ஓயாத ஓடல்

வீண் பொழுதுபோக்கில் கழியும் நாட்களை தத்துவார்த்த வார்த்தைகளோடு கழிக்கும் இன்பத்தை இயம்பிடவொரு வார்த்தையுமின்றி நான் பெற்ற அவ்வின்பத்தை உலகத்தாரும் பெறவே எழுதுமென் எண்ணம் புரிந்தவர் யார்?

தமிழில் ஓராயிரம் நூல்களிருப்பினும் புனிதமென்னும் அன்பின் வழியாய் பெருங்கருணையை விளக்கும் நூல்களிலே சித்தம் ஈடுபட நெருங்கிய நண்பர்களுமென்னை பைத்தியமென்கிறார்களே..

தாரை தாரையாய் ததும்பிடும் கண்ணீர் துடைக்க இருகைகளிருந்தும் மனமில்லாதவனாய் எழுத்துகளிலேயே எனது இருதயத்திற்குத் தேறுதல் தேடும் நானொரு ஞானசூனியமாமே.

புத்திநாஷத்தை அடியோடு தடுக்கச் சுற்றத்தின் வழி மனம் செல்லா வண்ணம் வாழ்வின் பெரும் காப்பியங்களையெல்லாம் ஒன்று திரட்டிப் புரட்டிக் கொண்டு வேதங்களையும் ஓதி வேதாந்தியுமானேனோ?
தேன்தமிழே பதில் சொல்வாய்,
நானென்ன பைத்தியமா??

நான் யாரென்ற தேடலில் தொடர்ந்து பல விடைகள் கிட்டினாலும் தேடல் மட்டும் முடிவின்றி தொடர்ந்துக் கொண்டே செல்கிறதே.
துன்பங்கள் தரும் பாடம் ,
பரிகாசிக்கும் மாந்தர்கள்,
உலகமென்ற பந்தில் சுழம் பம்பரமாய்,
என்னை சுழற்றும் அந்தச் சாட்டை எங்குள்ளதென்ற தேடலும் தொற்றிக் கொள்ள என்றும் எனது சிந்தனை ஓயாத ஓடலிலேயே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (8-Aug-17, 9:29 pm)
பார்வை : 730

மேலே