திருவையாறு – காவிரிக்கரையிலிருந்து சில இசை நினைவுகள்------------------ படித்தது

கட்டுரையாளர் முனைவர் .ராம.கெளசல்யா திருவையாறு இசைக்கல்லூரியின் ஓய்வுபெற்ற முதல்வர். இசை ஆய்விலும், மரபுவழி இசையைப் பாதுகாப்பதிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவர். தில்லைஸ்தானத்தில் வசித்துவரும் இவர் ‘மரபு’ என்ற அறக்கட்டளையை ஏற்படுத்தி நம் மரபுசார் கலைகளையும், கலாசாரத்தையும் வளர்ப்பதற்கானப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவருகிறார். குறிப்பாக, சிறு குழந்தைகளுக்கு நம் மண்சார்ந்த விளையாட்டுகள் முதல், மண்சார்ந்த இசை வரையிலான பல்வேறு விஷயங்களில் பயிற்சியளிப்பதில் ஈடுபட்டுவருகிறார். அந்த வகையில் தேவாரப்பாடல் பயிற்சி, பழைய காலக் குழந்தைகளின் விளையாட்டுகளைக் கற்றுத்தருதல், கோலம், கும்மி, கோலாட்டம் உள்ளிட்ட கலைகளில் பயிற்சி ஆகியவற்றுக்கான பட்டறைகளை இலவசமாக நடத்துகிறார். இது தவிர, இசை தொடர்பான பல்வேறு செயல்முறை விளக்கங்கள் தருவதையும், ஆய்வுக்கட்டுரைகளை எழுதுவதையும் செய்து வருகிறார். நமது திருக்கோயில்களின் இசை மரபுகள் தொடர்பாக நல்ல நூலொன்றையும் அவர் எழுதியிருக்கிறார்.



திருவையாறு என்று சொன்னாலே சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகப்ரம்மமும், கர்நாடக சங்கீதமும்தான் நினைவு வரும். அனைவரும் பக்தியுடன் நினைக்கும் இசை மையம் அது. இங்கு இசை கற்பிக்கும் மையம் ஒன்று இல்லாதது பெரிய குறையாகவே இருந்தது. பெங்களூர் நாகரத்தினம்மா உள்படப் பலரும் முயன்றும் அது நீடித்து நடக்கவில்லை. 1965 இல் தஞ்சாவூர் கலெக்டராக இருந்த திரு. வேத நாராயணன் அவர்களின் சீரிய முயற்சியால் சத்திரம் நிர்வாகத்தின் கீழ் அரசர் இசைக் கல்லூரி துவங்கப் பட்டது. சத்திரங்கள் என்பன, தஞ்சை மராட்டிய மன்னர்களால் உணவு, கல்வி, மருத்துவம் போன்ற மக்கள் சேவைக்காகத் தொடங்கப் பட்டவை. ராமேஸ்வரம் வரை யாத்ரீகர்கள் தங்கி உணவு உண்டு செல்ல இவை உதவின. இத்தகைய சத்திரங்கள் நிறைய சொத்துக்களோடு அப்போதைய டிஸ்ட்ரிக்ட் போர்டின் கீழும், பின்னர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் கீழும் சத்திரம் நிர்வாகம் என்ற பெயரில் இயங்கி வரத் தொடங்கின.

திருவையாற்றிலுள்ள கல்யாண மஹால் கட்டிடத்திலொரு பகுதி கல்லூரிக்காக ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே அங்கு சம்ஸ்கிருத, தமிழ்க் கல்லூரி ஒன்று இருந்தது. குப்புஸ்வாமி சாஸ்திரிகள், பி. சுப்பிரமணிய சாஸ்திரிகள் போன்ற மாமேதைகள் பணியாற்றிய கட்டிடம் அது. கட்டிடத்தைத் தொட்டுக் கொண்டு காவிரி சுழித்தோடும். தண்ணீருக்குள் நுழைந்து நிற்கும் வகுப்பறையின் இயற்கைச் சூழலைப் பார்த்தால்தான் அந்த அற்புதம் விளங்கும். இசைக் கல்லூரியின் தொடக்க விழாவே அப்போதைய இசை உலக ஜாம்பவான்களான அரியக்குடி, மஹாராஜபுரம் ஆகியோர் கலந்து கொண்ட பெரிய நிகழ்ச்சியாக அமைந்தது. திருச்சி வானொலி நிலையம் அதன் நிகழ்வுகளைச் செய்தி மலரில் ஒலி பரப்பியது. திருவையாறு திரு. செல்லம் அய்யர் அதற்கான ஏற்பாடுகளை ஓடி ஓடிச் செய்தார்.

அக்கல்லூரியில் பயின்ற நான்கு ஆண்டுகளும் என் வாழ்க்கையின் அற்புதமான காலகட்டம். சென்னைப் பல்கலைக் கழகத்தின் சங்கீத சிரோன்மணி படிப்பு நடத்தப்பட்டது. நல்ல பாடத் திட்டம். நானும் விமலாவும்தான் முதல் குழு மாணவிகள். மெயின், துணைப் பாடம் என்ற வேறுபாடில்லாமல் எல்லாரும் எல்லாமும் கற்றோம். நேரம், காலம் பார்க்காமல் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பாடம் நடத்தினார்கள். அந்த நினைவுக் கடலில் இருந்து சில அலைகள் இங்கே.


