ஏதோ மாயம் செய்கிறாய்

......ஏதோ மாயம் செய்கிறாய்.....


எனக்காய் பிறந்தவள்
என்னுள் கலந்தவள்
எனக்குள் வாழ்பவள்
என் ஒவ்வொரு
மணித்துளிகளையும்
அழகாய் மாற்றியவள்
எனக்குள்ளும் ஏதேதோ
மாயங்கள் செய்து
எனையும் முழுதாய்
மாற்றிவிட்டாள்
அவளின் காதல்
கள்வனாய்......!


"எப்படி தூங்குறாள் பாரு...கும்பகர்ணி மாதிரி...இவள் எல்லாம் 12 மணிக்கு விஷ் பண்ணுவாள்ன்னு நினைச்சு தூங்காம முழிச்சிட்டு இருந்தன் பாரு என்னைச் சொல்லனும்..."என்று எனக்குள் நானே இத்தோடு பல தடவைகள் அவளை செல்லமாகத் திட்டிவிட்டேன்....12 மணியும் ஆகியது தான் மிச்சம்...அவளிடமிருந்து எந்த அசைவுகளுமில்லை....அவள் நன்றாக அவளது டெடிபியரை கட்டிப்பிடித்தவாறு தூங்கிக் கொண்டிருந்தாள்...

"முதல்ல இந்த டெடிபியரைக் கடத்தனும்...பக்கத்திலேயே ஒருத்தன் இருந்து புலம்பிக்கிட்டு இருக்கான்...இவ என்னடான்னா இதைப்பிடிச்சு தூங்கிட்டு இருக்கா..."நான் பார்க்கும் பார்வையில் அந்த டெடிபியர் எரிந்துவிடாதா என்றிருந்தது எனக்கு...அந்தளவுக்கு அது என் பகையை சம்பாதித்து வைத்திருந்தது....

நானும் அவள் எழும்புவாள் என்று என் கண்களை தேய்த்துவிட்வாறே பார்த்துக் கொண்டிருந்தேன்...ஆனால் அவள் எழும்பவேயில்லை...என் தொலைபேசியின் மணி
அலறியடித்த போது கூட அவளில் எந்த மாற்றமுமில்லை...எனக்கு வந்த கோலை அட்டென்ட் பண்ணியவாறே வெளியில் சென்று பேச ஆரம்பித்தேன்...

"ஹலோ...சொல்லுடா..??.."

"பிறந்தநாள் வாழ்த்துகள்டா மச்சி..."

"இப்போ இது ரொம்ப முக்கியம்...நீயெல்லாம் இப்போ விஷ் பண்ணலன்னு இங்க யாருடா அழுதா..."

"உனக்கு இது முக்கியமோ இல்லையோ...எனக்கு நாளைக்கு பார்ட்டி ரொம்ப ரொம்ப முக்கியம்டா...அதை மட்டும் மறந்திடாத.."

"டேய் இருக்கிற கடுப்பில ஏதாவது சொல்லிடப் போறன்....ஒழுங்கா வைச்சிடு..."

"சரி...சரி...புரியுதடா....இப்போ நீ உன் வைப் கூட பேர்த்டேயை ரொம்ப ஹப்பியா கொண்டாடிட்டு இருப்பாய்....அதில கரடி மாதிரி நுழையாம கிளம்பு என்டுறாய்....கிளம்புறன்....கிளம்புறன்...."என்று என்னை மேலும் கடுப்பாக்கிவிட்டு கோலை கட் செய்து கொண்டான் என் ஆருயிர் நண்பன் பிரகாஷ்.....மறுபடியும் யாராவது கோல் செய்தால் இருக்கும் கொலைவெறிக்கு ஏதாவது சொன்னாலுமென்று எனது போனை ஓப் செய்துவிட்டு நானும் அவளருகே சென்று படுத்துக் கொண்டேன்...என் விழிகள் தானாய் மூடிக்கொள்ள...மனமோ எனக்கும் அவளுக்குமான பசுமையான நினைவுகளில் மூழ்கத் தொடங்கியது...

