அந்திவேளை கவிதை

உன் மென் விரல்கள் மயிலிறகாய் மாறுகின்றன
என் மேனியெங்கும் ஊர்வலமாய் போகின்றன

என்னில் விரல் தூவலால் சிறுசிறு ஓவியங்கள் வருகிறாய்
அதில் ஆசைகள்கொண்ட ஆவலால் வண்ணங்கள் தீட்டுகிறாய்

தூங்கி கிடந்த அணுக்கள் எல்லாம் மெல்ல எழும்பி பார்க்கின்றன
ஏங்கி தவித்த இளமை திகட்டாத இனிப்பை சுவைக்கத் தொடங்குகின்றன

விடுத்த அன்பின் அம்பு தாளாமல் என்நாணங்கள் தோற்று போகின்ற்றன
தடுத்த நாணம் புறமுதுகிட்டு ஒளிந்து கொள்ள அறை மூலையை தேடுகின்றன

யாருமில்லா காட்டில் நீ என் ஆதாம் ஆகினாய்
எவருமறியாமல் இவ்வீட்டில் என்னை ஏவாள் ஆக்கினாய்

இலைகள் கூட வேண்டாம் என்றோம்
இருள்மட்டும் மூடி கிடந்தோம் நாம்

துகில் இல்லா உருவை தீண்டிய தூரிகைகளால் தேவதை ஆகிறேன்
முகில்பின் செல்லும் பறவை ஆகி உன் பின்னால் தானே வருகிறேன்

விழிமூடி சாய்ந்தேன்
கவிபாடி கலந்தாய்

இருளில் என் அதிசய நிழலானாய்
இதழில் தேன் சுரக்க செய்தாய்

சாலையில் தடுக்கிய பள்ளமாய் எனக்குள் வந்து விழுகிறாய்
தொலைக்காமல் தொலைத்தாற்போல எதையோ ஆழமாய் தேடுகிறாய்

பாலையில் நீரை தேடி அலையும் ஒட்டகமாகிறது உன் தாகம்
சோலையில் நீர் சுரக்கும் இன்ப ஊற்றாகிறது என் தேகம்

அந்திவேளையில் அழகாய் தொடரும் அந்தப்புர கதை
அந்தவேளையில் அழகாய் இருஉயிர் எழுதும் கவிதை..!!!

எழுதியவர் : யாழினி வளன் (12-Aug-17, 8:02 pm)
பார்வை : 257

மேலே