சித்தூர் சுப்ரமணிய பிள்ளை
இசைக் கல்லூரியின் முதல் முதல்வராக சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை பதவி ஏற்றார். தமிழ்க் கல்லூரி முதல்வருக்கே ஊதியம் ரூபாய் 300ஐத் தொடவில்லை. இவருக்கு ஊதிய்ம் ரூ.850. சித்தூரார் குழந்தை மாதிரி. யார் எதைச் சொன்னாலும் நம்பி விடுவார். மிகச் சிறந்த ஆசிரியர். மணிக் கணக்கில் பாடம் எடுப்பார். கல்லூரி வேலை நேரச் சட்ட திட்டமெல்லாம் அவரைக் கட்டுப்படுத்த முடிந்ததில்லை. சில நாட்கள் அவர் வகுப்பு எடுத்து முடித்து வெளியில் வரும்போது இருட்டத் தொடங்கி, தெரு விளக்கு கூடப் போட்டு விடுவார்கள். வகுப்பு சொல்லிக் கொடுக்கத் துவங்கினால் நேரம் காலம் போவது அவருக்கும் தெரியாது, மாணவியருக்கும் தெரியாது. சரளி வரிசைக்குக் கூட மூன்று காலம் சாகித்தியம் கற்றுத் தந்தார். ஸ்ரீராமேசா ராமா பாஹி; ஸ்ரீவத்சாங்கா க்ருஷ்ணா பாஹி என்று ஆரோஹண்ம், ராமர் குறித்தும், கிருஷ்ணர் குறித்தும் இருக்கும். சங்கீதத்துக்கு நல்ல அழுத்தமான அஸ்திவாரம் போட்டுக் கொடுத்தார். முழுத் தொண்டையில் பாடினால்தான் ஒப்புக் கொள்வார்.

அவரிடம் பெற்ற அஸ்திவாரத்தால்தான் நாங்கள் எல்லாரும் மேலே நன்கு வளர முடிந்தது. அப்போது எங்கள் தாத்தாவுக்குத் தஞ்சாவூரில் சதாபிஷேகம் நடந்தது. ‘நான் தான் பாடுவேன்’ என்று அவராகவே முன் வந்து அன்று மாலைக் கச்சேரி செய்தார். அவருக்கு திரு. சிக்கில் பாஸ்கரன் அவர்களை மிகவும் பிடிக்கும். அந்த கால கட்டத்தில் அவர்தான் சித்தூரார் கச்சேரிகளுக்கு வயலின் வாசித்து வந்தார். அப்போதெல்லாம் கடிதம் மூலம்தான் தொடர்பு கொள்ள முடியும். இன்றைய தொலை தொடர்பு வசதிகளெல்லாம் அன்று கிடையாது. எங்காவது கச்சேரி என்றால் பாஸ்கரனுக்குக் கார்டு எழுத என்னைக் கூப்பிடுவார், எழுதிக் கொடுப்பேன். கையில் பணமே வைத்துக் கொள்ளத் தெரியாது. கச்சேரிக்குப் போய் விட்டு வந்த இரண்டாம் நாள் எல்லாப் பணத்தையும் செலவழித்து விட்டு, நாவிதருக்கு நாலணா கொடுத்தனுப்பும்படி பக்கத்து வீட்டு சாரதாம்மாவுக்குக் குரல் கொடுப்பார். மூலக் கச்சம், ஜிப்பாவுடன் ஜவ்வாது மணக்க வாக்கிங் ஸ்டிக்கைப் பிடித்தப்டி சிம்மம் போல நடந்து வருவார். அவரிடம் திருப்பதியில் மாணவராக இருந்த லோகநாத சர்மாதான் கச்சேரிகளில் அவருடன் பாடுவார். சர்மாவைப் பார்த்தால் எங்களுக்கு அவ்வளவு பொறாமையாக இருக்கும். சிஷ்யர்களுக்கு சாப்பாடு போட்டுக் கற்றுக் கொடுத்து ஊருக்குப் போகும்போது கையில் பணமும் கொடுத்து அனுப்புவார். வகுப்பில் பாடம் எடுக்கும்போது கல்லூரியில் உதவியாளர் குப்புசாமி தம்புரா போட, கல்யாணி பாகவதர் உதவிக்குப் பின்னால் அமர்ந்து பாட, ஏறத்தாழ ஒரு கச்சேரி கேட்கும் சூழலே இருக்கும். அவருடைய மரியாத காதையாவும், மதுராநகரிலோவும் இன்னமும் காதில் ஒலிக்கின்றன. இப்போது கூட சிக்கில் பாஸ்கரன், சர்மா ஆகியோரை நான் சந்திக்கும்போதெல்லாம் சித்தூராரின் குழந்தை மனது, வித்வத், பரந்த நோக்கம் ஆகியவறறைப் பற்றி நினைவு கூர்ந்து கண் கலங்குவோம். அன்று ஃபுல் பெஞ்சுக் கச்சேரி என்று அழைக்கப் பட்ட சகல பக்க வாத்தியங்களும் நிறைந்த கச்சேரியை அனுபவித்தவர்களுக்கே, சித்தூராரின் மேடை நிர்வாகம் புரியும்.

வீணை வகுப்பு நடத்திய தஞ்சாவூர் திரு.கே.பி. சிவானந்தம் அவர்கள் தஞ்சை நால்வரின் வழித் தோன்றல். தஞ்சாவூர் க.பொன்னையா பிள்ளை அவர்களின் குமாரர். நல்ல அழுத்தம், திருத்தமான சம்பிரதாய சுத்தமான வீணை வாசிப்புக்குச் சொந்தக்காரர். ஆணி அடித்தாற்போல், நங்கூரம் போட்டாற்போல நிற்கும் காலப்பிரமாணம். இவருடைய கம்பீரமான வாசிப்புக்கு இணையாகக் குழைந்து வாசிப்பார் சாரதாம்மா (திருமதி. சி.ஆர். சாரதா). திரு. சிவானந்தம் வகுப்பு எடுக்கும் முறை மிகக் கம்பீரமாக இருக்கும். இவரும் அடிப்படைப் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். வகுபபில் எத்துணை மாணவிகள் இருந்தாலும், அத்துணை பேருக்கும் தனித்தனியாகத்தான் புதுப் பாடம் எடுப்பார். அவர் வாசிப்பது போன்றே திரும்ப நாம் வாசிக்கும் வரை விட மாட்டார். யாருடனும் அனாவசிய அரட்டை அடிப்பதோ, யார் வீட்டிற்கும் போவதோ இவருக்குப் பிடிக்காது. வகுப்பிலும் பாடம் தவிர எதுவும் பேச மாட்டார். சரியாக வாசிக்காவிட்டால் கோபப்பட மாட்டார். “என்னய்யா, காலைல நல்லா சாப்டியா?” என்று கேட்பார். உயிரே போய் விடும்.

