கல்யாணக் கனவுகள்

கல்யாணம் என்பது மனித வாழ்வில் மிக முக்கியமான ஒன்று. இரண்டு மனங்கள் சேரும் மணவாழ்வை மரியாதையுடன் திருமணம் என்கின்றனர் தமிழர்கள். இந்த மரியாதை மணவாழ்வு நன்றாக அமையவேண்டுமே என்ற கவலையின் பாற்பட்டது. தமிழர்கள் களவு மணத்தை ஒரு காலத்தில் வெகுவாக ஆதரித்து இருந்தாலும் தமிழன் நிறுவனப்படுத்தப்பட்ட சமூக அமைப்பை முற்றும் முழுதுமாக ஏற்றுக் கொண்ட பின் களவு மணத்தை ஓரங்கட்டி, "திரு" மணத்தை சமூக மாடலாக முன் வைக்கிறான். ஒரு காலத்தில் களவு மணத்திற்கு இருந்த மரியாதை போய் வெறும் "வைப்பாக" போகிவிட்ட ஒரு நிலையைத்தான் இப்போது காண்கிறோம். பண்டைத் தமிழ் தெய்வங்களான திருமாலும், மால் மருகனான முருகனும் ஆளுக்கு ஒரு ஜோடி தேவியர் வைத்திருக்கின்றனர். காதல் வரும் போது கணக்கு அவசியமில்லை என்று தமிழர்கள் கருதினர் போலும். ஆனால் வேளாண்மை சமூகம் நிறுவப்பட்டபின் இந்த சமாச்சாரமெல்லாம் குறைந்து சிவன்-பார்வதி என்று கணக்குப் பார்த்து விட்டனர். இந்த கூட்டத்திற்குள் வராத ஆசாமிகளுக்கு பிள்ளையார், அனுமார் என்று பிரம்மச்சர்ய தெய்வங்களையும் வைத்துப் போயினர் (வடக்கே முருகனை பிரம்மச்சாரியாகவும், பிள்ளையாருக்கு பக்கத்திற்கு ஒன்று என கொடுக்கும் பழக்கமும் உள்ளது).

களவு மணமும் போய், "திரு" மணமும் போய் வெறும் வரதட்சிணை மணம்தான் கடைசியில் பிரபலமாகிவிட்டது தமிழகத்தில்! கல்யாணத்தின் உள் நோக்கே மாறிப்போய், பெண், நிலம், சொத்து என்பது போல் உடமையாக பார்க்கப் பட்டு பால்ய விவாகத்தில் பண்டமாற்றுப் பட்ட காலமும் உண்டு. இப்போது பால்ய விவாகம் இல்லையெனினும், சொத்திற்காக சொந்தத்தில் உறவு எடுப்பது இன்றும் நடைமுறை. உறவு விட்டுப் போகக்கூடாது என்று ஊருக்குச் சொன்னாலும் அவர்கள் "உறவு" என்று சொல்வது சொத்து, பத்தைத்தான். ஒரு காலத்தில் பிள்ளை வீட்டார் பெண்ணிற்கு காசு கொடுத்து மணம் முடித்தனர் (எங்க அம்மா அந்த டைப்), பின் பெண் வீட்டார் பிள்ளைக்கு காசு கொடுத்து மணம் முடித்தனர். இந்த பழக்கம் சமூக கொடுமையாக மாறிப் போய் பணம் தரவில்லையெனில் பிணம் என்னும் அளவிற்கு போய் விட்டது இந்தியாவில்! ஆனாலும் பத்திரிக்கையில் இன்றும் "திரு"மணம்தான். பெண்ணிற்கு சரியான வரன் கிடைக்கவில்லையே என்ற கவலையில் உயிர் விட்ட தந்தையர் உண்டு. வரனுக்காக பேயாய் அலையும் பெற்றோரும் உண்டு. எப்படியோ கல்யாணம் கட்டி தள்ளி விட்டால் போதும் என்று "பொறுப்பைக் கழிக்கும்" பெற்றோரும் உண்டு. வரன் குதிர்க்கவில்லையெனில் வைணவ குடும்பங்களில் ஆண்டாளின் நாச்சியார் திருமொழி பாசுரங்களை தினம் வீட்டில் சொல்லச் சொல்வதுண்டு. பத்துப் பாசுரங்கள். ஒரு பல ஸ்துதி. ஆக மொத்தம் பதினொன்று. இதைச் சொன்னால் கல்யாணம் நடக்கும் என்ற நம்பிக்கை.

வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.

ஆயிரம் யானைகள் சூழ (வாரணம் என்பதை சிலர் வானரம் என்று தப்பாக சொல்வதுண்டு, குரங்கு மாதிரிப் பெண்/பையன் கிடைத்தால் பெருமாளை குற்றம் சொல்லி என்ன பயன்?). நாரணன் நம்பி (எப்படிப் புருசனைக் கூப்பிடுகிறாள் பாருங்கள் ஆண்டாள்? ஒரு வாத்சல்யத்துடன்) பூரண கும்பம், அதுவும் பொற்குடம் (மாப்பிள்ளை என்ன சதாரண ஆளா?) வைத்து, தெருவெல்லாம் தோரணம் கட்டி (ஆயிரம் யானைகள் நிற்கக் கூடிய தெருவிற்கு அலங்கார மென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஜெயலலிதா நடத்தியது கிள்ளுக் கீரை:) கண்ணன் அவள் எதிர் வருமாறு கனவு கண்டேன் என்கிறாள் ஆண்டாள்.

நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான்.

நாளை வதுவை (திருமணம்) என்கிறானாம் கண்ணன். "மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்; காத்திருப்பேனோடீ? இதுபார், கன்னத்து முத்தமொன்று!" என்பான் அவசரக் குடுக்கை பாரதி. ஆனால் ஆண்டாள் மெதுவாக, முறையாகச் செல்கிறாள். இந்தப் பாசுரங்களை வாசித்தால் அந்தக் காலத்து திருமண சடங்குகள் நன்றாகப் புரியும்.

திருமணத்திற்கு முன் பெண்ணை மந்திரித்து (கண்ணு பட்டு விடக்கூடாது பாருங்கள்! சந்தர்ப்பம் கிடைத்தால் வைணவத் திருமணத்தைப் போய் பாருங்கள். ஆண்டாள் மாதிரி கொண்டை போட்டு பெண் பையப் பைய வரும் போது...யாராக இருந்தாலும் ஒருமுறை சொக்கிப் போய்விடுவர். கண் போட்டு விடுவர். ஆண்டாள் மாதிரி வேஷத்திற்கே இவ்வளவு அழகென்றால்...?), நான்கு திசைகளிலிருந்தும் தீர்த்தம் கொண்டு வந்து, பெண்ணிற்கு காப்பு கட்டி...




மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்.

கொட்டு மேளம்! கொட்டு மேளம்! என்ற சத்தம் கேட்கவில்லை? இந்த கைத்தலம் பற்றக் கனாக்கானும் வரிகளை கண்ணதாசனும் ஆண்டாளிடமிருந்து உரிமையுடன் கடன் வாங்கி "கந்தன் கருணை" படத்தில் உபயோகிக்கிறான். "மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு" என்ற பாடலில் வள்ளி, முருகனை மணம் முடிப்பதுபோல் கனாக் காணுவதாகப் பாடுகிறான்.

அக்கினி சாட்சியாக திருமணம் நடப்பதாகப் பாடுகிறாள் ஆண்டாள். இம்மைக்கும், ஏழேழ் பிறவிக்கும் நமக்கு பற்றக் கூடிய எளியவனாக இருக்கும் நாரணன் நம்பியின் கை பற்றி அம்மி மிதிப்பதை பதிவு செய்கிறாள் ஆண்டாள். நலுங்கு என்று ஒரு சடங்கு உண்டு. மாப்பிள்ளையையும்-பெண்ணையும் அந்தக் காலத்து முறைப்படி அறிமுகம் செய்து வைத்து அந்நியோன்யப்படுத்தும் முறையாக பொரி தட்டி (இப்போது அப்பளத்தை தலையில் தட்டுகிறார்கள். பிசின் மாதிரி எதாவது ஜெல் போட்டிருந்தால் தலையில் ஒட்டிய அப்பளத்தை அப்புறம் எடுக்கவே முடியாது!).

