இன்றைய தாலாட்டு

இன்றைய தாலாட்டு
பாவலர் கருமலைத்தமிழாழன்

ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ ஆரிரரோ

கண்ணுறங்கு கண்ணுறங்கு என்மகனே
கவிதையினைக் கேட்டுறங்கு என்மகனே
மண்ணிலின்று பெருகிவிட்டக் கயமைகளை
மாற்றவேண்டும் நீவளர்ந்து என்மகனே ! கண்ணுறங்கு

வளர்ந்திருந்த மரங்களினை வெட்டிச்சாய்த்தார்
வாழவைக்கும் காற்றுதனில் மாசைச்சேர்த்தார்
களம்நிறைத்த வயல்களினை விற்றுத்தீர்த்தார்
கரைதழுவி பாய்ந்தஆற்றில் கழிவுகலந்தார் ! கண்ணுறங்கு

விண்ணிலுள்ள ஓசோனை ஓட்டைசெய்தார்
வீதிகளைத் தீயாகக் கொதிக்கவைத்தார்
கண்போன்ற மலைகளினைப் பிளந்தழித்தார்
கசியாமல் மேகத்தைக் கலையவைத்தார் ! கண்ணுறங்கு

நெஞ்சினிலே தன்னலத்தை நிரப்பிவைத்தார்
நேர்மைக்குச் சாவுமணி அடித்துவைத்தார்
வஞ்சகத்தால் பிறர்வாழ்வைக் கெடுத்துவைத்தார்
வார்த்தைகளில் நஞ்சுதனைச் தடவிவைத்தார் ! கண்ணுறங்கு

ஆட்சியிலே அமர்ந்தவர்கள் கொள்ளையடித்தார்
அறிவுதரும் கல்விக்குக் கடைவிரித்தார்
நாட்டினிலே சாதிமதம் வளர்த்துவைத்தார்
நாளெல்லாம் கலவரத்தில் உயிர்பறித்தார் ! கண்ணுறங்கு

அழிக்காமல் இயற்கையினைக் காக்கவேண்டும்
அறிவியலை நன்மைக்காய் ஆக்கவேண்டும்
விழியாக மனிதத்தை வளர்க்கவேண்டும்
வீண்பகைமை வேற்றுமையைக் களையவேண்டும் ! - கண்ணுறங்கு

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (13-Sep-17, 7:21 pm)
பார்வை : 79

மேலே