வழி மறந்த பயணங்கள்

கண்போன போக்கினிலே கால்கள் போனால்
***கவலைகளும் நிழலாகத் தொடர்ந்தே வாட்டும் !
மண்மீதில் வேண்டாத செயல்கள் செய்தால்
***வருங்கால வாழ்விலது துயரைக் கூட்டும் !
அண்டிவரும் பல்வினைகள் அழுத்தும் போது
***ஆன்றோரின் அறநெறியே என்றும் காக்கும் !
பண்பாடு மாறாமல் வாழும் வாழ்க்கைப்
***பயணத்தில் எப்போதும் அமைதி பூக்கும் !

கட்டங்கள் காட்டுவதே உண்மை யென்று
***கண்மூடித் தனமாக நம்ப லாமா ?
வட்டந்தான் வாழ்க்கையதில் இன்ப துன்பம்
***வரும்போகும் நிரந்தரமாய் எதுவு மில்லை !
கட்டுக்குள் அடங்காத துயரம் வந்தால்
***காவிகளைச் சரணடைய ஓட லாமோ ?
பட்டுணர்ந்த பின்னர்தான் வருமோ புத்தி
***பாதையதும் மாறிவிட்டால் பயணம் வீணே !

நதித்தடங்கள் கட்டிடங்க ளாகிப் போனால்
***நதியும்தன் வழிமறந்து தானே போகும் ?
மதியில்லா மக்கள்தம் பிழையா லன்றோ
***மண்ணிற்கு மழைப்பயணம் தடையாய் மாறும் ?
கதியின்றி விவசாயம் படுக்கக் கண்டு
***கடன்பட்டே உழவர்தம் வாழ்வும் மாயும் !
விதியென்று விட்டிடாமல் முயன்றால் மீண்டும்
***வெற்றிபெறும் வழிமறந்த பயணம் யாவும் !

சந்ததமும் மதுவுக்கே அடிமை யானால்
***சத்தியமாய் மகிழ்ச்சிக்கங் கிடமே யில்லை !
அந்தந்த பருவத்தில் கடமை தன்னை
***அயராமல் முடித்துவிட்டால் அல்ல லில்லை !
தொந்தரவாய்த் தான்நினைத்துத் தள்ளிப் போட்டால்
***தோல்விகளால் பயணத்தில் வருமே தொல்லை !
சொந்தமுடன் கூட்டாகச் சேர்ந்து வாழ்ந்தால்
***சுகமான அன்பிற்கு முண்டோ எல்லை ?
அலைபேசி விளையாட்டும் ஆபத் தாகும்
***அடங்காத ஆர்வத்தால் உயிரும் போகும் !

வலைவீசி விழுவோரைத் தன்பால் ஈர்த்து
***வாய்க்கரிசி போட்டிடவே வேட்டை யாடும் !
நிலையில்லா உளத்தோரின் வழியை மாற்றி
***நீலத்தி மிங்கலமே எமனாய் மாறும் !
மலையளவு துயர்வரினும் உறுதி யின்றி
***மதியிழந்து வழிமறந்து போகலாமோ ?

விரல்நுனியில் உலகிருக்கும் வீட்டி னுள்ளே
***விருந்தோம்பு மருங்குணமும் போன தெங்கே ?
சிரந்தாழ்த்தி பெற்றோரை வணங்கும் பண்பு
***சிறிதளவு மில்லாது போன தெங்கே ?
இரவுபகல் இணையத்தில் சுற்றி வந்தே
***இயந்திரமாய் உழலுகின்ற மனித னிங்கே
வரமான பிறவிதனில் முன்னோர் காட்டும்
***வழிமறந்தால் பயணத்தில் இழப்பு தானே ?

சியாமளா ராஜசேகர்


  • எழுதியவர் : சியாமளா ராஜசேகர்
  • நாள் : 13-Sep-17, 8:52 pm
  • சேர்த்தது : Shyamala Rajasekar
  • பார்வை : 54
Close (X)

0 (0)
  

மேலே