இந்தித் திணிப்பு- நேற்று இன்று நாளை

ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் இந்திப் பாடல்கள் மிகவும் குறைவு என்று சொல்லி இந்தி பேசுபவர்கள் கடுப்பாகி ட்வீட் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் இல்லையா? இந்தி பேசும் மக்கள் பலர் வாழும் பெங்களூரில் பல ஆண்டுகளாக வாழ்பவன் என்ற முறையில் இதை என்னால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. இங்கு மட்டும் இல்லாமல், பொதுவாக இந்தி பேசுபவர்களுடனும் பல ஆண்டுகளாகப் பழகிவருகிறேன். அவர்களின் கொள்கை ஒன்றே ஒன்றுதான். ‘அண்டார்க்டிகாவுக்கே குடிபெயர்ந்தாலும், நான் இந்தி மட்டுமேதான் பேசுவேன்; அந்த ஊரின் மொழியைக் கற்க மாட்டேன்; என் சக இந்திக்காரர்களுடன் மட்டுமேதான் பழகுவேன்; என்னைப் பொறுத்தவரை இந்தியைத் தவிர பிற மொழிகள் அனைத்துமே கீழானவையே; அந்த ஊரின் மொழியைப் பற்றிக் கேவலமாகவும் அவ்வப்போது பேசுவேன்’ இதுதான் அவர்களின் கருத்து.

இவர்களில் ஒருசில விதிவிலக்குகள் உண்டு. ஆனால், பெரும்பாலானவர்கள் இப்படியேதான் பழகுகிறார்கள். பெங்களூருவைப் பொறுத்தவரை, என்னிடம் யார் இந்தியில் பேசினாலும் பதிலுக்குத் தமிழில் பேசுவது என் வழக்கம். அதிர்ச்சியடைந்து, இந்தி தெரியாதா என்று கேட்பார்கள். நான் பதிலுக்குத் தமிழ் தெரியாதா என்று கேட்பேன். தெரியாது என்பார்கள். எனக்கும் இந்தி தெரியாது என்று சொல்லிவிடுவேன் கர்நாடகத்தில் வாழும் மக்கள் பலருக்கும் இந்தி பேசுபவர்களைப் பிடிக்காது. ஈகோதான் காரணம். கர்நாடகமாவது பரவாயில்லை. இந்தி பேசினால் வேலை நடக்கும். ஆனால், தமிழகத்தில் இந்தி பேசுவதெல்லாம் கொடுமை. பல உணவகங்களில் இந்தி பேசும் சர்வர்கள். நாம் பேசும் தமிழ் அவர்களுக்கு ஒன்றுமே புரியாது. தமிழைக் கற்கவும் மாட்டார்கள். ஆனால், நாம் வடநாடு சென்றால் இந்தி கற்றுக்கொண்டு இவர்களுடன் இந்தியில்தான் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்!

ஒரு இசை நிகழ்ச்சியில், அதுவும் தமிழில் ‘நேற்று இன்று நாளை’ என்று பெயர் வைத்த நிகழ்ச்சியிலேயே இந்திப் பாடல்கள் பெரும்பான்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பைக் கிளப்பும் இவர்களுக்குப் பின்னால் இப்படிப்பட்ட மிகப் பெரிய விஷயம் இருக்கிறது. இவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை. தென்னிந்தியா எங்கும் இந்தி பரவிவிட்டது. ‘ஆஸ்ட்ரிக்ஸ்’ கதையில் வரும் மிகச் சிறிய கிராமமான ‘கால்’ மட்டும்தான் மாபெரும் ரோமப் பேரரசின் அடக்குமுறையை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கும். அப்படி, தமிழகம் மட்டும்தான் தென்னிந்தியாவில் இன்றும் இந்தித் திணிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறது.

கருந்தேள் ராஜேஷ்


Close (X)

0 (0)
  

மேலே