பொன்னந்தி மாலையிலே

பொன்னந்தி மாலையிலே
***பொங்கிவரும் பாட்டு! - உன்
புன்னகையில் தான்மயங்கிப்
***பூத்ததுள்ளம் கேட்டு !
தென்றலுடன் ஆடிடுதே
***தென்னையிளங் கீற்று - பேசும்
செவ்வலகு கிள்ளையொன்று
***சித்திரம்போல் வீற்று !!

செம்மஞ்சள் சூரியனும்
***செல்லும் விடைபெற்று ! - அந்த
செம்மாந்த பேரொளியோ
***செம்பவளத் தட்டு !
நம்மிதயம் சேர்ந்திணையும்
***நாளினில்கை தொட்டு - நம்
நற்றமிழில் சொல்லெடுத்து
***நானிசைப்பேன் மெட்டு !

கூடடையும் தாய்வரவில்
***குஞ்சுமுகம் பூக்கும் - அதன்
கொஞ்சுமொழி கேட்டவுடன்
***கூர்விழியால் பார்க்கும் !
ஓடமொன்று அக்கரையில்
***ஓசையின்றிச் சேர்க்கும் ! -அதை
ஒட்டிவரும் சேல்கெண்டை
***உள்ளமதை யீர்க்கும் !!

கார்மேகம் கண்டமயில்
***கலாபம் விரித்தாடும் ! - அந்த
காட்சியினைக் கண்டமனம்
***காதலியை நாடும் !
சீர்மிகுந்த வெண்ணிலவை
***திரையிட்டு மூடும் - முகில்
திங்களொளி பட்டதுமே
***சேர்த்தணைக்கத் தேடும் !!

கோலநிலா மீன்களுடன்
***கூடியெழில் காட்டும் ! - அது
கும்மிருட்டு வந்தபின்னும்
***குலவியொளி கூட்டும் !
சோலைமலர் வாசமது
***துன்பத்தை ஓட்டும் !- என்
சுந்தரியே உன்நினைவோ
***சொர்க்கத்தைக் காட்டும் !!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (13-Sep-17, 8:55 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 45

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே