எனக்குப் பிறந்தநாள்

அந்த இடம் இருளில்
மூழ்கித்தான் கிடந்தது..
இருந்தும் ஒளிக்குப்
பஞ்சமிருக்கவில்லை...

சுற்றி இரத்த ஆறுகள்
ஓடிக்கொண்டுதான் இருந்தன
என்றாலும் வன்முறைகள்
நான் கண்டதேயில்லை...

கைகால் குறுக்கி - நான்
சுருண்டு தான் கிடந்தேன்...
ஆயினும் என் வளர்ச்சிக்கு
பங்கமேதும் வரவில்லை...

நாலாபக்கமும் உலகம்
விரிந்து கிடக்கவில்லை
என்றாலும் செல்வத்தில்
எனக்கெந்த குறையுமிருக்கவில்லை...

அங்கே ஏமாற்ற என்று
எவரும் கங்கனம் கட்டி
அலையவில்லை...

பச்சோந்திகள் கூட்டம்
பாதை வழி திரிந்து
வேஷம் போடவில்லை...

பொறாமைத் தீயில் - என்
பூவுடம்பு காயப்பட்டதாய்
எந்தப் பதிவுகளுமில்லை...

ஆசைச் சுழலில் சிக்கி
மோசம் போனதாக
எந்த நினைவுகளுமில்லை...

உடனிருந்து அழிக்கும்
கோபமென்னும் கயவனை
அங்கே நான் சந்தித்ததேயில்லை...

சோகத்தின் நிழல் கூட
என் சின்ன உடலில் படிந்து
கருமை சேர்க்கவில்லை...

கண்ணீர்க் கரைகள் காய்ந்து
என் கன்னத்தில் - சிறு
தழும்பேனும் தந்ததில்லை...

என் தாய் விரலின் - சுகமான
தொடுகையில் - பாசமன்றி
பாசாங்கு இருக்கவேயில்லை...

அந்தக் கருவறையின்
இளம் சூடு - குளிர்வித்தென்னை
என்றுமே சுட்டதில்லை...

எல்லாம் கிடைத்தன என்று
சோம்பிக்கிடக்கும் ஆசையல்ல...
சுவர்க்கத்திற்கும் சோம்பலுக்கும்
எத்தனையெத்தனை வித்தியாசம்!..

அங்கு காணாத கடுமை
என்று நீ என்னை - இந்த
பூமியில் பிரசவித்தாயோ
அன்று கண்டுகொண்டேன்...

அந்த பரிசுத்த பூமியை
மீண்டொருமுறை தரிசிக்கும்
வரம் ஒருபோதும் வாய்க்காதோ?..

என் அன்னையின் கருவறை
இனியொரு முறை - என்னை
சுமந்தால் எத்தனை சுகம்!!..

இறைவா...
இப்பொழுதே கட்டளையிடு
அந்நாட்களையொத்த வரம்
என் வாழ்வில் இனியும் கிட்ட!

வானவில்லாய் வர்ணம் காட்டும்
இந்த பூமியின் பகட்டிலும்
என் அன்னையின் கருவறை
என்றென்றும் புனிதமே!..

என் அம்மா - ஒரு
ஜென்மம் கொண்டு - அதிலே
மறுஜென்மம் கண்டநாள்...
எனக்குப் பிறந்தநாள்!!!..

10.02.2017

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 2:03 pm)
பார்வை : 51

மேலே