"எனக்கும் அவளுக்கும் பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம்தான்...எனக்கு பெற்றோராக இருந்து எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தது எனது சித்தப்பாவும் சித்தியும்...சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த எனக்கு அவர்கள்தான் பாதுகாவலர்கள்....எனக்கான தேவைகள் அனைத்தையும் பார்த்து பார்த்து செய்த அவர்களால் என் மனதில் விழுந்த பாசத்திற்கான வெற்றிடத்தை மட்டும் நிரப்ப முடியவில்லை....அதை முழுமையாக்கிட எனக்காக கிடைத்தவள்தான் ஆராத்தியா... காதலித்து கல்யாணம் செய்யாமல் கல்யாணத்தின் பின் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கிய ஜோடி தான் நாங்கள்...காதலித்து திருமணம் செய்தால்தான் வாழ்க்கை மிக அழகாகத் தோன்றும் என்ற என்னுடைய எண்ணங்களை நொடிப் பொழுதில் மறைந்திடச் செய்தவள் அவள்...அவளுடனான எனது இந்த இரண்டு வருட வாழ்க்கையில் நகர்ந்த ஒவ்வொரு மணித்துளிகளிலும் எனக்குள்ளே மாயங்களை செய்து கொண்டிருப்பவள் அவள்...நான் காதலிக்க கற்றுக்கொண்டதே அவளிடம்தான்...என் சின்னச் சின்ன சந்தோசங்கள் அனைத்துமே அவள்தான்...எங்களுக்குள் வரும் சண்டைகள் எல்லாம் ஒர் நிமிடம் கூட முழுதாய் தாக்குப் பிடித்ததில்லை...அதற்கு அவளும் நானும் இடம் கொடுத்ததுமில்லை...என் 27 வருடத் தனிமைக்கும் ஒரு நொடியிலேயே துணையாகிப் போனாள்....

"எங்கள் திருமணத்தின் பின் வந்த எனது பிறந்தநாளின் போது அவளது அப்பாவோடு அவள் வைத்தியசாலையில் இருந்ததால்...அந்த பிறந்தநாளை என்னால் அவளோடு இணைந்து கொண்டாட முடியவில்லை...அவள் என் வாழ்க்கைக்குள் வரும் வரை என் ஒவ்வொரு பிறந்தநாளும் ஒரு வெறுமையோடே கடந்து செல்லும்...அந்த நாளை என்றும் என் மனம் கொண்டாட்டமாக பார்த்ததுமில்லை...எந்தவித எதிர்பார்ப்புகளும் எனக்குள் எழுந்ததுமில்லை...மற்றவர்கள் என்னை வாழ்த்த வேண்டுமென்று நான் ஏங்கியதுமில்லை..."

"ஆனால் அவள் என் வாழ்க்கையை முழுதாய் ஆக்கிரமித்த பின் என் மனம் அனைத்திலும் அவளுக்காய் ஏங்கத் தொடங்கியது...அவளை மட்டுமே தேடத் தொடங்கியது...கடந்த பிறந்தநாளின் போது அவளிடமிருந்து என் மனம் எதிர்பார்த்த அனைத்தையும் அவள் இந்த பிறந்தநாளில் இரட்டிப்பாக்கி செய்வாள் என்ற என் எதிர்பார்ப்புகளும் ஏக்கங்களும் இப்படி ஏமாற்றத்தில் முடியுமென்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை...அவள் எனக்காக ஒன்றுமே செய்யவில்லையென்றாலும் கூட பரவாயில்லை....ஆனால் அவள் என்னை வாழ்த்தும் அந்த ஒரு தருணத்திற்காகவே இந்த பிறந்தநாளை நான் மிகவும் எதிர்பார்த்தேன்...இப்போதும் என் மனதின் ஓரத்தில் அவள் என் பிறந்தநாளை மறந்திருக்கமாட்டாள் என்ற நம்பிக்கையே குடி கொண்டிருந்தது..."

"அனைத்தையும் என் மனப்பக்கங்களில் மீட்டிப் பார்த்த நான் மெதுவாக கண்களைத் திறந்தேன்...ஆனால் அருகில் அவளில்லை...கடிகாரம் காலை 6 மணியென்பதை உறுதிப்படுத்த...எழுந்து குளியலறைக்குள் செல்லப் புறப்பட்டேன்...அப்போது என் கண்களுக்குள் மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த டீ கப்பும் அதன் கீழே சிறிய துண்டொன்றும் தென்பட்டது...மனதில் சிறிய ஆவல் எழ அதை எடுத்து வாசித்தேன்...

"குட் மோர்னிங் டா....இன்னைக்கு காலையில ஒரு மீட்டிங்கை நான் அட்டென்ட் பண்ணியாகனும்...அதான் ஏர்லியாவே கிளம்பிட்டேன்....உன்னை எழுப்பி சொல்லலாம்னா நீ நல்லா தூங்கிட்டு இருந்தாய்...சொரிடா....டைனிங் டேபில்ல சாப்பாடு செஞ்சு வைச்சிருக்கேன் மறக்காம சாப்பிட்டு கிளம்பு....லஞ்சையும் மறந்திடாம எடுத்திட்டு போ....அப்புறம் நான் நைட்டும் வர கொஞ்சம் லேட் ஆகும்டா....நீ சாப்பிட்டு தூங்கு....எனக்காக வெயிட் பண்ணாத....பாய் பாய்...."என்று அவளது எழுத்துக்களில் அந்த துண்டு மிளிர்ந்து கொண்டிருந்தது..."

