குறும்பா

குறும்பா என்பது ஆங்கிலத்தில் லிமெரிக் (limerick) என்ற பாடல் வகையை ஒட்டித் தமிழில் அமைக்கப்பட்ட ஒரு அண்மைக்காலப் பா இனம். இப்பாவினத்தை ஈழத்தில் 'மகாகவி' என்ற புனைப்பெயர் கொண்ட கவிஞர் திரு. உருத்திரமூர்த்தி அறிமுகப்படுத்தினார். "மகாகவியின் 100-குறும்பாக்கள்" என்ற தலைப்பில் 1966-ல் வெளியிடப்பட்ட நூலிலிருந்து குறும்பா அமைப்பிற்குச் சில எடுத்துக்காட்டுகளைக் கண்டபின் அவற்றின் இலக்கணத்தைப் பார்ப்போம்:

முத்தெடுக்க மூழ்குகின்றான் சீலன்
முன்னாலே வந்துநின்றான் காலன் (அடி 1)
..... சத்தமின்றி, வந்தவனின்
..... கைத்தலத்திற் பத்துமுத்தைப் (அடி 2)
பொத்திவைத்தான் போனான்முச் சூலன்! (அடி 3)

மகாகவியின் பாடலில், ஆங்கில லிமெரிக்கின் அமைப்பு, நோக்கம், சந்தம் யாவும் வருவதைப் பார்க்கிறோம். அவரது குறும்பா நூலின் முகவுரையில் திரு. பொன்னுத்துரை கூறுகிறார்:

"முதலாம் அடி அடிகோலுவதாகவும், இரண்டாம் அடி கட்டி எழுப்புவதாகவும், மூன்றாம் அடி முத்தாய்ப்பிடுவதாகவும் குறும்பா அமைதலே சிறப்புடைத்து. குறும்பாவும் தனிப்பாடல் மரபு வழிதான் எழுந்துள்ளது. அதன் பொருள் எதுவாகவும் இஇருக்கலாம். ஆனால், அதன் உயிரோ, சிந்தனையைத் தூண்டும் சிரிப்பாகும்."

மகாகவியின் குறும்பாக்களின் அமைப்பை வைத்து அதன் இலக்கணத்தைத் திரு. பொன்னுத்துரை வரையறுத்தார். அதன் சுருக்கம் கீழே:

ஒரே எதுகையுடைய 3 அடிகள் 5 வரிகளாக அமையும்;
முதல் அடி 6 சீர்களும், இரண்டாம் அடி 4 சீர்களும், மூன்றாம் அடி 3 சீர்களும் பெற்று வரும்;
முதல் அடியின் முதற்சீரும் நான்காம் சீரும், மூன்றாம் அடியும் இடப்பக்கம் ஒரே நேரான இடத்தில் ஆரம்பமாகி, முறையே முதலாம், இரண்டாம், ஐந்தாம் வரிகளாக அமையும். இரண்டாம் அடி மூன்றாம் நான்காம் வரிகளாக இடப்பக்கம் சற்றே உள்ளடங்கி அமையும்;
முதலாம் அடியின் மூன்றாம், ஆறாம் சீர்களும் மூன்றாம் அடியின் கடைசிச்சீரும் ஒரே இயைபு பெறும்;
முதல் அடியின் 1,4 சீர்களில் மோனை பயிலும்;
வாய்பாடு:

காய் - காய் - தேமா
காய் - காய் - தேமா
... காய் - காய்
... காய் - காய்
காய் - காய் - தேமா

ஓசை ஊறுபடாது காயின் இடத்தில் விளம் வருதலும் வெண்சீர் வெண்டளையினிடத்து இயற்சீர் வெண்டளை வருதலும் ஆகும். இவ்வுருவம் பல ஓசை வேறுபாடுகளுக்கும் இடம் கொடுப்பது.

மேலும், ஈரடி இறுக்கத்திற்கு மாறுபடும் இந்த மூவடிச் செய்யுள் முறை பொருளுக்கேற்ப இலகுத் தன்மையையும் எளிமையையுஞ் சேர்க்க உதவுகின்றது.