ஒருமுறை அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்த ஒரு வீணை வித்வானின் கச்சேரியைக் கேட்டோம். அந்த வயதில் அந்த துரிதமான காலப்ரமாணத்தின் மீது ஓர் ஈர்ப்பு. மறுநாள் மதியம் ஓய்வு நேரத்தில் நானும் சரஸ்வதியும் ’ஸ்ரீ ரகுகுல’ என்ற ஹம்சத்வனி ராகக் கீர்த்தனையை ஏகக் குஷியுடன் மகா துரிதமாக வாசித்துப் பார்த்தோம். அந்தப் பக்கமாக வந்த சிவானந்தம் சார், “எங்கேய்யா போய் இந்தக் காலப்ரமாணத்தை ஈஷிக் கொண்டு வந்தே” என்றாரே பார்க்கலாம். அவர் முகத்தில் இருந்தது கோபமா, வருத்தமா என்று தெரியவில்லை. இருவரும் ஒடுங்கிப் போய் விட்டோம். காலப்ரமாணத்தை மாற்றி வாசிக்கும் ஆசையை அன்றைக்கு விட்டதுதான். இவர் சொல்லிக் கொடுக்கும் கீர்த்தனைகளை ஆண்டுக் கணக்கில் வாசிக்காமலிருந்து விட்டு திடீரென்று ஒரு நாள் வாசித்துப் பார்த்தாலும், உடனே வாசிக்க முடியும். அந்த அளவுக்குப் புகட்டி இருப்பார்.



சாரதாம்மாவின் வீணை வகுப்பு சற்று வித்தியாசமானது. நன்றாகப் பாடுவார். சாகித்தியத்தை முழுவதும் பாடியபடியே கற்றுத் தருவார். கை அவ்வளவு குழைவாக இருக்கும். நிறைய கற்றுத் தந்தார். அவர் சென்னை சென்ட்ரல் கல்லூரியில் படித்த காலத்து ஆசிரியர்களான ஃபிடில் திருவாலங்காடு சுந்தரேசய்யர் போன்றவர்களை நினைவு கூர்ந்து, அவர்களைப் பற்றிய, அவர்கள் வாசிப்பைப் பற்றிய செய்திகளை எல்லாம் எங்களுடன் பகிர்ந்து கொள்வார். நல்ல உழைப்பாளி. வீட்டில் சமையல் உள்ளிட்ட எல்லா வேலைகளையும் செய்வார். இருவருமே என்னைச் சொந்த மகள் போலவே கருதினார்கள். அவர்களுடைய சதாபிஷேகம் திருக்கடையூரில் நடந்த போது சாரதாம்மா என்னைக் கூப்பிட்டு ஆரத்தி எடுக்கச் சொன்னதை அடிக்கடி பெருமையுடன் நினைத்துக் கொள்கிறேன். தங்களுடைய குடும்ப நிகழ்வுகளைக் கூட அந்தரங்கமாக என்னிடம் பகிர்ந்து கொள்வார்கள். “நம்ம குழந்தை ப்ரின்ஸிபலாக ஆகியிருக்கிறாள்,” என்று நான் முதல்வரானதை எல்லாரிடமும் சொல்லிப் பெருமைப்படுவார்கள். சிவானந்தம் சார் குடும்பம் எங்களுக்கு மூன்று தலைமுறையாக நெருக்கம். ஆகவே, என்மீதும், எங்கள் குடும்பத்தின் மீதும், ஏக ஒட்டுதல். இது கடைசி வரை இருந்தது.

வாய்ப்பாட்டு விரிவுரையாளர் ஸ்ரீவாஞ்சியம் திரு. ராமச்சந்திர அய்யர். மிகவும் ஆசாரக்காரர். பஞ்சகச்ச வேட்டியைத் தூக்கிப் பிடித்தவாறு யார் மீதும் படாமல் தாண்டி வருவார். வெள்ளிக்கிழமைகளில் மாணவிகளுக்குக் குங்குமப் பிரசாதம் கொடுப்பார். அன்று பைரவி ஸ்வரஜதி காமாக்ஷியும், ஹிந்தோள கிருதி நீரஜாக்ஷி காமாக்ஷியும் கட்டாயம் பாடவேண்டும். ‘பாதக முலனு தீர்சி ஸ்ரீபத பக்தி சந்ததம் ஈயவே’ என்ற வரியை நிரவல் செய்வார். பாட முடியாமல் உணர்ச்சிப் பெருக்கில் தொண்டை அடைத்து விடும். அதே போல நீரஜாக்ஷி பாடும்போதும் கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் கொட்டும். அந்த நேரங்களில் அந்த உணர்ச்சிகள் புரியவில்லை. இப்போது புரிகிறது. அவர் தீக்ஷிதர் பரம்பரையைச் சேர்ந்தவர். சுப்பராம தீக்ஷிதரின் சங்கீத சம்பிரதாயப் ப்ரதர்சினிதான் அவரின் சட்டப் புத்தகம். ராக லக்ஷணங்களைப் பொருத்தவரை அது சொல்வதுதான் வேத வாக்கு.

