தேடுதலும் – புரிதலும்

என் எழுத்துலக நண்பர் மங்காத்தா அவர்களுடன் உரையாடிக்கொண்டு இருந்த பொழுது, அவரின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டு அதை என் வரிகளில் சொல்ல முயற்சித்த கவிதை.

தேடுதலும் – புரிதலும்


பிரபஞ்சத்தின் தொடக்கத்தை
புரிந்து கொண்டு விட்டேன்.

பகுத்தறிவை அணு அணுவாய்
தெரிந்து கொண்டுவிட்டேன்.

காரியத்தின் காரணத்தை
அறிந்து கொண்டு விட்டேன்.

இயக்கத்தின் சூட்சுமத்தை
உணர்ந்து கொண்டு விட்டேன்.

என் வாழ்க்கையை நானும்
வாழ்ந்து முடித்து விட்டேன்.

வாழ்க்கையின் சாராம்சத்தை
படித்தும் விட்டேன்.

மீதமுள்ள வாழ்க்கையை
ரசித்துக் கொண்டு இருக்கிறேன்.

சூனியத்தில் ஐக்கியமாகி
திரும்பியும் விட்டேன்.

அங்கு நடக்கும் சகலத்தையும்
ஆராய்ச்சி செய்தும் விட்டேன்.

ஆதி மூலம் எதுவென்று
நெருங்கிப் பார்த்தும் விட்டேன்.

என் புரிதலை பகிர்ந்து கொள்ள
உங்களை நாடுகின்றேன்.

ஏனோ தெரியவில்லை
ஒருவரும் கிடைக்கவில்லை.

மமதை என்று தவறாக
என் மீது முத்திரை குத்தாதீர்.

நான் எனும் நான் உங்களைப் போல்
சாதாரண நானாகவே இருக்கின்றேன்.

என்னிலிருந்து என்னை தனியே
அகற்றிவிட்டு,

உங்களை என்னுள் நானும்
பொருத்திக் கொண்டு,

உங்களுடன் பழகுகிறேன்

நீங்களும் ஆமோதிக்கிறீர்
நான் சராசரி மனிதன் என்று.

இந்த விந்தையை என்னவென்று
சொல்லுவது.

என்னை நான் எப்படி
உலகுக்கு காட்டுவது.

ஒரு சிலர் என் கருத்தை
உள் வாங்கிக் கொண்டாலும்,

நீ சரியாய் சொன்னாய் என்று
யாரும் இதுவரை சொன்னதில்லை.

ஏன் இந்த முரண்பாடு

குற்றம் அவரிடமா, பிழை என்னிடமா ?

என் புரிதலின் வீரியத்தை
முடிந்த அளவு மென்மையாக்கி

சகலருக்கும் போதிக்க
வழி தன்னை தேடுகின்றேன்.

என்னால் அது முடியும் என்று
எனக்கு நானே சொல்லுகின்றேன்.

என் எழுத்தின் உள் அர்த்தத்தை
எவரேனும் புரிந்து கொண்டால்,

விரைந்து வந்து தோள் கொடுங்கள்,

சேர்ந்தே பயணிப்போம்
சகலத்தையும் விவாதிப்போம்.


தேதி – 18.02.2014 நேரம் - மதியம் 3.10 மணி

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (18-Jul-17, 10:22 pm)
பார்வை : 59

மேலே