மேலே குறித்த இலக்கண விதிகள் குறும்பாவை ஆங்கில லிமெரிக்கிலிருந்து தனிப்படுத்தி அதைச் சிந்து, கும்மி போன்ற தமிழ்ப் பாவகைகள் போலத் தமிழ் யாப்பமைதி கொண்டதாக ஆக்குகின்றன.
அண்மைக் குறும்பா முயற்சிகள்

சென்ற சில ஆண்டுகளில் இணைய வலைத்தளங்களிலும், 'திண்ணை' போன்ற மின்னிதழ்களிலும், 'மஞ்சரி' போன்ற சிற்றிதழ்களிலும் அண்மைக்காலக் கவிஞர்கள் இடும் குறும்பாக்கள் இடம்பெற்றுள்ளன. குறும்பாவின் இலக்கணம் பற்றிய ஆய்வும் இணைய தளத்தில் நடைபெற்று வருகின்றது. இணைய குழுக்களில் ஒன்றான 'சந்த வசந்தம்' குழுவில் குறும்பாவின் வெவ்வேறு வகைகளையும் அவைகளின் இலக்கணத்தையும் மேலும் வரையறுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அங்குப் பரிமாறப் பட்ட கருத்துக்களின் விளைவாக உருவாகிய குறும்பா இலக்கண விதிகளும் அவற்றின் அடிப்படையில் குறும்பாக்களை வகைப்படுத்தலையும் கீழே தருகிறேன். அதன்பின், சிரிப்பு/அங்கதம் மட்டுமின்றி மற்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் குறும்பாவைப் பயன்படுத்தும் நான் செய்த பரிசோதனை முயற்சியைச் சுட்டி உங்கள் கருத்தை வேண்டுவேன்.
குறும்பா வகைகளும் எடுத்துக்காட்டுகளும்:
வகை 1. 'இலக்கணம் தளர்ந்த' வகை:
மூன்றடிகள்; *அடியெதுகை தேவையில்லை*; 1-2 அடிகளுக்கிடையே மோனை; *கனிச் சீர் வரலாம்*. 'தனிச் சொல்' வரலாம். இரண்டாவது அடியில் 1,3 சீர் மோனை உண்டு ஆனால் அரையடிகளுக்கிடையே இயைபு தேவைஇல்லை. (கீழே முதல் பாட்டில் 'தம்பிக்குமோர், வெற்றிக்கொடி' என்பவை -'நேர்நேர்நிரை' என்ற அசைகள் கொண்ட- கனிச்சீர்கள்)
அண்ணனுக்கும் தம்பிக்குமோர் போட்டி -அதில்
ஆனைமுகன் வெற்றிக்கொடி நாட்டி
... அகிலமெல்லாம் சுற்றுவதை
... அன்னைதந்தை சுற்றுவதால்
அடைந்திடலாம் என்றான்வழி காட்டி! (அனந்த், 'கயிலாயக் குடும்பம்', திண்ணை )

பாற்கடலில் படுத்திருந்த போது-அங்குப்
பருகவொரு சொட்டுங்கிடைக் காது
... ஆயர்பாடி வந்துதித்தான்
... அள்ளியள்ளிப் பால்குடித்தான்
பார்த்தஅன்னை கையில்அவன் காது! (அனந்த், 'வைகுண்ட வாசம்', திண்ணை)


வகை 2: உருத்திரமூர்த்தி ('மகாகவி') வகை:

மூன்றடிகள், மூன்றுக்குள்ளும் எதுகை, முதல் அடியில் 1,4 சீர் மோனை; அதன் 3,6 சீர்களிலும் (அதாவது அதன் அரையடிகளுக்கிடையிலும்), மூன்றாம் அடியின் இறுதிச் சீரிலும் இயைபுத் தொடை. அடிக்குள்ளே வெண்டளை இருத்தல் நன்று. ஒருஅடிக்கும் அடுத்த அடிக்கும் இடையே வெண்டளை தேவையில்லை. இரண்டாவது அடியில், 1,3 சீர் மோனை; அரையடிகளுக்கிடையே இயைபு தேவை இல்லை. காட்டுகள்:
கந்தனுக்கும் சுந்தரிக்கும் காதல்.
கற்பனைஉ யர்ந்தஒரு நோதல்.
.... "சந்ததிவ ளர்க!"எனத்
.... தக்கவர்கள் சேர்த்துவைத்தார்...
அந்தோ!மென் கற்பனைஎன் னாதல்? (உருத்திரமூர்த்தி, "100-குறும்பாக்கள்")