இவர் பாடும் சங்கதிகள் சற்று சிக்கலாக இருக்கும். ஆனால், “அவரவர் குரலுக்கு எது தோதோ, அந்த சங்கதிகளை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள், போதும்” என்று சொல்லி விடுவார். யாரும் பாடாததைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று ஆசையுடன் சொல்லிக் கொடுப்பார். “பிடித்துப் பாடு. கொடுத்து வாங்கி ஒதுக்க சதுக்கத்துடன் பாடணும்.” என்றெல்லாம் அடிக்கடி சொல்வார். திரிகாலப் பல்லவி போன்ற கடினமான பல்லவிகள், பழைய பிரபந்தங்களெல்லாம் அவருக்கு நல்ல பாடம். தனிப்பட்ட முறையில் அவைகளை நான் வேலைக்கு வந்த பிறகு சொல்லித் தந்தார்.

இவர் காஞ்சி மடத்தின் ஆஸ்தான வித்வான். (அப்போது இவர் மட்டும்தான் ஆஸ்தான வித்வான்.) ஒரு முறை சங்கராச்சாரியார் திருவையாறு விஜயம் செய்த போது இவர் ஆடிய சம்பு நடனம் பார்த்தோம். அந்த ஸ்லோகங்களின் எழுத்துக்களுக்குக் கொம்பும் கிடையாது; காலும் கிடையாது. பரமாச்சாரியார் இவரை இதைச் செய்யச் சொன்னதில் இவருக்கு ஏக மகிழ்ச்சி. வகுப்பில் நவாவரணக் கீர்த்தனைகளைப் பாடம் சொல்ல மறுத்து விட்டார். அவை பீஜாக்ஷரங்கள் நிரம்பியவை, பெண் குழந்தைகள் உள்ள வகுப்பில் சொல்லித் தரக் கூடாது என்று பிடிவாதமாக மறுத்து விட்டார். அதே போல பாடல்களை சுரப்படுத்தி எழுதிப் பாடுவதும் பிடிக்காது. ”எல்லாம் எழுதற சங்கீதமாப் போயிடுத்து” என்று நொந்து கொள்வார். வகுப்பில் நோடடைப் பிரித்தால் “இலை போட்டதைப் போல நோட்டைப் பிரித்துக் கொண்டு என்ன சங்கீதம் இது?” என்று அலுத்துக் கொள்வார்.

ஸ்ரீவாஞ்சியம் சுப்பராம அய்யர் (வீணை பாலச்சந்தரின் கொள்ளுத் தாத்தா) பாடல்களை எல்லாம் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். நிறைய அபூர்வமான உருப்படிகள் தெரிந்தவர். இவர் மனைவி ரொம்பத் தங்கமானவர். இவர் உடைகளைப் பராமரிபபது முதல் வெற்றிலை வாங்கித் துடைத்துப் பெட்டியில் வைப்பது வரை பார்த்துப் பார்த்து செய்வார். பெண் குழந்தை இல்லாததால் பண்டிகை நாட்களில் எங்களைக் கூப்பிட்டு சாப்பிடச் சொல்வார். மிக நல்ல மனுஷி.

மறுவருடம் வாய்ப்பாட்டு விரிவுரையாளராகச் சேர்ந்தார் ஸ்ரீரங்கம் திரு. கிருஷ்ணமூர்த்தி ராவ். இவர் மருங்காபுரி கோபாலகிருஷ்ண அய்யரின் சிஷ்யர். ஹரிகதை ஸ்ரீரங்கம் திரு. வெங்கடரமண ராவ் அவர்களின் தம்பி. சென்னை இசை உலகத்துடன் நல்ல தொடர்பு வைத்திருப்பார். ஸ்வரசாஹித்யம் பக்காவாக எழுதிய நோட்டு வைத்திருப்பார். எழுதிக் கொண்ட பிறகுதான் பாடம் தொடங்குவார். சரியாக எழுதிக் கொள்ளாவிட்டால் பிடிக்காது. ஒரு கால் புள்ளி அரைப் புள்ளி கூட மாற்றிப் பாட அனுமதிக்க மாட்டார். பர்ஃபெக்‌ஷனிஸ்ட். அப்படியே பாட வேண்டும். இவர் வகுப்பு என்றாலே ஏக பயபக்தி. உழைத்துச் சொல்லிக் கொடுப்பார். ”பின்னாலுள்ள ஸ்வரங்களெல்லாம் குண்டு குண்டாக விழணும், நசுங்கக் கூடாது,” என்பார். ஓய்வு பெறும் சமயத்தில் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்த போது, “எந்த உருப்படியுமே பாடிப் பாடி அனுபவம் பெற்றால்தான் அதன் உண்மை ஸவரூபம் புரியும்.” என்று சொன்னவர், “இப்போதுதான் எனக்கு சங்கராபரண ராக ஆதி தாள வர்ணம் புரிகிறது.” என்றார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. இவ்வளவு அனுபவம் உள்ள இவர் என்ன இப்படிப் பேசுகிறார் என்று ஆச்சரியப் பட்டேன். ஆனால், இன்று நான் இதையே சொல்கிறேன்.

