செப்டம்பர் மாத என் தேவதைகள்

ஆசிரியர் தினம்

அந்தப் பள்ளிக்கால
அழகிய வனத்தின்
அதிசய தேவதைகள்
சிலரைப் பிடித்துவந்து
சிறுபருவ நாளைப்போல
கண்முன் கொண்டுவந்து
கட்டாயமாய் எனக்கு
நினைவுபடுத்திச் செல்கிறது
ஆசிரியர் தின நாள்

கதவுகளும் ஜன்னலும்
கொண்ட ஜாக்கெட்டை
எனக்கு அறிமுகம்
செய்து வைத்த
அறியாப் பருவத்தின்
அந்த தேவதை ...

ஒற்றை ரோஜாவாவுக்கு
சொந்தமான டீச்சரின்
கூந்தல் நீளத்தை
கண்களால் அளந்து
என் கூந்தலை
கைகளால் அளந்த
ஏக்கத்தினைத் தந்து
போன தேவதை ...

சாக்குட்டியின் வேகத்தைவிட
அதிக வேகமாக ஆடும்
டீச்சரின் தொங்கு கம்மலோடு
கூடவே ஆடிய நானும் ...

தினமொரு அழகாக
வரும் டீச்சரின்
வண்ணப்புடவைக்கு
மயங்கி துணிக்கடையில்
அம்மாவுக்கும் அதுபோன்ற
வாங்க வேண்டுமென்று
கடையைப்புரட்டிய நேரங்கள்...

கேள்வி கேட்காத
டீச்சரை மிகப்
பிடித்தவராய் நினைத்த
புரியாத காலம் ...

கேள்வி கேட்டு
கம்போடு நின்ற
தேவதை டீச்சரை
சூனியக்காரியைப் போல
பாவித்த நாட்கள் ...

டீச்சரின் பாராட்டைட்
கேட்ட மாத்திரத்தில்
நின்ற இடத்திலே
அந்த வானிலே
பரந்த நாட்கள் ....

ஆவென்ற ஆங்கிலம்
குழப்பிய இலக்கணம்
கசக்கிய கணிதம்
அமுக்கிய அறிவியல்
விழிபிதுக்கிய வரலாறு
என இவையெல்லாம்
வாயிலும் மூளையிலும்
மெல்ல நுழைந்தது
இதயத்திலும் இமைகளிலும்
நுழைந்த தேவதைகளால்
அரேங்கேறிய அதிசயங்கள் ...

வெறுத்தப் பாடங்களை
விருப்பப் பாடங்களாக
மாற்றிய மந்திரக்கார
தேவதைகளின் புன்சிரிப்பு
என் மனத்திரையில்
இன்று வந்துபோகிறது ...

கருத்தையும் கல்வியையும்
அன்பையும் அமைதியையும்
வாழ்வையும் வழியையும்
காட்டிய என்தேவதைகள்
இன்று அந்தப்பரகதியிலோ
அல்ல பரமகிழவிகளாகவோ
இருக்கக் கூடும் ..
அவர்கள் எல்லாரும்
தேவதைக் கூட்டமாய்
வருகிறார்கள் கட்டாயமாய்
ஒவ்வொரு செப்டம்பர் ஐந்தும்
என் நினைவுகளில் ...

ஒருவேளை நிஜமாக
இந்த தேவதைகளைக்
காண நேர்ந்தால்
கரம் பிடித்தோ
கால் பிடித்தோ
நன்றிகள் சொல்லவேண்டும் ..

சிறு குழந்தையாய்
டீச்சரின் செல்லத்தட்டை
முதுகில் வாங்கிக்கொள்ள
ஓடும் குழந்தையாய்
என் நினைவுகள் இன்று...

எழுதியவர் : யாழினி வளன் (5-Sep-17, 9:34 am)
பார்வை : 143

மேலே