நானொரு சாமானியனே

​நிறைவேறா ஆசைகள் ஆயிரமுண்டு
--நிறைவேற நினைக்கும் நெஞ்சமுண்டு !
நிறைவேற்றத் துடிக்கும் எண்ணமுண்டு
--நிறைவேறிட பாதை வகுப்பதுமுண்டு !

பணிபுரிந்த நாட்களை நினைப்பதுண்டு
--பணியோடு பின்னிப் பிணைந்ததுண்டு !
பணிசெய்த இடங்கள் நினைவிலுண்டு
--பணிக்கால சுகங்கள் நெஞ்சிலுண்டு !

மகிழ்ந்தத் தருணங்கள் மறப்பதில்லை
--மகிழ்ந்தப் பொழுதுகள் அளவில்லை !
மகிழ்ந்திட்ட நிகழ்வுகள் நீடிக்கவில்லை
--மகிழ்ந்த காலங்கள் திரும்பவில்லை !

விருப்பங்கள் நிறைந்தது எனதுள்ளம்
--நடக்குமா நிச்சயம் என்வாழ்வில் !
மறுக்கவில்லை நானும் சராசரிதானே
--பிறப்பிலும் நானொரு சாமானியனே !

சாதிமதங்கள் மறைந்திட வேண்டும்
--சமூகநீதி தழைத்திட வேண்டும் !
இல்லாமை ஒழிந்திட வேண்டும்
--இன்பமே நிலைத்திட வேண்டும் !

பகுத்தறிவோடு பண்பும் இணைந்து
-- நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லவராய்
ஈரநெஞ்சுடன் இனமான உணர்வுடன்
--தமிழரெனும் தனித்துவமாய் வாழ்க !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (22-Jul-17, 3:14 pm)
பார்வை : 348

மேலே