காட்டினிலே சுற்றுமந்த வள்ளி
காலமெல்லாம் நெஞ்சினிலே உள்ளி
.... வேட்டுவனாய் வந்தவனின்
.... வேடமறி யாதவள்போல்
காட்டியபின் காதலித்தாள் கள்ளி! (அனந்த்)

பட்டணத்தில் படிக்கின்ற கிட்டு
பந்தயத்தில் போக்கிடுவான் துட்டு
... திட்டிப்பார்த் தாளன்னை
... சிறிதுமவன் மாறவில்லை
சட்டென்று போட்டாள்கால் கட்டு!

வகை 3. 'இறுக்கமான' ('சவால்') வகை

குறும்பாவை 5 அடிகள் கொண்டதாகக் கருதல்; 1-3-5 அடிகளுக்கிடையே எதுகை; 1-2 அடிகளுக்கிடையே மோனை; 1-3-5 அடிகளுக்கிடையே இயைபு, 3-4 அடிகளுக்கிடையே (ஆங்கில லிமெரிக்கில் காண்பதுபோல) *வேறுவித* இயைபு; அவற்றிடையே மோனை. அடிகளுக்குள் வெண்டளை; அடிகளுக்கிடையே வெண்டளை தேவையில்லை. காட்டுகள்:
பஞ்சென்பான் ஆவலாய்ப்ப றந்தான்
பரவசமாய்ப் பாவைபக்கம் வந்தான்!
... மஞ்சத்தில் ராசாத்தீ
... வாட்டியது காமத்தீ
... வஞ்சியுடல் தொட்டபஞ்சு வெந்தான்! (பசுபதி)

ஆங்கிலத்தில் 'லிமெரிக்'கென்று செய்தான்
அழகுமுண்டு பொருளுமுண்டு மெய்தான்
...... ஆங்கிலாத மோனைநலம்
...... ஆக்கிஎங்கள் மொழியின்பலம்
ஓங்குகுறும் பாவையிங்கு நெய்தான்!

(நெசவில் பயன்படுத்துவது பா அல்லவா?)
காலையிலும் மாலையிலும் குறும்பா
கழிந்தமற்ற நேரமெல்லாம் எறும்பாய்
.... வேலைசெய்யும் வேளையிலும்
.... வேண்டுமென்றே மூளையினோர்
மூலையிலே சிரிக்குமது குறும்பாய்!

குறும்பாவைக் கொண்டுவந்தான் மூர்த்தி*
கொண்டனன்நான் அதில்மிகவும் ஆர்த்தி
... வெறும்பாவாய் ஆங்கிலத்தில்
....விளங்கியதை ஓங்குமொரு
நறும்பாவாய் நமக்களித்தான், நேர்த்தி! (அனந்த்)

என்னவழ கந்தமுடி என்று
எண்ணிவியப் புற்றிருந்தேன் நின்று
.... தன்வழியே காற்றுமுன்னே
.... தானடித்துச் சென்றபின்னே
நின்றதுபார் மொட்டையங்கே ஒன்று. (இலந்தை)
வகை 4.

முன்னதுபோல இங்கும் வரிகளை அடிகளாக எண்ணுதல். முதல் இரு அடிகளுக்கிடையே மோனை; 1-3-5 அடிகளுக்கிடையே இயைபு; 3-4 அடிகளுக்கிடையே மோனை; 3,4 அடிகளில் வரும் முடுகு *நிரையசையில்* தொடக்கம்; எதுகை தேவையில்லை. வெண்டளை தேவையில்லை.

குறும்பாவில் பாட்டெழுதும் அனந்து
கொட்டுகிறார் நல்லபடி வனைந்து
... குலுங்கிவரும் நடையழகு
... குழைந்துவரும் வடிவழகு
கொள்ளைகொள்ளை யாய்ப்புதுமை நினைந்து (இலந்தை)


வகை 5.

மேல் சொன்ன வகை போல; ஆனால் 1-2-5 -அடிகளுக்குள் வெண்டளை; 1-3-5 எதுகை
தமிழரங்கம் காணுமெங்கள் 'மாகா'
தடைகளின்றி வாழஅன்னை நீ,கா!
..... குமிழியிடும் எழிலுடைய
..... அமிழ்தமெனும் மொழியில்நிதம்
அமிழ்ந்துநெஞ்சம் மகிழ்ந்திடுவோம் ஆகா!


வகை 6. சமனிலைச் சிந்து வகை.

தமிழில் சந்தங்கள் பெரும்பாலும் இரட்டையாக வருவதால் குறும்பாவில் ஓரடியைக் கூட்டிக் கொள்ளல். 1-2, 5-6 அடிகளுக்கிடையே இயைபு; 3-4 அடிகளுக்கிடையே முடுகு; எல்லா அடிகளிலும் மோனை; எல்லா அடிகளுக்குள்ளும் வெண்டளை
தோட்டா அவருக்கொரு துச்சம்-மனத்
துணிச்சலைப் பெற்றார்க் கில்லை அச்சம் -அவர்
... தொட்டுக் கொளுத்திவைத்த
... ஜோதி அகல்களெல்லாம்
சூழும் ஒளியலையின் உச்சம்-அவர்க்குத்
தோள்துண்டும் வேட்டியும்தான் மிச்சம் (இலந்தை)

எதுகைமோனை இன்னும்கொஞ்சம் வேணும் - மேலும்
இயைபிருந்தால் ஓசைகூடிக் காணும்
... தலைசொறிவான் மரபுக்காரன்
... குலைஎரியும் கும்பிக்காரன்
எண்ணத்திலே என்னபாடல் தோணும்? - அதை
இயற்றிவிட்டா லோஉலகம் நாணும்! (அனந்த், திண்ணை/மஞ்சரி)


வகை 7.

முன்மாதிரியே, ஆனால் 1-3 அடிகளுக்கிடையே எதுகை; 1-2 அடிகளுக்கிடையே மோனை; 3-4, 5-6 அடிகளுக்கிடையே மோனை. இதை மேலே தந்த பாடலை மாற்றியமைத்த விதத்தில் காணலாம்


எதுகைமோனை இன்னும்கொஞ்சம் வேணும் - மேலும்
இயைபிருந்தால் ஓசைகூடிக் காணும்
... தலைசொறிவான் மரபுக்காரன்
... குலைஎரியும் கும்பிக்காரன்
கொதித்தெழுந்தால் என்னபாடல் தோணும்? - அதைக்
கூறிவிட்டா லோஉலகம் நாணும்!


வாரிவாரி யன்றுதந்தான் பாரி
வந்தவரைக் காக்குங்கொடை மாரி
... பறந்ததையா பழையகாலம்
... பிறந்ததையா புதியகாலம்
ஊரில்ஓடும் ஊழல்லஞ்ச லாரி
ஓலத்திலே உயிரிழக்கும் சேரி! (அனந்த், ‘திண்ணை” இணைய மின்னிதழ்)


சமனிலைச் சிந்தின் விகற்பங்களாக இன்னும் பல சொல்லலாம்; தனிச்சொல்லுடன் வரும் சமனையும் சேர்க்கலாம்.

இனி, எனது குறும்பாக்கள்: கடந்த ஆண்டுகளில் நான் இட்ட குறும்பாக்களை "குறும்பா நாற்பது" என்ற தலைப்பில் தொகுக்க முயன்று வருகிறேன்.

இப்பாடல்களில் மேற்சொன்ன குறும்பா வகைகள் பலவும் காணலாம். மகாகவியின் குறும்பாக்களில் சமூகக் கோட்பாடுகள் குறித்த அங்கதமும் அகத்துறைக் கருத்துகளும் பெருமளவு காணப்படும். என்னுடைய பாடல்களில் பலவகைப்பட்ட கருத்துக்களைச் சொல்ல முயன்றிருக்கிறேன்.


சில எடுத்துக்காட்டுகளை இப்போது பார்க்கலாம்.