குங்குமம் அப்பி, குளிர் சாந்து தடவி, மங்கல வீதி வலம் வந்து, அம்பாரி வைத்த யானை மேல் ஜாம்மென்று நாரணன் நம்பியுடன் கிளம்பிப் போவதாக தன் கனவுகளை வரிசைப் படுத்திச் சொல்கிறாள் ஆண்டாள். (ஜெர்மன் திருமணங்களில் யானைக்குப் பதில் தம்பதிகள் மெர்சிடிஸ் பென்ஸ் காரில் செல்ல, முன்னும், பின்னும் பத்து கார்கள் சத்தம் கிளப்பிக் கொண்டு போவது ஆண்டாளின் மின்சாரக் கனவாக இருக்கலாம்!).

ஆண்டாள் இப்படி பாடிவிட்டு போயிருந்தால் அது வெறும் கவித்தொகுப்பாகியிருக்கும். ஆனால் கடைசியாக ஒரு பிட்டு போடுகிறாள்!

ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,
வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே!

இப்பாசுரங்களைச் சொன்னால் மக்கள் பேறு கிடைக்கும் என்கிறாள். அங்குதான் ஆரம்பமாகிறது வைணவ நம்பிக்கைகள். அன்றிலிருந்து வரன் கிடைக்காவிட்டால் இப்பாசுரங்களைச் சொல்லும் வழக்கம் வந்துள்ளது.

ஆண்டாள் கண்டது கனவா?

"எதையும் நேரடியாகக் கூறிவிட முடியாது. நேரடியாகக் கூறுவது என்பது ஒரு பாவனையே. நாம் ஒரு மனநிலை, தரிசனத்தை முன் வைக்கும் போது அதை வாசிக்கும் மனம் சொற்களின் முடிவற்ற குறியீட்டுத் தன்மையினூடாகவே அதை அனுபவமாக்குகிறது. அக்குறியீட்டுத் தளம் விரிவான பொருளில் நமது கலாச்சாரமாகவும், நமது ஆழ்மனமாகவும் இருக்கிறது. அக்குறியீட்டுத் தளத்தை "சகஜமாக" பயன்படுத்தாமல் கூரிய அவதானிப்பின் மூலம் பிரக்ஞை பூர்வமாக பயன்படுத்துவது புதியவகை எழுத்தின் உத்தி. ஆக இலக்கியத்தில் மன வாழ்வை புற நிகழ்வில் பிரதிபலித்து காட்டிய பழைய வழக்கத்திலிருந்து மனவாழ்வை குறியீடுகள், மொழியின் படிம சாத்தியங்கள் ஆகியவற்றின் ஊடாக வெளிப்படுத்தும் வழக்கம் உருவாகியுள்ளது. Reporting-ஐ விட மேலாகக் "கனவு" தன்மை முக்கியத்துவம் கொள்கிறது இன்றைய கதை குறியீடுகளின் ஊடாக இயங்குவது மட்டுமல்ல அதுவே குறியீடாகவும் உள்ளது. அதாவது கதை கவிதைக்கு வெகு அருகே சென்றுள்ளது" என்கிறார் ஜெயமோகன். ஜெயமோகனின் எழுத்து ஆளுமையை வாசித்தவர்களுக்குப் புரியும் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது.



ஆண்டாள் பாடல்களை இவர் சொல்லும் நிலைக்கு முன் உதாரணமாகக் கொள்ளலாம். அவை வெறும் கனவு என்பது போய் அது குறியீடாக நிற்கிறது. அதனால்தான் இதை அத்தனை திருக்கோவில்களிலும் சேவிக்கின்றனர். இந்தக் குறியீடு காட்டுவது என்ன என்று எழுதப் போனால், பெரியவாச்சான் பிள்ளையின் பிரவச்சனம் போல் ஆகிவிடும். ஆனால் இந்தப் பாடல்களை ஊன்றிப் படிக்கும் எவருக்கும் கிடைக்கும் ஆண்டாள் சொல்லும் தரிசனம். கவிதைக்குள் நுழைவதற்கென்றொரு மனோநிலை வேண்டுமென்பார் கி.ராஜ நாராயணன். அந்த மன நிலை கிடைக்க உங்களுக்கு ஆண்டாளே அருளட்டும்.

நன்றி நாராயணன் கண்ணன் ஸ்வாமி

எழுதியவர் : (23-Jun-17, 4:17 pm)
Tanglish : kalyank kanavugal
பார்வை : 91

மேலே