உனக்கென காத்திருக்கும் உயிரூஞ்சல்

மெல்லத் தொடங்கும்
தூறலைப் போல
சன்னமாய்
மோதிக் கரைகிறது
உன் நினைவின் துளிகள்

மௌனத்தின் அடர்வனத்தில்
நீ
மறைந்துகொண்டிருந்தாலும்
என் உணரிகளின்
எல்லைகடந்து
எங்கே போய்விடுவாய் ?

நீள் தனிமையில்
இரவின் நொடிகளை
எண்ணிக்கொண்டிருக்கும்
உனக்குள் நானில்லையா ?

எனக்காய் சுடர்வதென்று
முடிவுசெய்தபின்
அன்புத் தீக்குச்சிக்கு
தலைநீட்ட மறுப்பதேன்
திரியே ?
எண்ணெய்க்குள் மூச்சடக்கி
எத்தனை நாள் தவமிருப்பாய் ?

உன்னைச் நோக்கி
நிரந்தரமாய் நீண்டிருக்கும்
என் அன்பழைப்பு
உன்
வருகைக்காக காத்திருக்கும்
என் உயிரூஞ்சல் !

#மதிபாலன்


Close (X)

8 (4)
  

மேலே