திமிரம் ------ கண்புரைக்கு ஆயுர்வேதத்தில் திமிரம் என்று பெயர்----வாசிப்பதில் சிக்கல் ------ஜெயமோகன் மின்னஞ்சல் ---படித்தது ---ஆரோக்கியம்

கண்ணாடியை நான்காண்டுகளுக்கு முன் சென்னையில் அணுவணுவாகச் சோதித்து போட்டேன். வெள்ளை விளிம்புள்ள கண்ணாடி. அது இயக்குநர் மிஷ்கின் எனக்கு அளித்த பரிசு. அதற்கு முன்பு போட்டிருந்த கண்ணாடி மணிரத்னம் அளித்த பரிசு. என் பார்வைகளில் அவர்களின் பங்களிப்பு உள்ளது என்று பொருள்.



நாலைந்து மாதங்களுக்கு முன்பு நண்பரும் கண்கண்ணாடிக்கடை உரிமையாளருமான முத்து பிரதாப் பிளாஸாவுக்கே அத்தனை கருவிகளுடனும் உதவியாளர்களுடனும் வந்து கண்ணை பரிசோதனை செய்தார். நோக்கு மாறியிருக்கவேண்டும் என்பது அவரது உறுதியான நம்பிக்கை. மாறவில்லை. அதே நோக்குள்ள கண்ணாடியை அவர் அளித்தார். சரியாக ஒருமாதத்தில் பழையகண்ணாடியை ஒரு பயணத்தில் தொலைத்துவிட்டேன்



சிலநாட்களாகவே வாசிப்பதில் சிக்கல் இருப்பதை உணர்ந்தேன். நாளிதழின் செய்திகளை வாசிக்கமுடியவில்லை. பல புத்தகங்கள் கண்ணுக்கே தெரியவில்லை. குறிப்பாக அகராதிகள். ஆகவே மீண்டும் ஒருமுறை கண்ணை டாக்டரிடம் காட்டச்சென்றேன். இப்போதிருக்கும் கண்ணாடியாலேயே எல்லா எழுத்துக்களையும் வாசிக்கமுடிந்தது, ஆனால் எழுத்துக்கள் கலங்கி நீருள் எனத் தெரிந்தன. அழுத்தமில்லாமலிருந்தன.



கண்புரை தொடங்கியிருப்பதாக டாக்டர் சொன்னார். அது ஏன் தொடங்குகிறது, எப்படி என்று சொல்லவே முடியாது. சமீபத்தில் சற்றுநாள் நீண்ட கண் ஒவ்வாமையின்போது ஸ்டீராய்டு மருந்துகள் பயன்படுத்தியமையால் அது வளர்ந்திருக்கலாம் என்றார். ‘நெடுநேரம் கம்ப்யூட்டரைப்பார்த்து வேலைசெய்ததும் காரணமாக இருக்கலாம்” என்றார் இன்னொரு மருத்துவநண்பர்.



கண்ணாடியை மாற்றவேண்டியதில்லை, இதற்குமேல் நோக்கு தெளியாது என்றார் டாக்டர். “என்ன செய்வது?” என்றேன். “தெரிவனவற்றை வாசிக்கவேண்டியதுதான். பொதுவாக நோக்கில் பிரச்சினை இல்லை. சற்றுப்பெரிய எழுத்துக்களை வாசியுங்கள். கண்புரை இன்னும்கொஞ்சம் வளர்ந்தபின் வேண்டுமென்றால் அறுவைசிகிழ்ச்சைசெய்துகொள்ளலாம்”



வீட்டுக்கு வந்து என் நூலகத்தின் நூல்களை எடுத்துப்பார்த்தேன். ஆப்செட் வந்தபோது கணிசமான பதிப்பாளர்கள் மிகப்பொடியான எழுத்துக்களில் நூல்களை வெளியிட்டனர். வரிகளுக்கிடையே இடைவெளியும் மிகக்குறைவு. அனைத்தும் என் உலகைவிட்டு வெளியேறிவிட்டன. ஒவ்வொன்றாக இப்படி வாழ்க்கையிலிருந்து வெளியேறும்போலும். கணிசமானவை காலச்சுவடு, உயிர்மை, தமிழினி நூல்கள். தமிழினி நூல்களின் தாள் பளபளப்பானது, எழுத்து மெல்லிய கோடாலானது. ஒன்றுமே தெரியவில்லை.



கணிப்பொறியில் பெரிய போஸ்டர் எழுத்துக்களை வைத்துக்கொண்டேன். பூதக்கண்ணாடி ஒன்று வாங்கிக்கொண்டேன், அகராதிகளையும் கலைக்களஞ்சியங்களையும் பார்க்க. இதெல்லாம் என் இலக்கிய, கருத்தியல்பார்வையில் என்னென்ன மாற்றங்களை உருவாக்கும் என்று தெரியவில்லை.விஷயங்களை இனிமேல் பார்க்க முடியாதோ? அல்லது நுணுகி நுணுகிப்பார்த்துத்தான் இந்த லட்சணமாக ஆகிவிட்டேனா? சரிதான் போகட்டும் என்ற மனநிலை இப்போதே ஓரளவு வந்துவிட்டது.



வாசிக்கமுடிபவை கவிதா பதிப்பகம், வர்த்தமானன் பதிப்பகம் போன்ற சம்பிரதாயமான பதிப்பகங்களால் போடப்பட்ட பெரிய எழுத்து நூல்கள். பெரிய எழுத்து விக்ரமார்க்கன் கதை போன்ற நூல்கள் அக்காலத்தில் ஏன் வெளியிடப்பட்டன என்று புரிந்துகொண்டேன். புரியாதது ஒன்று உண்டு. கண்புரைக்கு ஆயுர்வேதத்தில் திமிரம் என்று பெயர். அதற்கும் திமிருக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?

எழுதியவர் : (14-Sep-17, 3:53 am)
பார்வை : 29

மேலே