நினைவுச் சின்னங்கள்

பாசி படர்ந்த பழைய கிணறு
வழிந்து நிரம்பியது ஒருகாலம் !
அடிப்பட்ட தழும்பாய் இடிந்த நிலை
தலைமுறை கடந்து தகவலே இன்று !

தெரிந்த படிகள் மண்ணில் மறைய
விரிந்து நிறைந்த ஏரிகள் குளங்கள் !
புரிந்த மனங்களுக்கு புனிதம் தெரியும்
வரிந்துக் கட்டிய மாளிகைகள் இன்று !

தொழுத மாடுகள் தொலைந்துப் போனது
தொழுவம் வைத்து வளர்த்து வந்தனர்
பழுத்த பசுக்களும் பாலைத் தந்தன
எழுத்தில் மட்டுமே எங்கும் காணலியே !

தோட்டம் அமைக்க நாட்டம் காட்டி
நட்டமே காணாத காலமும் இருந்தன
உடலுக்கு வலிவூட்ட உண்பதற்கு உதவின
ஆரோக்கிய வாழ்வுடன் ஆயுளையும் கூட்டின !

கூடிப் பேசிட தெருக்கோடி மரங்களும்
அன்புடன் அளவளாவ ஆற்றங் கரையும்
எண்ணங்களை பரிமாற திண்ணை வசதியும்
சிறந்து விளங்கியதும் சிதைந்து போனது !

நினைத்துப் பார்த்தால் நீர்த்துளியும் விழுது
பழங்கால வாழ்வே வளமான வாழ்வானது
நிகழ்காலம் கண்டு நிம்மதியும் பறிபோனது
எதிர்காலம் நினைத்து வருத்தம் மேலோங்குது !

பழனி குமார்
17.07.2017

எழுதியவர் : பழனி குமார் (17-Jul-17, 9:23 am)
பார்வை : 315

மேலே