சராஹா

சராஹா

=====================================ருத்ரா



ஒரே ஒரு ஊரில்

ஒரே ஒரு கம்பியூட்டர்.

அது எல்லாவற்றையும் தின்றது.

அறிவும் கொழுத்தது.

உலகத்துப் பல்கலைக்கழகங்கள்

எல்லாம்

அதற்குள் ஜீரணம்.

அந்த கூகிள் யுனிவெர்சிடியில்

ஆக்ஸ்ஃபோர்டு அகராதிகள் கூட‌

அற்பம் ஆனது.

குவாண்டம் கம்பியூட்டிங்கில்

வேகம் வேகம் வேகம்..என்று

பிரபஞ்சங்களையே கூட

பிசைந்து தின்றான்.

அதையும் கூட

பொம்மை விளையாட்டு ஆக்கி

பில்லியன் பில்லியன் பில்லியன் என்று

பங்கு சந்தையின் வேதாள உலகத்தை

படைத்து நின்றான்.

ஆன் லைன் ட்ரேடிங்க் என்று

ஆப்பக்கட்டை ஆயாவின்

கூன் விழுந்த முதுகின்

சில்லரை வியாபாரத்தையும்

முறித்து நசுக்கி கூழாக்கினான்.

இந்த இன்விசிபிள் வெறி

ஆயிரத்தொரு இரவு கதைகளில்

வரும்

அற்புத பூதம் ஆனது.

மனிதன் கேட்டான்

இந்த மண்டை மாதிரி கணினிவேண்டாம்

கையடக்க பேசியில்

உலகத்தை அடக்கு என்றான்.

அது

முகநூல் தந்தது.

வாட்ஸப் தந்தது.

இப்போது

மனிதக்கருவில்

மனிதப்பசை பிடிக்குமுன்னரே

பேராசை எனும் அரக்கனின்

தொப்பூள்கோடி

வெளியே வந்தது.

காதலும் காமமும்

ஒன்றையொன்று முந்தி வந்தது.

சாட்டிங்கில்

பிரபஞ்சத்தைக்கூட‌

அந்த‌

ஹிக்ஸ் போஸான்களை கூட‌

ப்ரேன் காஸ்மாலஜியைக்கூட‌

அவன் கண்டுகொள்ளவில்லை.

பல் தேய்ப்பதில் இருந்து

கடலை போடுவது வரையிலும்

அதில்

குப்பைக்காகிதங்களை கிழித்துப்போட்டான்

குப்பைகளைத் தந்தவர்கள்

கோடீஸ்வரர்கள் ஆனார்கள்.

கம்பியூட்டர் விஞ்ஞானிகள்

டாலர்களின் அசுரவயிற்றில்

அடைக்கலம் ஆனார்கள்.

வக்கிரம் நிறைந்த விளையாட்டுகளில்

உலகத்தை சிறைப்பிடித்தார்கள்.

கைபேசிகள் கொண்டு

மக்கள் புரட்சிசெய்யலாம்

என்று மாயமான‌

கானல்நீர்ப்படகுகள்

ஓட்டினார்கள்.

அதிலும் லாபங்கள் குவிந்தன.

மனிதபிஞ்சுகளின்

அமுதக்கைகளிலும்

தற்கொலைப்பிசாசுவை

விளையாட்டுத்தோழனாக்கி

தளிர் விடும்

மானிடப்பரிமாணத்தையும்

வெட்டி முறித்து

கல்லா கட்டினான்.

அந்த நீலத்திமிங்கிலம்

பிஞ்சுகளின் மரணத்தில்

விழுங்கி விழுங்கி விளையாடுவதை

கல்லா கட்டினான்.

இப்பொது

இந்த அழகிய விண்வெளியை

மொட்டைக்கடிதங்களின்

புண் வெளியாக்க

சராஹா என்றொரு

சைபர் அணுகுண்டு தயார் செய்து விட்டான்.

இனி மனிதக்கபாலங்கள் குவிந்த

ஒரு சஹாரா

அந்த விண்வெளியில்

பரந்து கிடக்கும்.

மனிதா

நட்சத்திரங்கள் இரவில்

உன் அழிவைப்பார்த்துக்கொண்டே

சோழி குலுக்கி விளையாடும்.



=============================================







Click here to Reply

எழுதியவர் : ருத்ரா (17-Aug-17, 3:14 pm)
பார்வை : 92

மேலே