"ஆனாலும் அவளிடமிருந்து நான் எதிர்பார்த்தது அந்த துண்டில் இல்லாததால் மனம் செல்லமாய் சிணுங்க ஆரம்பித்தது...இன்று முழுதும் அவள் அருகாமையை எதிர்பார்த்த எனக்கு இது கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது....என் ஒட்டுமொத்த ஏக்கங்களையும் பெருமூச்சாக வெளியேற்றிய நான் குளித்து விட்டு வந்து அலுவலகத்திற்கு கிளம்ப தயாரானேன்...."

"இன்று என் மனம் இருக்கும் நிலைக்கு என் மனம் சாப்பாட்டை ஏற்க மறுத்தது....ஆனால் அவள் எனக்காக பார்த்து பார்த்து செய்து வைத்து விட்டுச் சென்றதை ஒதுக்கவும் மனம் இடம் கொடுக்கவில்லை....நான் சாப்பிடாமலே சென்றால் அவள் மிகவும் கவலைப்பட்டுக் கொள்வாள் என்பதால் என் காலை உணவை முடித்த நான் எனக்கான மதிய உணவினையும் என்னோடே எடுத்துச் சென்றேன்..."

அலுவலகத்தை நோக்கி காரில் சென்று கொண்டிருக்கும் போதே எனது சித்தியும் சித்தப்பாவும் எனக்கு கோல் செய்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்...அதன் பின் அலுவலகத்தை வந்தடைந்த எனக்கு என் சக ஊழியர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவிக்க அவர்களுக்கு சிறு புன்னகையோடு என் நன்றிகளை தெரிவித்தவாறே எனக்காக ஒதுக்கப்பட்ட அறையினுள் சென்று அமர்ந்து கொண்டேன்...

இருக்கையில் சுழன்றடித்துக் கொண்டிருந்த எனக்கு வேலையில் கவனம் செல்லவே மறுத்தது...வெட்கத்தை விட்டு அவளிடம் நாமே கேட்டுவிடலாம் என்ற எண்ணம் தோன்ற..போனை எடுத்து அவளுக்கு அழைப்பினை மேற்கொண்டேன்...ரிங் போய்க்கொண்டேயிருந்தது...கடைசி ரிங்கிலேயே என் கோலை அட்டென்ட் பண்ணினாள்...

"ஹலோ ஷ்யாம்...கொஞ்சம் வேலையா இருக்கேன்...அப்புறமா நானே எடுக்கிறேன்..."என்றவள் என் பதிலுக்கு காத்திருக்காமல் போனை கட் செய்து கொண்டாள்...

சிறிது நேரத்திற்கு அந்த போனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த நான் வேலையில் என் கவனத்தை திருப்பி அதில் முழ்க ஆரம்பித்தேன்...நேரம் போனதே தெரியாமல் கடந்து செல்ல மதிய நேர இடைவேளைக்கு பிரகாஷ் வந்து அழைக்கவே என் கணணியில் இருந்து கண்களை விடுவித்த நான் அவனோடு கன்டீனுக்கு கிளம்பினேன்...

அங்கிருந்த மேசையொன்றில் அமர்ந்த நாங்கள் கதைத்தவாறே சாப்பிட ஆரம்பித்தோம்...ஆனால் அவன் கேள்விக் கணைகளை எனை நோக்கி வீச ஆரம்பித்த பின்தான் ஏன்டா இன்று இவனோடு சாப்பிட வந்தோமென்று ஆகிவிட்டது எனக்கு...

"அப்புறம் பேர்த்டே பேபி ரொம்ப ஹப்பி போல...நேத்து நைட் பேர்த்டே செலிபிரேசன் எல்லாம் சும்மா களைகட்டியிருக்குமே..."

"ம்ம்..."என்று முணுமுணுத்துவிட்டு நான் என் சாப்பாட்டிலேயே கண்ணாக இருந்தேன்...

"டேய் என்னடா நான் இங்க பக்கம் பக்கமா பேசிட்டு இருக்கேன்....நீ என்னடான்னா மணிரத்தினம் படத்தில வாற மாதிரி பேசிட்டு இருக்காய்..."

"வேற என்ன பண்ணணும்...?"

"ஏன்டா இத்தனை வருசமாத்தான் பிறந்தநாள் என்டா கூட முகத்தை உர்ரென்டே வெச்சிருப்ப...இப்போ தான் உனக்கென்டு ஒரு ஆள் வந்தாச்சே....இப்போவாச்சும் கொஞ்சம் சிரியேன்டா...."

"ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.......போதுமா.....?என்றவாறே கைகழுவும் இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்...அவனும் என் பின்னாலேயே முணுமுணுத்தவாறு வந்தான்...

