ஒரே ஒரு முறை

ஒரே ஒரு முறை
நீ திரும்பி ஒருபார்வை பார்த்திடு
ஏங்கும் என் இளமையின் நரம்புகள் உயிர் பெற்று நடனம் ஆட தொடங்கும்

ஒரே ஒரு முறை
என் விழியில் உன்னுருவம் நுழைத்திடு
வண்ண புகைப்படமாக ஆயுளுக்குமான சேமிப்பாய் ஒளித்துக் கொள்ளும் என் இதயம்

ஒரே ஒரு முறை
நீ என்னுடன் ஏதாவது பேசிவிடு
பதிவு செய்து ஒளிபரப்பிக் கொள்ளும் திரும்பத் திரும்ப என் நினைவு வானொலி

ஒரே ஒரு முறை
நீ எனக்காக கொஞ்சம் சிரித்திடு
உன் முகத்தை செதுக்கிய சிரிப்பை சிலை செய்து ரசிக்க சேகரித்து வைக்கிறேன்

ஒரே ஒரு முறை
நீ என்னிடம் உன் காதலை சொல்லிவிடு
நிலை கொள்ளாமல் பேரின்பத்தில் பறந்து இறந்து போய்விடுவேன்

ஒரே ஒரு முறை
நீ என் கரம் கோர்த்திடு
என் உயிர் பிரியும் வரை நான் அதை விலக்கிட விட்டிருக்க மாட்டேன்

ஒரே ஒரு முறை
நீ என்னோடு சிறுதூரம் நடந்திடு
என் மயிர் பறக்க காற்றில் நானும் பட்டாம்பூச்சியாய் மாறி இருப்பேன்

ஒரே ஒரு முறை
நீ என் தோள் சாய்ந்திடு
என் ஆண்மையின் அரவணைப்பை உன் தோள்களுக்கு பரிமாறி இருப்பேன்

ஒரே ஒரு முறை
நீ என் இதயத்தில் பிறந்திடு
என் இதயத்தின் தொட்டில்கள் என் காலம் உள்ள வரை உன் நினைவுகளை ஆட்டிக் கொண்டிருக்கும்

ஒரே ஒரு முறை
நீ எனக்காக சிறிதுநேரம் காத்திடு
என் உயிர் பறக்க ஓடிவந்து உன் மடியில் பெருமூச்செறிந்து சாய்ந்திருப்பேன்

ஒரே ஒரு முறை
நீ என்னோடு காபி குடித்திடு
என் உயிர் காலத்துக்குமான உற்சாகத்தை அந்த தேநீரில் உறிந்திருப்பேன்

ஒரே ஒரு முறை
நீ என்னோடு உணவுநேரத்தை பகிர்ந்திடு
என் கேள்விகள் உதிர்க்காமலே முழுவதுமாய் உன்னை அறிந்திருப்பேன்

ஒரே ஒரு முறை
நீ என் இதழ் பதித்திடு
என் அணுக்கள் விழித்து எழுந்து காலத்துக்கும் தூக்கத்தை தொலைத்திருக்கும்

ஒரே ஒரு முறை
நீ என் உயிரில் கலந்திடு
என் இளமை உயிர்த்து இனி உன்னில் துறவு பூண்டு உறைந்திருக்கும்

ஒரே ஒரு முறை
நீ என் அவள் ஆகிடு
என் காலச் சக்கரத்தை சுழலாமல் நிறுத்தி அந்நொடியிலே வைத்து நிறைந்திருப்பேன்

ஒரே ஒரு முறை
ஒரே ஒரு முறை
ஒரே ஒரு முறை

ஒரே ஒரு முறை க்காக
ஒரு வாழ்க்கை காலம்
ஒவ்வொரு நொடியும்
ஒறுத்து காத்திருக்கும்
ஒரு ஜீவன் ...!

எழுதியவர் : யாழினி வளன் (25-Aug-17, 9:35 am)
Tanglish : ore oru murai
பார்வை : 1561

மேலே