அ) நவரசங்கள்:

சிருங்காரம், ஹாஸ்யம், கருணை, ரௌத்ரம், வீரம், பயம், பீபத்ஸம், அற்புதம்/சோகம், சாந்தம். பாடல்கள் யாவும் 'திண்ணை' மின்னிதழில் வெளியானவை.
1. காதல் (சிருங்காரம்)

கையினிலே ஏந்துவதோ ஓடு - அவன்
காலெடுத்து ஆடுவதோ காடு
... அன்னவன்மேல் மையல்கொண்டு
... அருகமர்ந்தாள் அம்மைஅவள்
காதலுக்கு வேறெதுதான் ஈடு?


கவிஞனைநான் ஏன்மணந்தேன் என்று
கண்கசக்கும் என்மனைவி இன்று
.... அவியலுடன் ரசமும்வைத்து
.... அப்பளம்பா யசம்சமைத்துச்
செவியில்சொன்னாள்: உம்குறும்பா நன்று!

2. சிரிப்பு:

மங்களத்தின் மாமனொரு குண்டன்
வசிப்பதற்கு வந்தடைந்தான் லண்டன்
..... இங்கிலாந்துத் தீனிதின்று
..... இவன்பெருத்த மேனிஇன்று
தங்கும்'கின்னஸ் புக்'கில்;எம கண்டன்!


3. கருணை:

மேதையிலும் மேதையவன் காந்தி
மீண்டும்வந்து விளக்குமாற்றை ஏந்தி
..... பாதையுள்ள தூசகற்றிப்
..... பாரிலுள்ள மாசகற்றி
நீதிவழி காட்டவரும் சாந்தி!


4. கோபம்

இந்திரனுக் கென்றுமொரு தாபம்-அது
இவ்வுலக மாதரின்சல் லாபம்
... பகலிரவாய்ப் பாடுபட்டு
... அகலிகையை அடைந்ததற்குக்
கிடைத்ததெல்லாம் கௌதமுனி சாபம்!


5. வீரம்:

அக்கினிக்கும் வருணனுக்கும் சண்டை- அதை
அகற்றவந்தார் நாரதர்அந் தண்டை
... அக்கினிக்கு சொன்னதைஅப்
... பக்கம்வந்த வருணன் கேட்க
அவன்பிடித்தான் நாரதரின் சிண்டை!


6. அச்சம்:

கணினியிலே காலமெல்லாம் போக்கிக்
களைப்பொழிக்கக் கவிதைகொஞ்சம் ஆக்கிப்
... பணிமுடிந்து வீடுவந்து
... படுக்கையிலே சாய்ந்தபின்னர்
அணிவகுக்கும் எலிகள்என்னை நோக்கி!


வந்ததொரு இடிமுழக்கம் இன்று
டுண்டுடுடூ டுண்டுடுடூ என்று
.... எந்தன்உடல் படபடக்க
.... எழுதிவைத்தேன் கரம்நடுங்க
'தந்தனத்தா' சந்தமிது என்று!


7. அருவருப்பு (பீபத்ஸம்)

உண்டபின்னே திண்ணையில் அமர்ந்தேன்
உடல்அசதி மேவக்கண்ண யர்ந்தேன்
.... அண்டியென்னை ஏதோஒன்று
.... அணைத்ததது யாரோவென்று
கண்திறந்தால் நாய்!நிலைபெ யர்ந்தேன்!


8. சோகம்:

தாவிவந்தாள் மடியைநோக்கிப் பேத்தி
தளிர்முதுகில் நாலுஅறை சாத்தி
... "பாவி!உந்தன் கறுப்புமேனி
... பார்த்தெவன்தான் மணம்புரிவான்?"
பூவைஅங்கே கருக்கியது நாத்தீ!