"இதுக்கு நீ என்னை நாலு அப்பு அப்பியிருக்கலாம்.....சிரிடான்னு சொன்னது ஒரு குத்தமா...?ஏன்டா இன்னைக்கு உன்னோட லஞ் மெனு கூட உன்னோட பேவரிட் ஐட்டம்ஸ்....அவ உனக்காக ஆசையா அதை செஞ்சு தந்திருந்தா நீ அதை கூட ஏதோ கல்லையும் மண்ணையும் சாப்பிடுற மாதிரி சாப்பிட்டுகிட்டு இருக்காய்....."என்றவாறே அவன் கைகழுவிட்டுச் சென்றுவிட்டான்...

அவளிடமிருந்து வாழ்த்து வராததையே யோசித்து குழம்பிக் கொண்டிருந்த நான்... அவன் சொன்னது போலவே என்ன சாப்பாடு என்பதைக் கூட கவனிக்கவில்லை.....ஏதோ சாட்டுக்குத்தான் அனைத்தையும் வாய்க்குள் தள்ளிக் கொண்டிருந்தேன்....அவன் எனக்கு பிடித்தவை என்று சொன்ன பின்தான் காலை உணவிலிருந்து மதிய உணவுவரை அனைத்தையும் ஞாபகப்படுத்திப் பார்த்தேன்...ஆம் அத்தனையும் எனக்கு மிக மிக பிடித்தமான உணவு வகைகள்....அதை நினைத்து என் மனம் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் போதே அவளிடமிருந்து அழைப்பு வந்தது....

அதுவரை நேரமும் மனதிலிருந்த கவலை பறந்தோட ஒருவித உற்சோகத்தோடே கோலை எடுத்துப் பேச ஆரம்பித்தேன்..

"ஹலோ...சொல்லுடி...சாப்பிட்டியா..?"

"ம்ம்...இப்போதான்டா...நீ சாப்பிட்டியா...?காலையில சாப்பிட்டியா இல்லை சாப்பிடாமலே கிளம்பி வந்திட்டியா...?"

"அதெல்லாம் நல்லாவே சாப்பிட்டேன்...அதான் என் பொண்டாட்டி இன்னைக்கு எனக்கு பிடிச்சதாவே எல்லாம் பண்ணியிருந்தாளே அப்புறம் எப்படி சாப்பிடாம கிளம்ப முடியும்...ஆமா இன்னைக்கு அப்படி என்ன ஸ்பெஷல்...எல்லாம் எனக்கு பிடிச்சதாவே பண்ணியிருக்கிறாய்...?"என்று ஒன்றும் தெரியாதவனைப் போல் கேட்டவாறே அவளது பதிலிற்காய் காத்திருக்கத் தொடங்கினேன்.

"இன்னைக்கு என்னடா ஸ்பெஷல்....வீட்ல இருந்ததை வைச்சு ஏதோ பண்ணிணேன்....அதெல்லாம் உனக்கு பிடிச்சதாவே வந்திட்டு போல...இப்போ நீ சொல்லித்தான்டா தெரியுது...இதெல்லாம் உனக்கு பிடிச்ச ஐட்டம்ஸ்ன்னு..."

அவ்வளவுதான் அதுவரை நேரமும் என் மனதில் குடி கொண்டிருந்த மகிழ்ச்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்தது...ஆனாலும் அது எதையும் காட்டிக் கொள்ளாமல் மீண்டும் அவளிடமே கேட்டேன்...

"ஓஓ...அப்படின்னா இன்னைக்கு என்ன நாள்னு உனக்கு உண்மையாவே ஞாபகமில்லையாடி...?"இப்போதாவது அவள் புரிந்து கொள்ள மாட்டாளா என்ற ஏக்கம் எனக்குள்...

"ஏன்டா இன்னைக்கு ஏதும் ஸ்பெசல் டேயா என்ன...எனக்கு தெரிஞ்சு இன்னைக்கொரு பங்சனும் இல்லையே....என்று இழுத்தவள் தீடிரென்று ஏதோ ஞாபகம் வந்தவளாய் சொன்னாள்...

"டேய் மறந்தே போயிட்டேன் டா...இன்னைக்கு ப்ரித்தியோட முதல் கல்யாண நாள்....நல்ல வேளை ஞாபகப்படுத்தினாய்...இல்லைனா அவள் என்னை கொலையே பண்ணியிருப்பாள்...நான் அவளுக்கு கோல் பண்ணி விஷ் பண்ணிட்டு வாறேன்...பாய் டா..."

"ம்ம்....சரிடி....என்னோட வாழ்த்தையும் சேர்த்து சொல்லிடு....."என்றவாறே அழைப்பினை முடித்துக் கொண்ட எனக்கு மனதில் துக்கம் அடைத்துக் கொண்டது...நான் ஏன் இப்படி மாறிப்போனேன் என்று தெரியவில்லை....இது கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாகக் கூட இருக்கலாம்....ஆனால் அவளிடம் மட்டும் நான் மழலையாக இருக்கவே ஆசைப்படுகிறேன்...மீண்டும் என் கவனத்தை முழுவதுமாய் வேலையில் செலுத்த ஆரம்பித்தேன்....கடிகார முள் சுழன்றடித்து நேரம் மாலை 6 என்று காட்டியதும் என் வேலையை முடித்துக் கொண்ட நான் அங்கிருந்து கிளம்பினேன்...

