நிழலில் தோற்கும் நிஜங்கள்

நிலாப்ரியாவுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று தெரியாவிட்டால் தலை வெடித்துவிடும் போலிருந்தது பிரசன்னாவுக்கு .
நிலாப்ரியா !என்ன ஒரு வசீகரமான பெயர் .அந்தப் பெயரைப் பார்த்தாலே ஆகாயத்தில் பறப்பதை போலிருக்கும் .
இணையத்தில் அவள் கவிதைகளை வாசித்திருக்கிறான் .எதேச்சையாகப் படிக்கத் தொடங்கியவன் அவளது தீவிர ரசிகனானான் .அவள் கவிதைகளுக்கு முதல் ஆளாய் விருப்பம் தெரிவிப்பான் .வித்யாசமான கருத்துகளும் பதிவிடுவான் .
அவள் படைப்புகளில் ஒர் இனம்புரியாத ஈர்ப்பு இருந்தது அவனுக்கு .
நண்பர் விண்ணப்பம் அனுப்பினான் .சிலநாள் காத்திருப்புக்குப் பின் அவள் இவனது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டாள் .மகிழ்ச்சியின் உச்சிக்கே போனான் .
இருவரும் கவிதை ,இலக்கியம் என்று உரையாடத் தொடங்கினார்கள் .இடையே தனிப்பட்ட சில விஷயங்களும் பரிமாறிக்கொண்டார்கள் .நட்பு இறுகியது .
ஒருநாள் அவளுக்குத் "திருமணமாகிவிட்டதா" என்று சற்று தயக்கத்துடனேயே கேட்டான் பிரசன்னா .
இரண்டுநாள் எந்தப் பதிலுமில்லை .தவித்துப் போனான் .
மூன்றாம் நாள் அவளிடமிருந்தது பதில் வந்தது .
"இன்னும் ஆகல .உங்களுக்கு ?"
"எனக்கும் ஆகல ",என்று பதில் அனுப்பினான் .
நிலாப்ரியா தன் மனைவிதான் என்று அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை .

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (9-Aug-17, 3:02 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 417

மேலே