கைவிட்டு மறைந்தாள் கனவு மங்கை

​​உண்டக் களைப்பில் உறக்கம் தழுவ
கட்டி அணைத்தாள் கனவு மங்கை !
வெட்டி விடவே புரண்டுப் படுத்தேன்
வெகுளி நானோ அடங்கிப் போனேன் !

அழைத்துச் சென்றாள் கடற்கரை ஓரம்
மாற்றம் வேண்டி வேற்றிடம் என்றாள் !
நடுநிசி ஆனதால் நடமாட்டம் இல்லை
நடுக்கம் வந்ததால் நடையில் தளர்ச்சி !

அலையின் ஓசை இசையாய் ஒலித்திட
அமர்ந்தேன் சற்று அதனையும் ரசித்திட !
அலைகடல் அளவை அளந்தேன் விழியால்
அமைதியும் ஆனேன் இயலாத நிலையால் !

நிலைத்த நிசப்தம் நினைவைக் கிளறிவிட
நீண்ட பெருமூச்சும் தோன்றி மறைந்திட !
சங்கடங்கள் சரிந்து நெஞ்சில் விழுந்திட
சங்கமம் ஆனது உள்ளமும் உவகையும் !

தடைப்பட்ட மின்சாரம் தடையாய் வந்தது
கனவை கலைத்தது விழிக்கவும் வைத்தது !
கைவிட்டு மறைந்தாள் கனவு மங்கையும்
கைம்பெண் ஆக்கினாள் ஆணான என்னையும் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (22-Jun-17, 3:12 pm)
பார்வை : 205

மேலே