வீட்டினை வந்தடைந்த எனக்கு அவள் இன்று தாமதமாக வருவேன் என்று சொன்னது நினைவிற்கு வர குளித்து உடைமாற்றிவிட்டு வந்து அவளுக்கான இரவு உணவினை தயார் செய்யத் தொடங்கினேன்...அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு வந்து டீவி பார்க்கத் தொடங்கினேன்....ஆனால் என் மனம் அதில் பதிய மறுத்தது....இரவு 8 மணிபோலே அவளும் வந்து சேர்ந்தாள்...நுழையும் போதே அவளது முகம் மிகவும் சோர்வாக இருந்தது....காலையிலிருந்து நிறைய வேலையென்று நினைத்த நான்... அவள் ப்ரஷ்சாகிவிட்டு வந்ததும் சாப்பிட அழைத்தேன்...

"ஹேய் என்னடி...ரொம்ப சோர்வாய் இருக்க...இன்னைக்கு நிறைய வேலையா..??.."

"ஆமாடா...புது ப்ரொஜெக்ட் ஒன்னு தொடங்கியிருக்கோம்...அதனால இன்னும் ஒரு மாதத்துக்கு வேலை கொஞ்சம் ஜாஸ்திதான்..."என்றவள் சாப்பிடுவதற்காக வந்தமர்ந்தாள்..."

"சரி முதல்ல சாப்பிடு..."என்றவாறே அவளுக்கு பரிமாற ஆரம்பித்தேன்...

"நீ சாப்பிடலையா..?"

"எனக்கு பசிக்கலடி...நான் உனக்கு மட்டும்தான் சமைச்சன்..."

"லூசா நீ...ஒழுங்கா இதை நீயே சாப்பிடு..எனக்கு நான் வேற ஏதும் பண்ணிக்கிறேன்..."என்றவாறே எழும்ப எத்தனித்தவளை தடுத்த நான்

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்...இதை ஒழுங்கா சாப்பிட்டு போய் தூங்கு...காலையில வேற ரொம்ப ஏர்லியா எழும்பி எல்லாம் பண்ணிட்டு போனாய்...நல்லா சாப்பிட்டு போய் ரெஸ்ட் எடு முதல்ல..."

"அப்போ நீ எதை சாப்பிடுவாய்...?பசிக்கலன்னு உளறாம ஒழுங்கா சாப்பிடு...இது எனக்கு ரொம்ப அதிகம்...இதையே செயார் பண்ணி சாப்பிட்டுக்கலாம்..."என்றவள் எனக்கும் சேர்த்து பரிமாறத் தொடங்கினாள்...இனி என்ன சொன்னாலும் விடமாட்டாள் என்பதால் அதற்குமேல் ஒன்றும் சொல்லாமல் சாப்பிடத் தொடங்கினேன்...இன்று இருந்த அதிகப்படியான வேலையால்தான் எனது பிறந்தநாளை மறந்துவிட்டாள் என்று மனம் என்னை ஆறுதல்படுத்தினாலும்...இன்றைய நாளும் இப்படி வெறுமையாகவே கழிந்ததில் மனதிற்கு மிகவும் வேதனையாக இருந்தது...

"சமையல் ரொம்ப சூப்பர்டா...என்னோட ரெயினிங்கில நீ ஒரு சமையல் கில்லாடியாவே மாறிட்டு வாறடா..."

"அடிப்பாவி...உனக்கு சமையல் சொல்லித்தந்ததே நான்தான்....இதில இவ எனக்கு ரெயினிங் கொடுத்தாளாம்..."

"எது எப்படி இருந்தாலும்....இப்போ நான் உன்னை விட சூப்பரா பண்றேன்ல....அதுக்கப்புறம் உனக்கு நான்தானே புதுப்புது ஐயிட்டம்ஸ் எல்லாம் சொல்லித்தந்தேன்..."

"அது எதையுமே வாயிலேயே வைக்க முடியலையேடி..."

"வாயில வைக்க முடியாம இருந்தததான் பிளேட் பிளேட்டா வாங்கி சாப்பிட்டாயாக்கும்..."

"ஹி...ஹி...அது உன் மனசு கஸ்டப்படக்கூடாதுன்னு சாப்பிட்டேன்டி.."

"ஏன் சொல்லமாட்ட...இனி வருவ தானே அப்ப உன்னை கவனிச்சுக்கிறேன்...ஆஆ அப்புறம் ஒன்னு சொல்ல மறந்திட்டேன்...நாளைக்கு டின்னருக்கு உன்னையும் என்னையும் என் ப்ரண்ட் மது இன்வெயிட் பண்ணியிருக்காடா..?நீ ப்ரீதானே..?.."