எதுகைமோனை இஇன்னும்கொஞ்சம் வேணும் - மேலும்
இயைபிருந்தால் ஓசைகூடிக் காணும்
... தலைசொறிவான் மரபுக்காரன்
... குலைஎரியும் கும்பிக்காரன்
எண்ணத்திலே என்னபாடல் தோணும் - அதை
இயற்றிவிட்டா லோஉலகம் நாணும்!
(சமனிலைச் சிந்து வகை)


9. சாந்தம்:

வான்வெளியை நோக்கிநின்றே னின்று-அங்கு
வந்ததொரு சாந்தகுணக் குன்று
..... தான்படித்த கீதைசொல்லை
..... யார்மதிப்பார் என்றுகேட்க
நான்துடித்தேன் நாவெழும்பா நின்று-துயர்
ஏன்பிடித்து வாட்டுதெனைத் தின்று?
(சமனிலைச் சிந்து வகை)



ஆ) வேதாந்தக் குறும்பாக்கள்:

உள்ளமதன் உள்ளையும்நாம் கண்டு
உணருமொரு பரவசமும் உண்டு
.... கள்ளமிலா மகிழ்ச்சிநிலை
.... கருத்துமற்ற நெகிழ்ச்சிநிலை
தெள்ளியதை யார்க்குரைப்போம் விண்டு?
உலகினிலே வளையவரும் தேகம்
உறும்வினைக்குக் காரணமாம் மோகம்
.... விலகிநின்று செயல்புரியும்
.... விதமுணர்ந்தால் அதில்தெரியும்
அலகிலாத அருள்நிலையே யோகம்!

உடலிதுதான் ஊனமுற்ற போதும்
உள்ளமதில் 'நான்'எனவெப் போதும்
.... தொடர்ந்துவரும் கனவினிலும்
.... படர்ந்துவரும் 'நான்'அறிந்தால்
அடங்கிடுமே அகிலமுள்ள யாதும்!


இ) குறும்பா அந்தாதி

வழி
நடக்கமுடி யாதஅந்த மாது
நடுத்தெருவில் மலைத்துநிற்கும் போது
..... கடந்துசெல்லும் பேர்கள்அவர்
..... கல்மனத்தால் ஊர்திகளும்
தடங்கலின்றி ஓடும் சாலை மீது!


மீதமுள்ள பணத்தையெல்லாம் மொத்தம்
வீதிமுனைக் கள்கடைக்கு நித்தம்
..... ஈந்து"இந்த தேசமெல்லாம்
..... ஏழைகள்மேல் நேசமில்லாப்
பாதகர்கள் பார்!"எனல்அ பத்தம்!


தம்மனைவி மக்கள்மட்டும் இன்று
தழைத்திடநாம் உழைக்கவேண்டும் என்று
..... இம்மனிதர் விருப்பம்போல
..... இந்தநாட்டில் இருப்பதற்குச்
சம்மதிக்கும் வாழ்வுமுறை நன்று!



நன்றல்லவே நாம்நடக்கும் பாதை
நம்மிலெவர் ஒருவர்இவ்வு பாதை
..... குன்றுபோல உயர்ந்திருந்தும்
..... குறுகியுள்ளம் அயர்ந்திடாமல்
வென்றதனைத் தீர்ப்பர்அவர் மேதை!



மேதையிலும் மேதையவன் காந்தி
மீண்டும்வந்து விளக்குமாற்றை ஏந்தி
..... பாதையுள்ள தூசகற்றிப்
..... பாரிலுள்ள மாசகற்றி
நீதிவழி காட்டவரும் சாந்தி!

ஈ) ஆங்கில லிமெரிக்கின் தமிழாக்கம்:

A flea met a fly in the flue
Imprisoned, what could they do?
... Said the fly let's flee
... Said the flea lets fly
So they flew through a flaw in the flue.
'சிம்மினி'யில் சிக்கியதோர் ஈயும்
சிறியதொரு கொசுவும்என்ன செய்யும்?
... கும்மிருட்டில் இறந்திடாமல்
... கூரையிடுக்கில் பறந்திடவே
தம்மிலொரு முடிவெடுத்துப் பாயும்!

This is a difficult time
His mind is chanting a rhyme:
... "Kiss her, my Man!
... Or forever you can
Miss her and pay for y'r crime!" (அனந்த்)

வந்ததிங்கு வாட்டுகின்ற காலம்
வாலிபனின் உள்ளமிடும் ஓலம்:
... "சுந்தரியின் 'ஜில்'அழகைச்
... சுவைப்பதற்குத் 'தில்'இழந்தால்
உந்தன்வாழ்வில் என்றும்கண்ணீர்க் கோலம்!

எழுதியவர் : அனந்தநாராயணன் (30-Aug-17, 2:07 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 571

மேலே