் முடியிலில்லை
முடிவில்...

காதல் உனக்குள்
கர்ப்பமாயிருக்கிறதா
இல்லையா...

சாஜஹான் கட்டிய
தாஜ்மஹால் கல்லறைக்கு
சற்றும் குறைந்ததல்ல...

நான் கட்டிய
கடற்கரை மணல் வீடு.

நீ
மழையை நனைத்தவள்

பிறந்த குழந்தையின்
வாசனை சுமப்பவள்...

கடவுளின் செல்லம்
வானத்து நிலவின்
ஹைக்கூ வடிவம்...

பூமிக்கு மச்சம்
படைப்பின் உச்சம்.


Close (X)

5 (5)
  

மேலே