"ம்ம்...ப்ரீதான்...என்ன ஸ்பெஷலாம் நாளைக்கு..??"

"அவளோட ஹஸ்பன்டோட பேர்த்டேயாம்...அவரோட ப்ரண்ட்ஸ் எல்லோரையும் கூப்பிட்டு சப்ரைஸா அவருக்கு கிப்ட் கொடுக்க போறாளாம்...அப்படியே எங்க கொஞ்சப் பேரையும் கூப்பிட்டு இருக்கா..."

"ஓஓஓ..."அவளுக்கு இப்போயாவது என் பிறந்தநாள் ஞாபகம் வராதா என்றிருந்தது எனக்கு...ஆனால் அவள்தான் அந்த சிந்தனையே இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்...

"சரி டா...நான் தூங்கப் போறேன்...பாத்திரமெல்லாம் இன்னைக்கு நீயே வோஷ் பண்ணிடு...எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு...குட்நைட் டா..."

"ம்ம்...குட்நைட் ..."

"நல்லா போய் தூங்குடி...இன்னைக்கு 12 மணி ஆகட்டும் அப்புறமிருக்கு உனக்கு கச்சேரி..."என மனதில் நினைத்துக் கொண்ட நான் அனைத்து பாத்திரங்களையும் கழுவி வைத்துவிட்டு அறைக்குள் நுழைந்தேன்...அங்கே அவள் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்...

"எதை விட்டாலும் இந்த டெடியை மட்டும் விடறாளா பாரு...இன்னைக்கு இரவு உன்னைக் கவனிச்சுக்கிறேன்..."

அலுவலக வேலைகள் சிலதை முடிக்க வேண்டி இருந்ததால் என் மடிக்கணணியோடு சென்று கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவாறே எனது வேலையில் முழ்கினேன்...அனைத்தையும் முடித்துவிட்டு நேரத்தை பார்த்த போது நேரம் பதினொன்று இருபதாகியிருந்தது...நித்திரை கண்ணைச் சுழட்டினாலும் இன்னும் சிறிது நேரத்தில் அவளை எழுப்பி செல்லச் சண்டை போட வேண்டுமென்பதால் சிறிது நேரம் பல்கனியில் சென்று நிற்கலாமென்று கட்டிலை விட்டு இறங்கினேன்...அப்போது எனது கையைப் பிடித்து யாரோ தடுப்பது போலே இருக்கவே மெதுவாகத் திரும்பிப் பார்த்தேன்...

வேறு யார் அந்த நேரத்தில் என் கையைப் பிடிக்கப் போகிறார்கள்...அவள்தான் என் கரத்தினைப் பிடித்திருந்தாள்...என்னவென்று கண்களாலேயே கேட்டேன்...கடிகாரத்தை ஒரு தடவை திரும்பிப் பார்த்தவள் லேசாக புன்னகைத்தவாறே எந்த ஒரு வார்த்தைக்காக இந்த நாள் முழுதும் காத்திருந்தேனோ அதை அப்போது சொன்னாள்...

"ஹப்பி பேர்த்டே ஷியாம்..."

அவளது அந்த "ஹப்பி பேர்த்டே ஷ்யாம்"என்றதிலேயே அவ்வளவு காதல் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது...அப்போதே அவளை அள்ளி அணைக்க வேண்டும் போல் எனக்குள் தோன்றிய ஆவலை அடக்கிய நான்,கோபமாக இருப்பது போல் காட்டிக் கொள்ளவே அவளது கைகளை உதறிவிட்டு வெளியில் சென்று நின்று கொண்டேன்...

என் பின்னால் வந்து என்னைக் கட்டிக் கொண்டவள்...

"என்ன சேர்..என் மேல ரொம்ப கோபமா இருக்குறீங்க போல...?.."என்றவாறே என் முன்னால் வந்து நின்று கொண்டாள்..

நான் அவளைக் கண்டும் காணாதது போல் முகத்தை திருப்பிக் கொண்டேன்...

"டேய் ரொம்ப பண்ணாதடா...அதான் என் மேல ஒரு கோபமும் இல்லைன்னு உன் முகமே சொல்லுதே...அப்புறம் எதுக்குடா ஓவரா பண்ற...?.."

"யாரு நான் ஓவரா பண்றனா...?நீ காலையிலிருந்து பண்ணத விடவா..?என் பேர்த்டேயை ஞாபகம் வச்சுகிட்டே தெரியாத மாதிரி இருந்திட்டு இப்போ எதுக்கு வந்து விஷ் பண்றாய்...?"

