நிலா வெளிச்ச கீற்றாய்

நிலவென்று சொல்லி
என்பின்னால் தேய்ந்தவனே...
நானல்லடா நிலவு,
முட்தாடிக்குள் புதையுண்ட
உன் முகம்தானடா
முழு நிலவு...

கல்லாய் கிடந்த
என் மனதை,
மூன்றாம் பிறையென தெறிக்கும்
முத்துப்பல் சிரிப்பால்
முட்டிப் பார்த்தவனே...

குறுவாள் மீசைகொண்டு
குழைகின்ற என்இடுப்பை
குறும்பாய்
கீறிச் சென்றவனே...

உன்னை நான்
நிலவென்றதும்,
உன் முல்லைபூ பாதம்
இந்த நிலவில் பதியட்டுமென்று
என் வெண்பாதம் பற்றி
நெற்றியில் இட்டவனே...

இப்போது
எங்கேயடா மறைந்தாய்,
தினம் உன்நினைவில்
உயிர் தேய்ந்து,
காத்திருக்கிறேன்
கண்ணாளா ...
அடர்ந்த என் இருளில்
எப்போது நீ வருவாய்
நிலா வெளிச்ச கீற்றாய்...

எழுதியவர் : பனவை பாலா (25-Jul-17, 10:38 pm)
பார்வை : 95

மேலே