பல்மீனும் மதியம்போல் நிலாக்காய்கலா ஆகும் - பழமொழி நானூறு 47

இன்னிசை வெண்பா

ஆயிரவ ரானும் அறிவிலார் தொக்கக்கால்
மாயிரு ஞாலத்து மாண்(பு) ஒருவன் போல்கலார்
பாய்இருள் நீக்கும் மதியம்போல் பல்மீனும்
காய்கலா ஆகும் நிலா. 47 - பழமொழி நானூறு

பொருளுரை:

பரவிய இருளைப் போக்கும் சந்திரனைப் போல, பல விண்மீன்கள் ஒன்றுகூடினும் நிலவைப் போன்ற ஒளியைத் தர இயலாது.

அதுபோல, அறிவு இல்லாதவர்கள் ஆயிரம் பேர் திரண்டனராயினும் பெருமையை உடைய பெரிய இவ்வுலகில் அறிவினால் மாட்சிமைப்பட்ட ஒருவனைப்போல் விளங்கார்.

கருத்து:

அறிவிலார் பலர் திரண்டாலும் அறிவுடையான் ஒருவனை ஒவ்வார்.

விளக்கம்:

பல நட்சத்திரங்கள் திரண்டாலும் ஒரு சந்திரனைப் போல் உலகிற்குப் பயன்படாமை போல, அறிவிலார் பலர் திண்டாலும் அவரால் உலகிற்குப் பயன் ஒரு சிறிதும் இல்லையாகும்.

'பல்மீனும் மதியம்போல் நிலாக்காய்கலா ஆகும்' -இஃது இச் செய்யுளிற் கண்ட பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Aug-17, 3:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 58

மேலே