காய்ந்த நிலம்

ஒளிரும் மின்னல் கீற்றோடு - புது
****மேளங்கள் தாளங்கள் இசைக்க
குளிர்ந்த காற்றின் விசையோடு - கூடும்
*****கருமுகில் மழையினைப் பொழிந்திட
தெளிந்த நீரோடையாய் உருவாகி - இந்தத்
*****தரணி எங்கும் பாய்ந்தோட
துளிர்க்கும் பசுந்தளிர் இலைகள் - இன்று
*****சருகாய்க் கோலம் பூணுதே...


செங்கதிர் கடுமனல் உமிழ்ந்து - தேங்கும்
*****நீரும் வான்நோக்கிச் சென்றிட
செங்கமலம் தரைதனை முத்தமிட்டு - நீந்தும்
*****மீன்கள் காணாமல் போகிட
கங்கை கரையினைத் தழுவிடும் - கவின்
*****துள்ளும் காட்சி கானலாகி
புங்கையும் மலர்ச்சி இழந்து - எரியும்
*****அடுப்பிற்கு விறகாகிப் போனதே...


ஆற்றின் வரிசையில் வாகனங்கள் - அள்ளிச்
*****செல்லும் மணல் கொள்ளையில்
சேற்றின் ஈரம் உலர்ந்து - விதைத்த
*****நெல்லும் வீணாகிப் போகையில்
வேற்று வழிகள் இல்லாது - ஏழை
*****உழவன் விதையாக விழுந்திட
மேற்றிசையில் மறைந்திடும் கதிரோன் - தினம்
*****விழித்தும் விடியல் இல்லையே...


விளைந்த நிலங்கள் வெடித்து - நுழையும்
*****இருண்ட குகையாய்க் கிடக்க
வளர்ந்த பயிர்கள் கறுத்து - இரவு
*****வானின் நிலவற்ற விம்பமாக
களர்பூமி தாகத்தால் கூச்சலிட்டு - பார்க்கும்
*****விழிகள் நீரை வடிக்க
தளிராடை களவு கொடுத்து - இங்கு
*****நிலமகள் நிர்வாணமாய் நிற்கின்றாளே......



01 /02 /2017 அன்று தங்கையின் பள்ளி ஆண்டு விழாவிற்கு எழுதியது...

எழுதியவர் : இதயம் விஜய் (15-Jul-17, 8:38 am)
Tanglish : kayntha nilam
பார்வை : 1831

மேலே