நீரின்றி அமையாது உலகு

நீரின்றி அமையாது உலகு
பாவலர் கருமலைத்தமிழாழன்

நீரின்றி அமையாது உலகு என்ற
நிறையுண்மை அறிந்திருந்தோம் காத்தோம் இல்லை
வேரின்றி மரந்தன்னைக் காத்தல் போன்றாம்
வேண்டியநீர் இல்லாமல் வாழ்தல் இங்கே !
மாரியெனப் பெயும்நீரைத் தேக்கி டாமல்
மறுபடியும் கடலினிலே கலக்க விட்டால்
ஊரினிலே புல்பூண்டும் முளைத்தி டாது
உள்ளநிலம் பாலையாக மாறிப் போகும் !

காடுகளும் தோப்புகளும் இருந்த தாலே
கச்சிதமாய் மும்மாரி பெய்த தன்று
ஓடுகின்ற மேகத்தைத் தடுத்து நீரை
ஒழுகவைக்க ஓங்குமலை இருந்த தன்று
கேடுகெட்ட மனிதராக மாறி யின்று
கெடுமதியின் தன்னலத்தால் மலையைக் காட்டை
மாடுபயிர் மேய்தல்போல் மேய்ந்த தாலே
மழைபொழிவும் பாதியாகக் குறைந்த தின்று !

ஏரிகுளம் அத்தனையும் பட்டா போட்டே
ஏப்பமிட்டார் அரசியலார் ஆட்சி யாளர்
ஊரிலுள்ள விளைநிலத்தை மனைக ளாக்கி
உணவுதரும் ஊற்றுதனை அடைத்து விட்டோம் !
தேரினைப்போல் அசைந்துவந்த நதியின் நீரில்
தேவையற்ற கழிவுநீரைக் கலக்க விட்டோம்
உரித்தத்தோல் ஆடுகளாய் மணலெ டுத்தே
ஊறிவந்த ஆறுகளை மலடு செய்தோம் !
( 1 )ஆயிரமாய் ஆண்டுகளாய் நம்மின் முன்னோர்
அடுத்துவரும் தலைமுறைகள் வாழ்வ தற்குப்
பாயிரமாய் சேமித்து வைத்த நீரைப்
பகற்கொள்ளை போல்மண்ணில் துளையைப் போட்டு
வாயினிலே உறிஞ்சல்போல் உறிஞ்சிச் சேய்கள்
வாழ்வதற்குக் கிஞ்சித்தும் விட்டி டாமல்
மாயிருளில் உலகத்தை மூழ்க வைக்கும்
மதியில்லா செயல்களினைச் செய்யு கின்றோம் !

அறிவியலில் முன்னேறி அடுத்த கோளில்
ஆய்வுசெய்து கால்வைக்கும் அறிவு பெற்றும்
அறிவிலியாய்க் காற்றுதனை மாசு செய்தோம்
ஆகாய ஓசோனை ஓட்டை செய்தோம்
வெறிகொண்டு பணந்தன்னைச் சேர்ப்ப தற்கே
வேர்போன்ற இயற்கையினை குலைத்து விட்டோம்
நெறிமறந்தோம் ஒழுக்கத்தை விட்டு விட்டே
நேர்மையற்ற வழிகளைனைத் தேர்ந்து கொண்டோம் !

நிலமாக ஒருபங்கும் மூன்று பங்காய்
நீராகச் சுற்றியிங்கே உள்ள போதும்
நிலந்தன்னில் நீருக்கேன் தட்டுப் பாடு
நிறைந்திருந்தும் ஏனிந்த அவலப் பாட்டு
புலம்சூழ்ந்த கடல்நீரைத் தூய்மை யாக்கிப்
புவிமுழுதும் பயிர்களினை விளைய வைப்போம்
நலமாகக் குடிநீராய் மாற்றம் செய்து
நலிவில்லா வாழ்க்கையினை அமையச் செய்வோம் !

( 2 )
நல்லதொரு திட்டந்தான் வகுத்து நீரை
நாமின்று சேமிக்க வில்லை யென்றால்
நெல்லுமிங்கே விளையாது குடிப்ப தற்கு
நெய்குடத்து அளவுநீரும் கிடைத்தி டாது
பொல்லாத உலகப்போர் மீண்டும் வந்தே
பொருதழிவர் நீருக்காய் பகைமை யாகி
எல்லோரும் ஒன்றிணைவோம் உலகி லுள்ள
எல்லாநீர் நிலைகளையும் பொதுமை செய்வோம் !

மரம்வளர்ப்போம் மலைகளொடு குளங்கள் ஏரி
மலையருவி ஆற்றோடு நதிகள் காப்போம்
வரமான மழைநீரை வாய்க்கால் வெட்டி
வடிவமைத்த நீர்நிலையில் தேக்கி வைப்போம்
உரமாக நதிகளினை இணையச் செய்து
உபரிவறட்சிப் பகுதிகளை சமமாய் செய்வோம்
கரமிணைவோம் வரும்நீரை வீணாக் காமல்
காத்துலகை வளமுடனே வளரச் செய்வோம் !


( 3 )

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (13-Sep-17, 7:23 pm)
பார்வை : 154

மேலே