துளிகள்

துளிகளோடு தான் என் வாழ்வின்

கொண்டாட்டங்கள் ஆரம்பித்தன.

அவள் துணி எடுக்கும் போதெல்லாம்

கதறிக் கை பிடித்துக்கொள்வேன்.



அவள் அள்ளி எடுத்து கட்டிக்கொள்வாள்.

முதுகிலே என்னையும் , இடையிலே துணியையும்

ஆற்றங்கரை அடையும் வரை

எனக்கு ஆனந்த சவாரி



அள்ளி எடுத்துவந்த அத்தனை துணியையும்

ஆற்றில் போட்டு அடித்து துவைப்பாள்

நீர்த்துளிகள் என் முகத்தில் பட்டு தெறித்துச்சிந்தும்

அவை தான் என் அதியுச்ச கொண்டாட்டம்



ஆயிரம் துளிகள், லட்சம் துளிகள்

என என் ஆசைகள் முடிவிலியாய் இருந்தது

அவளுக்கு பின் என் ஆசைகள், கொண்டாட்டங்கள்

அனைத்தும் வெறுமையால் நிரம்பியிருந்தது



அவள் மட்டும் கண் கடந்து கீழே விழுந்து

சிதறும் துளிகளை வெறித்து பார்க்கிறாள்

துளிகளோடுதான் அவள் வாழ்வின்

துயரங்கள் அனைத்தும் ஆரம்பித்தன.

எழுதியவர் : யதுசரணன் (3-Jul-17, 3:01 pm)
சேர்த்தது : யதுசரணன்
Tanglish : thulikal
பார்வை : 109

மேலே