நீயும் நானும்

=============
நான் அரசாங்க மருத்துவமனை
நீ தனியார் மருத்துவமனை .

உன்னை அவசர ஊர்தியில்
கொண்டுபோய் சேர்த்தார்கள்.
நான் அரச பேரூந்தில்
சென்று சேர்ந்தேன்.

உனது சிகிச்சைக்கு காசு
தண்ணீராய் செலவளிக்கப்பட்டது
நானோ தண்ணீர் கொண்டுவந்து
கொடுப்பதற்கும் நாதியற்றுத் தவித்தேன்.

முடிவில்
சிகிச்சைப் பலனின்றி நீயும்
சிகிச்சைக்கு பணமின்றி நானும்
ஒரே நாளில் மரணித்தோம்.

உன்னை உயர் மரியாதையுடன்
எடுத்துச் சென்று எரிக்க
என்னை நாலுபேர் சுமந்து சென்று
புதைத்தும் விட்டார்கள்.

மின்சாரம் எரித்த உன் அஸ்தியை
கங்கையில் கலந்துவிட்டு
கைகழுவி போனவர் போக
உன் அஸ்தி கரைந்த இடத்தில்
நீ ஆவியாய் உலவுவதாக
ஊரே ஒதுங்கிச் செல்கிறது

என் சவக்குழியில் யாரோ
மரக்கன்று நாட்டி கைகழுவிவிட்டு
போய்விட்டார்கள்.
நான் அந்த கன்றுக்கு உரமானேன்.
மரமான அதன் கிளைகளில்
இப்போது பறவைகளை கனிகளுண்டு
இளைப்பாறி செல்கின்றன.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (30-Jul-17, 10:14 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : neeyum naanum
பார்வை : 210

மேலே