காலம்

காலம்
=========================ருத்ரா

எங்கே அது?
கருப்பு சிவப்பா
கண்ணுக்கு தெரியவில்லை.
விடியலும் அந்தியும் தான்
நம்மோடு வரும்
அதன் மைல்கற்கள்..
அதன்
நீளம் அகலம் ஆழம்
யாருக்குத் தெரியும்?
அன்றொரு நாள்
பேருந்தின் பிதுங்கி வழியும்
கூட்டத்தில்
அகல விழியில்
ஒரு மின்னற்பூவைக் கண்டேன்.
என்னை நோக்கி
அனிச்சத்தில்
அம்புப்பார்வை ஒன்று
அவள்
எய்து விட்டாள்
அன்று முதல்
அதே பேருந்தில்
அதே தடத்தில்
அதே பேருந்து நிறுத்தத்தில்
அதே பிதுங்கி வழியும்
வியர்வை நாற்றத்து
காடுகளிடையேயும்
அந்த ஆழமான
விழிகளைத்தேடுகிறேன்.
ஆம் இன்னும் தேடுகிறேன்.
அந்தக் காலப்பரிமாணம்
களவு போனது.
வருடங்கள் நெல்லிக்காய்
மூட்டையாய்
சிதறுண்டு போனது.
ஆயிரத்து தொள்ளாயிரத்து
அம்பது சொச்சம் ..
இரண்டாயிரத்து சொச்சம் என்று.
கனத்த வாழ்க்கை.
நரைத்த வாழ்க்கை.
புஷ்டியான குடும்பசந்தோஷத்துக்கு
குறைச்சல் இல்லை.
அடிவானத்தில்
வெட்கமில்லாமல்
சூரியனும் கடலோடு
குடைந்து குடைந்து
ஒளியை வைத்து கண் பொத்தி
கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தான்.
காலம்
அர்த்தமற்றதாய்
தன் அசிங்கமான
பாம்புச்சட்டைகளை
உரித்துப்போட்டு
சென்று கொண்டிருந்தது,
செத்தபாம்பாய்
என் மின்னல் பூமாலையும்
அடித்து நசுக்கப்பட்டு கிடந்தது.
அந்த விழிகள் மட்டும்
என்னைத்தீண்டிக்கொண்டே இருந்தது.
காலமாம் காலம்!
அது பொத்தலாய்க் கிடந்தது.

==========================================


Close (X)

5 (5)
  

பிரபலமான விளையாட்டுகள்

மேலே