முகிலும் மயிலும் -- விழிமொழிக் கவிதை
முகிலும் மயிலும் -- விழிமொழிக் கவிதை -- நட்சத்திரக் கவிஞர்களுக்கான கவிதை
முகிலுடனழகு மயிலாடிட
விழிமொழியுடன் கவிபாடிட
மலர்முகமது தலைதாழ்த்திட
பலரிதனையும் பரிமாறிட
இமைபேசிட இதழசைந்திட
சுமையென்று நினையாதவகை
சுகம்தந்திட மெய்மறந்திட
பகலிரவது பசிமறந்திட
மதியெனமுகம் சிவந்திடும்படிப்
பதியெனயுனை நினைவினில்கொள
கதியெனயுனை கனவிலும்மனம்
விதிவழிச்செல விரைந்திடும்படிக்
கவிமகளெனை இமைதிறந்திடச்
செவிவழிமொழி சிறந்திடுமெனச்
சிரிப்பொலியெழ மயங்கியும்விழ
உரிப்பொருளென எனதருகினில்
பனிமலர்பொழில் பசுமையினெழில்
கனிநிகர்மகள் கவிச்சுவையுடை
இதந்தருந்தமிழ் இனிமையினுயிர்
பதந்தரும்குணம் பரவசமிகு
வழங்கிடும்நலம் வளமதையுணர்
பழகிடும்வரைப் பயமினியிலை
செவிவழிச்செல சிறப்புடைவளர்
கவிதைகள்பல கருத்தினில்சுகம்
பலமுறைதர பதங்களும்வர
நலம்பலதரும் நனிமிகுகவி
எழுதிடும்வகை எனைமறந்திட
வழுவினியிலை வரம்தரும்தினம்
மொழியினியிலை முகமதையணை
அழிவிலையென இலக்கியம்சொல
உடல்மெலிந்திட உனைநினைந்திட
கடல்கடந்தவன் கடிதினில்வர
வளைகழன்றிட மனம்தணியவும்
உளைச்சலின்றினி உளம்சுவைத்திட
மறுமொழியினி மறுத்திடவிலை
உறுதுணையென உனையினிமனம்
அணைத்திடும்வகை அகமகிழ்ந்திட
தலைவனெனவும் தமிழ்மொழிசொல
கலையுணர்மகள் கரம்பிடித்திட
அருகினில்வர அனுபவமிகு
விழியிரண்டுமினி விளையாடிட
மொழிமறந்திட வியன்கூந்தலில்
முகிளுடன்மயில் நடமாடிட
நடந்தேறிய நடையழகினில்
கருவெனத்தரும் கதவருகினில்
நின்ற
என்றன் காதலன் எனதுயிர்த் தலைவன்
நின்றான் நெஞ்சினில் நிதமும் வந்தான்
அன்பனின் பெயரே அந்தமாய் உரைக்க
வென்றிடும் வகையில் வேண்டக்
கன்னலும் நிகர்த்ததோர் கனவும் பொய்க்குமோ !!!!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்