என் பிள்ளை

பத்து திங்கள்
தவம் இருந்தேன்,
உன்னை யார் கண்ணிலும்
காட்டாமல் பொத்தி வைத்தேன்
என் கருவறையில்....

அழகிய பூங்கொத்தாய்
நீ வெளியே வர,
நான் என் வலிகளை
மறந்தேன்.....

என் அருகில்
கிடக்க பட்டிருந்த உன்னை
அரை மயக்கத்தில்
தொட்டுப்பார்த்தேன்,
கண்களை மூடிய படியே !!

உன் தலைமுடியை
வருடி பார்த்தேன்,
மயில் இறகை
நினைத்துக்கொண்டேன்....

உன் நெற்றியை
தொட்டுப்பார்த்தேன்,
பிறை நிலவை
நினைத்துக்கொண்டேன்...

உன் கண்களை
தொட்டுப்பார்த்தேன்,
சிப்பிக்குள் இருக்கும்
முத்தை நினைத்துக்கொண்டேன்....

சம நிலத்தில்
சின்னதொரு குன்றினைப்போல்,
உன் சின்னஞ்சிறு மூக்கு...

மல்லிகை மொட்டாய்
உன் குட்டி இதழ்களில்
"அம்மா" என்று
நீ அழைக்கும் நொடிக்காக
காத்திருக்கிறேனடா.....

உன் பட்டு கன்னம்
தொட்டுப்பார்த்தேன்,
அரைத்த சந்தனத்தை
தொட்டது போல்
உணர்ந்தேன்.......

உன் காது மடல்களை
தொட்டுப்பார்த்தேன்,
மடித்து வைத்த
ரோஜா இதழ்களை
நினைத்துக்கொண்டேன்...

உன் பிஞ்சு விரலின்
மென்மையில்
கூழாங்கல்லும்
தோற்றுப்போனது...

உன் அழகிய பாதங்களை
தொட்டுப்பார்த்தேன்,
நீ வயிற்றுக்குள் உதைத்தது
ஏன் காயமாகவில்லை
என்பதை உணர்ந்தேன்.....

நான் என் மூடிய
கண்களை திறந்து பார்த்தேன்,
தங்க சிலையாய் நீ மின்ன
வாரி அணைத்துக்கொண்டேன்
"என் பிள்ளை" என்று !!!

எழுதியவர் : மதிமகள் சண்முகபிரியா (2-Sep-17, 11:21 am)
Tanglish : en pillai
பார்வை : 1696

மேலே