தம்முடைய கல்லூரி அனுபவங்களில் ஒன்றை அடிக்கடி பகிர்ந்து கொள்வார். ஓர் அரசு நிகழ்ச்சிக்கு மாணவிகளை அழைத்துக் கொண்டு போயிருக்கிறார். சிறப்பு விருந்தினர் வர நேரமானதில் மேடைக்குப் பின்புறம் அமர்ந்திருக்கிறார். சிறப்பு விருந்தினர் வந்ததும் அரக்கப் பரக்க ஓடி வந்த ஓர் அலுவலர் நிகழ்ச்சி நடத்த இவர்களை மேடைக்கு அழைத்திருக்கிறார். உடனே, இவர் தம்புராவைச் சரி பார்த்திருக்கிறார். அந்த அலுவலருக்குக் கோபம் வந்து விட்டது. ”என்ன சார் இது? இந்த நிகழ்ச்சி பற்றி உங்களுக்கு ஒரு மாசம் முன்னமே சொல்லியாகி விட்டது. இங்கு வந்தும் இத்தனை நேரம் உட்கார்ந்திருந்தீங்க. இப்ப போய் வீணையைத் தயார் பண்ணறீங்க. முன்னாடியே இதையெல்லாம் செஞ்சு வைக்கக் கூடாதா?” என்று கேட்டாரே பார்க்க வேண்டும். “தம்புராவைப் பற்றி இவருக்கு எப்படி விளக்கிச் சொல்வது? எனக்கு வேற ஒண்ணும் தோணலை அம்மா. ஒரு கால் கடுதாசி எழுதிக் கொடுத்து விட்டு வெளியில் போகும்படி என்னை பகவான் வைக்கவில்லையே என்று நினைத்துக் கொண்டேன்.” என்று சொல்லுவார்.

ஓய்வு பெற்ற பிறகு இவர் விருப்பப் படியே சென்னையில் குடியேறி, வசதி வாய்ப்புகளுடன் இருந்தார். நாங்கள் இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதி முடித்தோம். அப்போது சித்தூரார், திரு. சிவானந்தம், சாரதாம்மா ஆகியோர் கல்லூரியில் இருந்து விலகும்படி நேரிட்டது. திரு. டி.வி. நமச்சிவாயம் துறைத் தலைவர் ஆனார். நல்ல பாடாந்திரம் உள்ளவர். சுரதாளக் குறிப்புகளைத் தனித் தனித் தாளில் அழகான கையெழுத்தில் எழுதி வைத்திருப்பார். அதை எழுதிக் கொண்ட பிறகே இவரும் பாடம் எடுப்பார். நல்ல பங்கீடாக மாணவிகளுக்கு வரவழைக்கும் லாகவம் தெரிந்தவர். மனதில் பதிய வைப்பார். வீணையில் எனக்கும், விமலாவுக்கும் தேர்வு நேரத்தில் கானடா, தேவ மனோஹரி போன்ற ராகங்களுக்கு ஆலாபனை, சுரம் கற்றுத் தந்தார். ராக நுணுக்கத்தைப் புரிய வைத்து விடும் நுட்பம் தெரிந்தவர். நல்ல செல்வாக்கு உள்ளவர். இவருடைய மனைவியும், அவர் அக்கா மரகதம் அக்காவும் மாணவிகளிடம் மிகவும் பிரியமாக இருந்தார்கள். மரகதம் அக்கா நல்ல நிர்வாகியும் கூட. நாங்கள் நான்கு ஆண்டுகள் படித்து முடித்த பிறகு கல்லூரிக்கு ஏதோ ஒரு விருந்தினர் குழுவை அப்போதைய கலெக்டர் திரு.டி.வி.அந்தோணி அவர்கள் அழைத்து வருவதாக இருந்தார். எங்களை எல்லாம் அதற்கு நமச்சிவாயம் சார் அழைத்திருந்தார். எல்லாரும் பட்டுப் புடவை எல்லாம் கட்டிக் கொண்டு கல்லூரிக்குப் போனோம். நிகழ்ச்சிக்காகக் கல்லூரியின் கீழ்த் தளத்தில் நடந்து வந்து கொண்டிருந்தவர் அப்படியே எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கையில் சரிந்து விட்டார். மாரடைப்பு. கண்ணெதிரே பார்த்த அந்த மரணம் அனைவரையும் உலுக்கி விட்டது. அந்த உயர்ந்த சங்கீதம், அனுபவம், கற்றுத் தரும் திறமை எல்லாம் நொடியில் கண் முன்னால் மறைந்தது மிகவும் கொடுமை.

இசைக்கல்லூரி மாணவ மாணவிகள் அனைவராலும் போற்றப்படும் ஆசிரியர் ஆர்விகே சார் என்று அழைக்கப்படும் பேராசிரியர் ஆர்.வி.கிருஷ்ணன் தியரி விரிவுரையாளராக இருந்தார். இவர் வகுப்பு நடத்தும் விதமே அலாதியானது. வகுப்புக்கு வந்ததும், முதல் நாள் அல்லது அன்று காலை நேரிலோ, வானொலியிலோ கேட்ட கச்சேரி குறித்து, கேட்டவர்கள் விவரம் சொல்ல வேண்டும். விடுமுறை முடிந்து வந்தாலும் இவை பற்றிப் பேச வேண்டும். பாடப்பட்டவற்றில் சந்தேகம், விமர்சனம் போன்ற எதுவும் அதில் இடம் பெறலாம். சதுர்தச ராக மாலிகை, 108 ராக தாள மாலிகை எல்லாம் பாடிக் காட்டுவார். நல்ல இசைப் பரம்பரையில் வந்தவர். வீணை வரதய்யாவின் குமாரர். அரசுத் தேர்வுகளுக்கான தியரி புத்தகங்களை நல்ல தமிழில் எழுதியவர். பின்னர் சென்னை அரசு இசைக் கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மாணவிகளின் தேர்வு அச்சம் போக்கி அவர்களைத் தேர்வுகளுக்குத் தயார் செய்யவென்றே அழகாகத் திட்டம் வகுத்து வைத்திருந்தார்.

