வான்மழை தாராயோ---இணைக்குறள் ஆசிரியப்பா---

இணைக்குறள் ஆசிரியப்பா :



வான்முகில் பூமழை வாசலில் பொழிந்து
தேன்மலர் அவிழும் எழிலில்
வண்டி னங்களும் மயங்கி
பண்ணெ ழுப்பியே பறந்திடும்
சோலை வனத்தில்
நீலக் குயிலின்
இன்னிசை ராகமும்
மென்தளி ரசைந்து மிதக்கும் காற்றிலே...


விதைநெல் முளைத்து விண்ணை நோக்கிடும்
புதைந்த மரவேர் புத்துயிர்
அடைந்திளம் தளிருடை அணிந்திடும்
படையென எழுந்திடும் பசும்புல்
வரையா டுமேய்ந்திடும்
இரையாய் ஆகிடும்
பொய்கைநீர் நிறைந்து
நெய்தலும் கமலமும் நெருங்கியு றவாடுமே...


கதிரோன் வீசிடும் கடும்வெயிற் தணிந்து
விதியின் சாபம் விலகிட
வண்ணம் பொங்கிடும் வாழ்வோ?...
கண்களில் மறையுதே கானலாய்ச்
சாலை எங்கிலும்
பாலை நிலமாய்ப்
பாதஞ் சுடுதே
கூதிர்க் காலமும் கோடையை விஞ்சுதே...


கலைமான் பசியில் கானகம் வறட்சியில்
உலையெனக் கொதித்து ருகிடும்
உலகெலாம் இந்நிலை ஓங்கினால்
உலவிடும் உயிர்களோ?... உறங்கிடும்
வருண தேவனே
கருணைப் புரிந்திடு
நின்னருள் மழையிலே
இன்னலும் தீர்ந்தே இயற்கையும் செழிக்குமே...

எழுதியவர் : இதயம் விஜய் (3-Jul-17, 6:30 pm)
பார்வை : 926

மேலே