"என்ன பண்றது...என்னோட ஹிட்லர் புருஷன்தான் இப்படி நடுராத்திரியில பிறந்து தொலைஞ்சிட்டானே...அவன் பிறந்த நேரத்திற்கு விஷ் பண்ணி அவனுக்கு இந்த பிறந்தநாளை ஸ்பெஷல் கிப்டா கொடுக்கனும்னு நினைச்சேன்...இப்போ என்னடான்னா அவன்கிட்ட நல்லா வாங்கி கட்டிட்டு இருக்கேன்..."

அதற்குமேலும் அவளிடம் யாராவது கோபத்தை காட்டுவாங்களா..?அவள் அதை சொல்லி முடித்த அடுத்த விநாடியில் எனது இறுகிய அணைப்பினில் கைதாகியிருந்தாள்...

எனது அணைப்பினில் இருந்தவாறே அவள் பேசத் தொடங்கினாள்...

"யாரோ என் மேல கோபமாக இருந்தாங்க போல..?"

"அப்படியா...?யாருடி அது...எனக்குத் தெரியாம..?.."

"இதைதான்டா உலக மகா நடிப்பென்டு சொல்லுவாங்க..."என்றவள் என்னிடமிருந்து விடுபட்டவாறே மீண்டும் பேசத் தொடங்கினாள்...

"நேத்து நைட் 12 மணியிலிருந்து இன்னைக்கு நைட் வரைக்கும் நீ பண்ண எல்லாத்தையும் பார்த்திட்டு தானே இருக்கன்..."

"அடிப்பாவி...எல்லாம் தெரிஞ்சும் எப்புடிடீ உன்னால இவ்வளவு பொறுமையா இருந்து விஷ் பண்ண முடிஞ்சுது...?.."

"அதை ஏன்டா கேக்குற நீ நேற்று இரவு புலம்பிக்கிட்டு இருக்கும் போதே உன்னை கட்டிப்பிடிச்சு விஷ் பண்ணிடலாம்னுதான்டா தோனிச்சு....ஆனாலும் என்னைக் கட்டுப்படுத்திக்கிட்டேன்....எங்க உன்னை பார்த்தா உளறிடுவேன்னுதான் காலையிலேயே நீ எழும்புறதுக்கு முதலே ஓடிட்டேன்...காலையில ஒரு மீட்டிங் இருந்ததால எனக்கும் ரொம்ப வசதியா போச்சு...ஆனால் உன்னோட மதியம் போன்ல கதைச்சனே...அப்போதான்டா ரொம்ப அவஸ்தைப்பட்டுட்டேன்...எப்போடா இந்த நேரம் வரும்னு காத்திருந்து காத்திருந்தே என் கண்ணெல்லாம் பூத்துப் போச்சுடா..."

அவள் அதை ஏதோ நகைச்சுவை மாதிரிதான் சொல்லிக் கொண்டிருந்தாள்...ஆனால் என்னை விடவும் அவள் எவ்வளவு தவித்திருப்பாள் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது...

அவள் தலையினை கோதி அதில் மெதுவாக முத்தமிட்ட நான் அவளை என் மார்போடு அப்படியே அணைத்துக் கொண்டேன்...சில்லென்ற காற்று எங்கள் மேனியை வருட சிறிது நேரம் நம்மை மறந்து அணைப்பினில் ஐக்கியமாகியிருந்தோம்....அந்த இதமான வருடலை முதலில் கலைத்தது அவள்தான்..

"டேய் சும்மா ஒரு வோக் போயிட்டு வருவமா..?.."

எனக்கும் அந்த இனிய சூழலில் அவளோடு கைகோர்த்து நடக்க வேண்டும் போலவே இருந்தது...

"ம்ம்...போவோம்டி.."

வெளியே வந்த நாங்கள் பூந்தோட்டத்தின் நடுவேயிருந்த நீச்சல் குளத்தினை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்...அந்த இடம் எனக்கு எப்போதும் பிடித்தமானதொன்று...நம் கரங்களை கோர்த்தவாறே மௌனமாய் சென்று கொண்டிருந்தோம்...அந்த இதமான காற்றின் தீண்டலில் என்னவளோடு விரல்களைக் கோர்த்து சென்று கொண்டிருந்ததை என் மனம் மிகவும் ரசித்தது..அதுவரை நேரமும் என் மனதில் குடி கொண்டிருந்த மகிழ்ச்சி நீச்சல் குளம் அருகே வந்ததும் இன்னும் பன்மடங்கானது...

அங்கே அவள் எனக்காக மேலே படர்ந்திருந்த கொடிகளையும் பூஞ்செடிகளையும் இணைத்து எளிமையாக ஆனால் மிகவும் அழகாக அலங்காரம் செய்து நடுவே ஒரு மேசையில் கேக்கை வைத்திருந்தாள்...அதை பார்க்க பார்க்க என் மனம் இறக்கையின்றியே வானத்தில் பறக்கத் தொடங்கியது...அவளை அப்படியே தூக்கி எனக்குள் புதைத்துக் கொண்ட நான் அவளுள் என்னைத் தொலைக்க ஆரம்பித்தேன்...

