அகல்விளக்கு’ என்னும் புதினத்தில் பெருங்காஞ்சியைப் பற்றி டாக்டர் முவ சிறப்பாக வர்ணனை -----ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோயில் – பெருங்காஞ்சி

இவ்வளவு புகழுக்குக் காரணமான பெருங் காஞ்சி வேலூர் மாவட்டத்திலுள்ள வாலாஜப் பேட்டையிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ளது. பெரிய ஏரியின் கீழே ஊர் அமைந்துள்ளது. ஏரிக்கரை மீதே நெடுஞ்சாலை செல்லுகிறது. வளைந்து செல்லும் சாலையும், சுற்றிலும் மலைகளும், நீர்நிலைகளும், கோயில்களும் எப்படிப்பட்டவர் கண்ணையும், கருத்தையும் கவரும்.
தமிழ் அறிஞர் டாக்டர் மு.வ. பிறந்த ஊரான, வேலம் என்னும் சிற்றூர் பெருங்காஞ்சிக்கருகே உள்ளது. அவர் எழுதிய ‘அகல்விளக்கு’ என்னும் புதினத்தில் பெருங்காஞ்சியைப் பற்றி டாக்டர் மு.வ. சிறப்பாக வர்ணனை செய்திருக்கிறார்.
இவ்வூரில் இக்கோயில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோயிலுக்கு வெளியே ‘அகஸ்த்திய தீர்த்தம்’ அமைந் துள்ளது. கோயிலின் பிரதான வாயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
அவ்வாயிக்குள் நுழைந்தால் நமக்கெதிரே 16 கால் மண்டபத்தைக் காணலாம். அம்மண்டபத் தில் இடப்புறம் தக்ஷிணா மூர்த்தியை தரிசிக்கி றோம். தென்முகக் கடவுளான அவரின் மோன நிலையை சிற்பி எவ்வளவு அழகாகப் படைத்துள் ளார் என்பதை நேரில் கண்டுதான் தெரிந்து கொள்ளவேண்டும். வலப்புறம் நவக்கிரஹங்கள் கொலுவீற்றிருக்கின்றார்.
அம்மண்டபத்திலிருந்து ஒருவாயிலைக் கடந்தால் நமக்கு இடப்புறம் காசி விசுவநாதரை தரிசிக்கிறோம். அவரை தரிசித்துக் கொண்டு அடுத்துள்ள வாயிலைக் கடந்து சென்றால் கருவறை வெளி மண்டபத்தை அடையலாம்.
அகத்தீஸ்வரர் கொலுவிருக்கும் கருவறை கிழக்கு நோக்கியுள்ளது. கருவறை வாயிலுக்கு இடப்புறம் வரிசையாக மூன்று கணபதியை உட்கார்ந்த நிலையில் தரிசிக்கிறோம். அடுத்து நின்றநிலையில் ஒரு விநாயகரையும் வாயிலுக்கு வலப்புறம் முருகனின் ஒரு கோலமான பிரம்ம சாத்தன் என்ற வடிவையும் தரிசிக்கிறோம். அவரையடுத்து வள்ளி தெய்வயானையுடன் கூடிய அழகிய ஆறுமுகப் பெருமானை நாம் வணங்கலாம். இக்கோயிலின் தலமரம் வில்வமரம்.
கருவறை (அகஸ்தீஸ்வரர்):-
கருவறைக்கு வெளியே காவல்புரியும் துவார பாலகர்கள் அனுமதியோடு கருவறைக்குள் புகுந்தால் அப்பன் அகத்தீசனை கண்குளிர தரிசிக்கலாம். இவர் சுயம்பு மூர்த்தி. இவக்கு இங்கு எண்ணெய் அபிஷேகம் கிடையது. இங்கு சதுர ஆவுடையார் இல்லை. வட்ட வடிவம். சிவலிங்க மூர்த்திக்குப் பின்புறம் கற்சிலை வடிவில் ஈசனையும் அம்பிகையையும் தரிசிக்கிறோம். அகஸ்திய ருக்கு திருமணக் காட்சி கொடுத்ததால் இக்கோலத்தை நாம் காணமுடிகிறது. இது ‘உமாமகேஸ்வர வடிவம்’ என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
திருமணம் கைகூடும் தலம்:-
திருமணமாகாத கன்னியர் இத்தகைய கோயில்களில் முறைப்படி வழிபட்டு இந்த ‘உமா மகேஸ்வர’ கோலத்தைத் தரிசித்தால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நிச்சயம். அந்தக் காலங்களில் திருமணங்களில் ‘கௌரி கல்யாணம் வைபோகமே’ என்று பாட்டுப் பாடுவார்கள். இப்பொழுதெல்லாம் வேறு ஏதோ பாடல்களைப் பாடுகிறார்கள், அல்லது வேண்டாத விஷயங்களைப் பேசுகிறார் கள், சாப்பாட்டிற்கு இலை போட்டால் இடம் பிடிக்க ஓடுகிறார்கள். இதுபோன்ற அவலநிலை.
சிவன் பார்வதிக்கு ‘ஆதிதம்பதியர்கள்’ என்று பெயர். ஆகையால் தான் கல்யாணங்களில் அந்த தம்பதியரை நினைவுபடுத்தும் வகையில் ‘கௌரி கல்யாணம்’ பாடப்படுவது வழக்கம். இக்கோயிலில் ‘பங்குனி உத்திரத்தன்று’ ஈசனுக்கும் அம்பிகைக்கும் முறைப்படி திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
ஸ்ரீ தெய்வநாயகி அம்பிகை சந்நிதி:-
ஈசனை தரிசித்து விட்டு வெளியே வந்தால் தெற்குப் பார்த்த நிலையில் அன்னையின் சந்நிதியைத் தரிசிக்கலாம். அன்னை ஸ்ரீ தெய்வ நாயகியின் அருட்காட்சி நம் குறைகளையெல் லாம் போக்கும்.
பிராகாரம்:
கோயிலின் வெளிச் சுற்றில் முதலில் கல்யாண மண்டபமும், அதையடுத்து வலம்புரி விநாயகரும், வீரபத்திரரையும் தரிசிக்கலாம். நந்தி மண்டபம், பலிபீடம், கொடிமரம் ஆகியவை கருவறைக்கு கிழக்கே உள்ள பிராகாரத்தில் அமைந்துள்ளது.