முதலில் எல்லாப் பாடங்களுக்கும் ஒரு திருப்புதல். அடுத்து விவாதப் பட்டியல். ஒவ்வொரு மாணவியும் ஒரு தலைப்பிலான கேள்விகளுக்கான விடைகளைச் சொல்ல வேண்டும். ஏதும் விட்டுப் போயிருந்தால் மற்றவர்கள் எடுத்துச் சொல்வார்கள். நிறைவாக, அவர் அதை இன்னும் எப்படி முழுமைப் படுத்தலாம் என்று பேசுவார். அடுத்த நிலைக்குப் பெயர் ‘Around the question pad.’ பழைய வினாத்தாள்கள் அலசப்படும் பகுதி இது. மேலும் அத்தலைப்பில் ஏதும் வினா கேட்க முடியுமா என்று ஆராய்ந்து விடைகளைக் கூறிப் பார்ப்போம். இதன் பிறகுதான் திருப்புத் தேர்வுகள். இதற்குப் பிறகு எந்த மாணவிக்காவது தேர்வு அச்சம் தோன்றுமா? படித்து முடித்த மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு ஆலோசனைகளை வழங்கி, எங்கு பணியிடம் காலியாக இருக்கிறது என்று தெரிந்து, அவர்களை அப்பணியில் அமர்த்தி நிறைவு காணும் அன்புள்ளம் கொண்டவர். இன்றைக்கும் சென்னையில் திருவான்மியூரில் இவருடைய வீட்டில், இவரிடம் பயின்ற மாணவ, மாணவிகள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பிரச்சினைகளைச் சொன்னால் அழகாகத் தீர்வு காணும் வழியைச் சொல்வார்.

கலை உலகில் எந்த குருவுக்கும் வளர்ந்து தமக்குச் சமமாக வந்து விட்ட மாணவனிடம் தனக்குப் போட்டி என்ற பார்வை மனதோரத்தில் சிறிதாவது வரும். இது இயற்கை. இதற்கு விதிவிலக்கு ஆர்.வி.கே சார். இப்போது கூட அடிக்கடி தொலைபேசியில் பேசி நலம் விசாரித்துக் கொள்வோம். மனதார வாழ்த்துவார். இவருடைய மொழி நடையும் கலகலப்பான பேச்சும் அவரிடம் மரியாதை கலந்த அன்பு வைக்கச் செய்யும்.

மறக்க முடியாத ம்ற்றொரு வீணை ஆசிரியர் ராஜலட்சுமி அவர்கள். பாடத் திட்டத்தைத் தவிரவும், பாடல்களைக் கற்றும் கொடுத்து சிறு கச்சேரிகள் செய்ய ஊக்கம் கொடுப்பார். அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்ல அலுக்காமல் உடன் வருவார். இரவு எந்நேரமானாலும் வீட்டில் கொண்டு வந்து ஒப்படைத்து விட்டுத்தான் வீட்டிற்குச் செல்வார். அதேபோல ஒருவர் காரைக்குடி பரம்பரையில் வந்த வசந்தா அவர்கள். வீணை சங்கரி அவர்களின் மகள் இவர். தஞ்சாவூர் பாணியில் பழகிய எங்களுக்குப் பொறுமையாக காரைக்குடி பாணியை அறிமுகம் செய்து வைத்தார். சிட்டை தாளங்களை இவர் கற்றுக் கொடுத்த பாங்கு மறக்க முடியாதது. மிக அமைதியானவர்.

மொழிப்பாட ஆசிரியர் திரு. அனந்த சுப்பிரமணியம் அவர்கள் தமிழோடு, தெலுங்கும், சம்ஸ்கிருதமும் சொல்லிக் கொடுத்தார். நன்றாகப் பாடுவார். துளசி தளமு (மாயாமாளவ கௌளை ராகக் கிருதி) பாடிக் கொண்டிருந்தேன். ”சரணத்தில் அரை இடம் தள்ளி சுரம் பாடிப்பார் .” என்றார். பாடிப் பார்த்தால் நல்ல பிடிப்புடன் வந்தது. இப்படி நுட்பமான உத்திகள் சொல்வார். நல்ல ஞானஸ்தர். பாடம், கச்சேரிகளைத் தவிர இசை அறிவை எங்களுக்கு வளர்த்த வேறு விஷயங்களும் உண்டு. எங்கள் ஆசிரியர்களைப் பார்க்க வருபவர்களுடன் அவர்கள் பேசும்போதும், ஆசிரியர்கள் தங்களுக்குள் பேசும்போதும் நிறைய செய்திகள் கிட்டும்.

சிவானந்தம் சாரைப் பார்க்க பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை.ப. சுந்தரேசனார் அடிக்கடி வருவார். கையில் உள்ள பையில் திருமுறைகள், ஒரு அலுமினிய டம்ப்ளர், இவைதான் தமிழிசை ஆய்வு செய்த அவருடைய சொத்து. இன்றைக்கு இவர் இருந்தால் நல்ல மேடைகளும், புகழும் பணமும் கிட்டி இருக்கும். தமிழிசை ஆராய்வுக்கு ஒற்றைக் குரலாக அவர் குரல்தான் அன்று ஒலித்தது. இருவரும் விபுலானந்த சாமிகளைக் (அடிகளார்) குறித்து அடிக்கடி பேசிக் கொள்வார்கள். சுந்தரேசனார் ஒரு நாள், “உங்க பொண்ணுங்கள்ள யாராவது தமிழிசைப் பக்கம் வருவாங்களா?” என்று கேட்டார். உடனே திரு.சிவானந்தம் என்னைக் காட்டி, ”இவள் வருவாள்.” என்றார். பின்னாளில் நான் தமிழிசை ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவுடன், “நான் நினைத்தது வீண் போகவில்லை.” என்று சந்தோஷப்பட்டார். சுந்தரேசனாரிடம் பேசி நிறைய கற்றுக் கொண்டிருக்கலாம் என்று இப்பொழுது தோன்றுகிறது.

