பெண்ணின் தாய்மை

எண்ணத்தில் நின்ற
எழுதிய கவிதைகள்
எண்ணிய பொழுதில்
என் தோழி
சொல்லிய தலைப்பில்
திண்ணிய எழுத்துக்கள்
பதித்திட நானும்
மறந்தது ஏனோ!!
நூறு கவிஞர்
கோடிக் கவிதை
தாய்மை மீது
சொன்ன பின்னே
புதுமையாக அருமையான
தாய்மை மீது என்ன சொல்ல
என்று எண்ணி நின்றேன்
தூவானச் சாரல்
ஓரம் நின்ற என் மேல் தீண்ட
கண் சிமிட்டிடும் நொடியில்
புயலும் இடியும் மழையும்
முக்கோணக் காதல் கொள்ள
மழைதுளிக் காண மக்களும் கூட
நிழற்குடை உள்ளே சில பேர்
மழைக்குடை விரித்துச் சில பேர்
இத்தனை நிகழ்வுகள்
என் ஓரம் நடக்க
தூரம் திரும்பிய என் விழிகள்
கண்டதோ உலகமறிந்த
ஒரு உண்மை உறவு !!
வறுமையின் அடிமை பெண்ணொருத்தி
தகரத் தட்டை மழைக்கு
குடையாய் கொண்டு
தன் புதல்வனை மழைத்துளி
சீண்டிடா வண்ணம்
தாயவள் அடைகாக்கும் காட்சி
கண்டு கொஞ்சம் மகிழ்ந்தேன்
தனிக்கவிதை எழுத தேவையில்லை
"பெண்ணின் தாய்மை" ஒரு வரிக் கவிதை என வியந்தேன்!!!

எழுதியவர் : நிரஞ்சன் (11-Jul-17, 5:53 pm)
சேர்த்தது : நிரஞ்சன் பாபு
Tanglish : pennin thaimai
பார்வை : 55

மேலே