குடமுழுக்கு:
கடந்த 30.8.2004 அன்று இக்கோயிலுக்கு சீரும் சிறப்புமாக குடமுழுக்கு நடைபெற்றது. புராணப் பெருமையும் கலைச் சிறப்பும் கொண்ட இக்கோயிலின் குடமுழுக்கை தனியார் நிறுவன மான டி.வி.எஸ் நிறுவனம் பெருமையுடன் மேற்கொண்டது. அவர்களுக்கு என் நன்றியைக் காணிக்கை யாக்குகிறேன்.
முடிவுரை:
ஒரு காலத்தில் இத்திருத்தலம் சீரும் சிறப்புமாக இருந்தது. இன்று வெறிச்சோடிக் கிடக் கிறது. கோயிலைப்பற்றிய பெருமைகள் மக்களைச் சேராததே இதற்குக் காரணம். இங்குப் பல கோயில்கள் இருந்ததாகத் தெரிகிறது. காலவெள்ளத்தில் சிதைந்த கோயில்களின் தெய்வங்கள், இக்கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் வெட்டவெளியில் காணப்படுகின்றன. சப்த மாதாக்களின் வடிவங்கள் அவற்றில் முக்கியமாக குறிப்பிட வேண்டியுள்ளது. ஏரிக்கரையில் வெட்ட வெளியில் பெருமாள் சிலை காணப்படுகிறது. இது பல்லவர் கால கோயிலாகத் தெரிகிறது. இந்த பொக்கிஷத்தை அடுத்த, அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் சென்று காப்பாற்ற வேண்டியது நம் கடமை.

மஹேந்திரவாடி உமாசங்கரன்

எழுதியவர் : (27-Jun-17, 8:00 am)
பார்வை : 68

சிறந்த கட்டுரைகள்

மேலே