சங்கீத வித்வான்கள் கூடினால், போட்டி, கருத்து வேறுபாடுகள் இல்லாமல் இருக்குமா? ஆனால், அவை சங்கீதம் சார்ந்ததாக இருக்கும். ஒருவர் சங்கராபரணத்தில் ஒரு பாடல் நடத்தினால், அதே சங்கராபரணத்தில் இதைப் பார் என்று வேறொன்று நடத்திக் காட்டுவார் அடுத்தவர். ஒருமுறை ஸ்ரீவாஞ்சியம் சார் கன்னடராகக் கிருதியான ‘இந்த கண்டே’ நடத்தினார். அந்தக் கிருதி பாடப்பட்ட சூழலையும் விவரித்து, மிகவும் லயித்து எடுத்து, ஸ்வரம் போடவும் ராகம் பாடவும் கற்றுத் தந்தார். பாடலைக் கேட்ட நமச்சிவாயம் சார், ”மேலே என்ன ஸரிகாமா என்று போகிறது, ஸாகாமா என்றுதான் இருக்க வேண்டும்.” என்று அவரைக் கூப்பிட்டுச் சொல்லி விட்டார். ”எங்கள் குருநாதர் பாடம், அதைக் குறை சொல்லலாமா?” என்று ஸ்ரீவாஞ்சியம் சார் கண்களில் கண்ணீர் மல்கத் தொண்டை அடைக்க வகுப்பில் வந்து புலம்பித் தள்ளி விட்டார். மரபு சார்ந்த குருகுல வித்வான்களிடம் அவர்கள் குருநாதர் குறித்தோ, பாடாந்தரம் குறித்தோ சாதாரணமான முறையில் கூட விமர்சித்து விட முடியாது. பொங்கி விடுவார்கள். இந்த குணம்தான் பாடாந்தரங்களின்- பாணிகளின் – தனித் தன்மைகளைக் காப்பாற்றி வந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இப்படி ஏராளமான சம்பவங்கள். அந்தக் காலகட்டத்தில் மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் சிறிது காலம் திருவையாற்றில் வசித்தார். அவருடனான இரண்டு அனுபவங்களை மட்டும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். ஒரு நாள் தெருவில் போய்க்கொண்டிருந்த ஆர்.வீ.கே. சாரைக் கூப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று “என்ன கிருஷ்ணன், பேகடாவுக்குப் பதரிஸ ப்ரயோகம் உண்டா?” என்று கேட்டார். உண்டு என்றால், “ஆரோஹணம் பதபஸா” என்று மடக்குவார். கிடையாது என்றால் பாடிக்காட்டி நிரூபிப்பார். ஆர்.வீ.கே. சார் என்ன சொல்லப் போகிறார் என்று அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம். அவர் அழகாகப் பதில் சொன்னார், “நீங்க பாடலாம்.” இதைக் கேட்டதும் விஸ்வநாத அய்யர் கடகடவென்று சிரித்து, “நல்ல சாமர்த்தியமான பதில்.” என்று பாராட்டினார்.

மற்றொரு நாள் செல்லம் அய்யருடன் பேசிக் கொண்டிருந்தார். “ஏன் தாத்தா, நீங்க பாடினா மட்டும் மோஹன ராகம் இவ்வளவு அழகா இருக்கு?” என்று கேட்டேன். அப்படியெல்லாம் கேட்கலாமா, கூடாதா என்றெல்லாம் தெரியாத வயது. விஸ்வநாதய்யர் சற்று நேரம் மௌனமாக இருந்தார். “மோஹன ராகத்திற்கு என்ன ஆரோஹண – அவரோஹணம் சொல்லு.” என்றார். சொன்னேன். ”நீதான் தியரியெல்லாம் படிக்கிறாயே, ஸ்வரஸ்தானம் சொல்லு.” என்றார். சொன்னேன். “இந்த ஸ்வரஸ்தானத்தைத் தவிர வேற ஸ்வரஸ்தானம் பிடிக்கலாமா?” என்று கேட்டார். “பிடிக்கக்கூடாது” என்றேன். “பிடித்தால்?” என்றார். “அபஸ்வரமாகாதா?” என்றேன். “அடப் பைத்தியமே, மோஹன ராகத்தில் எல்லா ஸ்வரஸ்தானமும் வரும். எங்கே ஸ்வரஸ்தானம் சொல்லு.” என்று சிறுசிறு சஞ்சாரங்களாகப் பாடிக் காட்டினார். அதில் அனுஸ்வரங்களாக வரும் ஸ்வரஸ்தானங்களைச் சுட்டிக் காட்டினார். நான் தடுமாறும்போது தானே ஸ்வரம் சொன்னார். ஆஹா! அற்புதமான அனுபவம். “எல்லா ராகமும் இப்படித்தான். ஸ்வரஸ்தானம் என்பது ஒரு அடையாளம்தான். ராகம் தேவதை. அதன் ஸ்வரூபத்தை நினைத்துப் பாடவேண்டும். எந்த ஸ்வரஸ்தானத்திற்கும் ஒரு ராகத்தில் நிரந்தரமாக இடம் கிடையாது.” என்று விவரித்தார். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. விஸ்வநாத அய்யரின் பரம விசிறியும் நண்பருமான செல்லமய்யரோ கண்களில் நீர் வழிய கண்களை மூடிக்கொண்டு அப்படி ரசித்தார். நான் பிரமித்துப்போய் உட்கார்ந்திருந்தேன். மறுநாள் ஆர்.வீ.கே. சாரிடம் சொன்னேன். அவரும் “உண்மைதானம்மா. நான் அப்ப அங்கில்லாம போயிட்டேனே!” என்று அங்கலாய்த்தார்.