"இதெல்லாம் எப்போடி செஞ்ச...?.."

"நீ வாறதுக்கு முதலே எல்லாம் வந்து ரெடி பண்ணிட்டு கிளம்பிப் போயிட்டேன்...சரி வா கேக் வெட்டலாம்..."

அவள் கரத்தினைப் பற்றியவாறே கேக்கை கட் பண்ணிணேன்...என் மனம் வார்த்தைகளில் சொல்லிட முடியாதளவிற்கு இன்பத்தில் பொங்கி வழிந்து கொண்டிருந்தது...ஒருவருக்கொருவர் கேக்கை ஊட்டிக் கொண்ட நாங்கள் நினைவுகளுக்காய் சில புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டோம்...எனக்காக அவள் செய்த கேக்கை போலவே என் மனமும் இனிமையாக இருந்தது...

அதன் பின் கிப்ட் பொக்ஸ் ஒன்றை என்னிடம் தந்து அதை திறந்து பார்க்கச் சொன்னாள்....ஊஞ்சலில் அவளருகே அமர்ந்தவாறே அதைப் பிரிக்கத் தொடங்கினேன்....அதில் ஒரு டையரி இருந்தது....முன் முகப்பிலேயே நம் இருவரின் புகைப்படமொன்று அழகாக பொருத்தப்பட்டு இருந்தது...அதனைத் திறந்து ஒவ்வொரு பக்கங்களாய் புரட்ட ஆரம்பித்தேன்....ஒவ்வொரு பக்கங்களிலும் எம்மிருவரின் நினைவுப் படங்களோடு அதைப்பற்றிய சிறு குறிப்புகளும் அவளது கவிதைகளில் அழகாக காட்சியளித்துக் கொண்டிருந்தது...

ஒவ்வொரு பக்கங்களையும் திருப்பும் போதும் என் கண்கள் கண்ணீரீல் நனைந்து கொண்டிருந்தது...ஓவ்வொரு புகைப்படங்கள் வரும் போதும் அந்த நிகழ்வினை நினைவு கொண்டு அன்று நடந்த இனிய தருணங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்தவாறே ஒவ்வொரு பக்கங்களும் கடக்க இறுதி பக்கமும் வந்தது...

அதில் மூவரை அவள் வரைந்திருந்தாள்...அதில் இருவர் நானும் அவளும்....மற்றையது மழலையொன்று நம் இருவருக்கிடையிலும் புன்னகைத்தவாறு அமர்ந்திருந்தது...எனக்கு ஏதோ புரிவது போல் இருக்க கண்ணில் வழிந்து கொண்டிருந்த ஆனந்தக் கண்ணீரோடே அவளைத் திரும்பிப் பார்த்தேன்....அவளும் கண்ணீரோடே சிரித்தவள் எனது கரத்தினை எடுத்து அவள் வயிற்றினில் வைத்தவாறே எனை நிமிர்ந்து பார்த்தாள்...

அந்த விநாடி எனக்குள் தோன்றிய உணர்வுகளைச் சொல்லிட அகிலம் முழுதிலும் தேடினாலும் வார்த்தைகள் கிடைத்துவிடாது....கீழே அவள் முன் மண்டியிட்டு அமர்ந்த நான் அவளுள் கருவாகியிருந்த என் உயிருக்கு முத்தமிட்டேன்....அப்படியே அவளை அணைத்து முத்தத்தில் அவளை நனைத்த நான் அவள் மடி மீது தலை சாய்த்துக் கொண்டேன்....என் தலையினை அவளின் கைவிரல்கள் கோதிக் கொண்டிருந்தது....என் மனம் என்றுமில்லாது அன்று மிகவும் அமைதியடைந்திருந்தது...

எனக்கென சொந்தமாக வந்த அவள் இன்று எனக்காக இன்னொரு உறவினையும் அவளுள் சுமந்து கொண்டிருந்தாள்....எப்போதும் ஒரு வெறுமையோடே கடக்கும் என் பிறந்ததினம் இன்று என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஓர் நாளாக மாறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை...இப்படியொரு பிறந்தநாள் பரிசினை என்னவளால் மட்டுமே தர முடியும் என்பதில் என் உள்ளம் மேலும் உவகை கொண்டது...அன்று நான் கூட புதிதாகப் பிறந்தது போல் தான் தோன்றியது எனக்கு...என்னோடு அவளும் சாய்ந்து கொள்ள இதுவைரையில் இருவராக இருந்த நாங்கள் அன்று மூவராக அந்த அழகிய தருணத்தில் மௌனமாய் ஒருவரோடு ஒருவர் மூழ்கத் தொடங்கினோம்....



இனி எல்லாம் வசந்தமே....

எழுதியவர் : அன்புடன் சகி (11-Sep-17, 9:24 am)
பார்வை : 1034

மேலே