1966இல் அப்போதைய முதல் அமைச்சர் திரு. பக்தவத்சலம் அவர்களால் இசை, நாதஸ்வரப் பிரிவு தொடங்கப்பட்டது. குருகுல முறையில் விடுமுறையே இல்லாமல்தான் அது முதலில் நடத்தப்பட்டது. திருவிடைமருதூர் திரு. பி.எஸ். வீராசாமி பிள்ளை அதன் கௌரவ முதல்வராக இருந்தார். எப்படி சாதகம் செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்வார். வருடம்தோறும் கல்யாணபுரம் பிரம்மோற்சவ அனுமந்த வாகனத்தன்று இவர்தான் வாசிப்பார். அதை நடத்தும் தஞ்சாவூர் வக்கீல் ராஜா மாமாவும் வீராசாமி பிள்ளையும் நெருங்கிய நண்பர்கள். அந்த வருடம் அந்தப் புறப்பாட்டு ஊர்வலத்தில் அவர் வாசித்த அடாணா இன்னும் காதில் ஒலிக்கிறது. நீண்ட நாள் எல்லோரும் அதையே பேசிக் கொண்டிருந்தார்கள். அவர் வரும்போது எங்களைக் கவர்ந்த ஒன்று அவருடைய பெரிய வெள்ளி வெற்றிலைப் பெட்டி. P.S.V என்ற எழுத்துகள் பெரியதாகச் செதுக்கப்பட்டிருக்கும். உள்ளே பாக்கு மட்டையில் அடுக்காக வைக்கப்பட்டுள்ள வெற்றிலைகள், முழு கொட்டைப் பாக்குகள், சுண்ணாம்பு, ஏனைய உப சாமான்கள், சிறு பாக்கு வெட்டி எல்லாம் இருக்கும். அதை ஒருவர் தூக்கி வருவார். அவர் பெட்டியுடன் பிள்ளையவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருப்பார். பாக்கை, பாக்கு வெட்டியால் அழகாகச் செதுக்கிச் சீவலாக்கிக் கையில் வைத்துக் கொள்வார். பிள்ளையவர்கள் பின்னால் கையை நீட்டி அதை வாங்கிக் கொள்வார். அதே போல, வெற்றிலையையும் மடித்து அவர் கையில் வைப்பார். ஆண்டுதோறும் திருப்பதி பிரம்மோற்சவத்தில் அத்தனை நாளும் அங்கேயே தங்கி வாசிப்பார். அவர் காலமானதுகூட அங்கேதான். பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடன் வாசித்த அவர் தம்பி குமாரர் திரு. பி.எஸ்.வி. ராஜா அவர்களிடம் அந்த வெள்ளி வெற்றிலைப் பெட்டி குறித்துக் கேட்டேன். (இவர் எங்கள் கல்லூரியில் பின்னர் நாதசுரப் பிரிவில் விரிவுரையாளர் ஆனார்.) “பெரியப்பாவுடைய வாத்யம், சுருதிப்பெட்டி மட்டும் நான் கேட்டு எடுத்துக்கொண்டேன். வெற்றிலைப் பெட்டி என்ன ஆனதோ தெரியாது” என்று சொன்னார்.

தியாகராஜ ஆராதனை இசை விழா நிகழ்ச்சிகளை எங்களைப்போல் அனுபவித்துக் கேட்டவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். சாந்தா, சூடா, விமலா, மோஹம், விஜி, ஹேமா, சுப்புலெட்சுமி, சரஸ்வதி, ஜனகா – என்று ஒரு பெரிய பட்டாளமே ஒரு குறிப்பிட்ட கம்பத்தின் அடியில் உட்கார்ந்து ஒவ்வொரு பாடகர் பாடும் அத்தனை பாடல்களையும் உன்னிப்பாகக் கவனித்து வைத்துக் கொள்வோம். பிறகு வகுப்பில் பேசுவோம். ஒரு ராகம் பாடப்படும்போதே என்ன கீர்த்தனை பாடப்போகிறார் என்று ஊகிக்கத் தொடங்கி விடுவோம். அப்போதெல்லாம் பாடப்போகும் பாடலை ஒட்டித்தான் ராக ஆலாபனை செய்வார்கள். சரியாகச் சொல்லி விடலாம். இந்தப் பாடகர் போன வருடம் என்ன பாடினார், நடந்து முடிந்த இசை விழாவில் என்ன பாடினார் என்பதையும் சட்டென்று நினைவுபடுத்திக் கொள்வோம். அப்போதெல்லாம் இசை விழாக் கச்சேரிகளை வானொலி ஒலிபரப்பும். சுப்புடு விமர்சனத்தின் வாயிலாகவும் பல செய்திகளைத் தெரிந்து வைத்திருப்போம். இன்ன பாடகருக்கு இன்ன பாட்டு ஃபேவரிட் என்றும் தெரியும். ஒவ்வொரு நிமிஷத்தையும் ரசித்துப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வோம். ஏக சந்தோஷத்தில் திளைத்திருப்போம். மற்றொரு செய்தி. முன்னணி வித்வான்கள்கூட மேடைக்கு முன்னால் அமர்ந்து மற்ற வித்வான்களின் கச்சேரியைக் கேட்டுவிட்டுத்தான் போவார்கள். விஸ்வநாதய்யர், பழுத்த வயதில் கீழே உட்கார முடியாமல் மேடைக்கு அருகில் நாற்காலியில் அமர்ந்து மற்ற வித்வான்கள் பாடுவதைக் கேட்பார். என்ன ஒரு கலை நாகரிகம்! இப்படி ஏராளமான செய்திகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். நினைக்கும் போதெல்லாம் ‘அந்த நாளும் வந்திடாதோ’ என்றே தோன்றுகிறது

எழுதியவர் : (13-Sep-17, 8:00 pm)
பார்வை : 66

மேலே