இணையமும் அந்தரங்க உரிமையும்-------சிந்தனைக் களம் --படித்தது

நீங்கள் அதற்குப் பணம் செலுத்தவில்லை என்றால், நீங்கள் அதன் வாடிக்கையாளர் அல்ல; நீங்கள்தான் (விற்பனையாகும்) பண்டம்”. தகவல் எனும் நெடுஞ்சாலையில், ‘மீடியம் இஸ் தி மெசேஜ்’ (கனடாவைச் சேர்ந்த தத்துவ அறிஞர் மார்ஷல் மெக்லுஹான் உருவாக்கிய பதம்) எனும் சிக்னலை நீங்கள் தவறவிட்டிருக்கும் பட்சத்தில் நீங்கள் அநேகமாகப் பார்த்திருக்க முடியாத அறிவிப்புப் பலகை அது. உங்கள் திரையில் பாப்-அப் ஆகும் ‘விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்’ ஒவ்வொன்றிலும், ‘ஏற்றுக்கொள்கிறேன்’ (ஐ அக்ரீ) என்று பணிவுள்ள ஒரு மகளைப் போல் நீங்கள் ‘கிளிக்’ செய்துகொண்டே இருந்தால், கூகுளிலும், மணப்பொருத்த இணையதளங்களின் விளம்பரங்களிலும் உங்கள் புகைப்படமும் சுயவிவரங்களும் பொதுவெளியில் எளிதாகக் கிடைக்கும். உண்மையில், ஒரு இணையதளத்தை ‘பிரவுஸ்’ செய்து பார்ப்பது என்பது இந்தியாவில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளைப் போன்றது – அழைக்கப்படாத மூன்றாவது நபர்கள், அந்நியர்கள்கூட அங்கு உங்கள் வயது, வேலை, சம்பள விவரங்களைத் தெரிந்துகொள்வார்கள். நீங்கள் பார்க்கும் இணையதளங்கள் உங்களுக்குத் தெரியாமலேயே ‘ட்ராக்கர் குக்கீஸ்’ என்று அழைக்கப்படும் சில ‘குக்கி’கள் மூலம், நீங்கள் அடிக்கடி செல்லும் இணையதளங்களை வைத்து உங்களைப் பற்றிய சுயவிவரங்களின் அடிப்படையில் ஒரு தகவல் தொகுப்பை உருவாக்கிவிடும். அதன் அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்ட விளம்பரங்கள் உங்களை வந்தடையும்.

இணையதளப் பயன்பாட்டாளரின் பிரச்சினைகள் தொடர்பாக அந்தரங்க உரிமை தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கவித்துவமாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. “முக்கியமான விஷயங்கள், முக்கியத்துவமற்ற விஷயங்கள்; சொல்லக்கூடிய விஷயங்கள், மறைக்கப்பட வேண்டியவை என்று அத்தனையையும் கொண்ட ஒரு சித்திரத்தை இந்தத் தகவல் திரட்டு வழங்குகிறது” என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், அப்துல் நஸீர் உள்ளிட்டோருடன் இணைந்து வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடுகிறார் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட். ரொமான்டிசிஸ யுக வரிகளில் எழுதப்பட்ட அந்தப் பின்நவீனத்துவ உண்மை சொல்வது இதைத்தான்: உங்களைப் பற்றிய தகவல்களின் தொகுப்பே நீங்கள்தான்!

நாம் இணையத்தைப் பயன்படுத்தும்போது, சட்டபூர்வமான பயனாளர்களுக்குத் தகவல்கள் முறைப்படி வழங்கப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்வது உள்ளிட்ட, ஏற்றுக்கொள்ளத்தக்க காரணங்களின் அடிப்படையிலான தேசப் பாதுகாப்பு மற்றும் தகவல் திரட்டுகளுக்கான நியாயமான கட்டுப்பாடுகளுடன் நமது புதிய அடிப்படை அந்தரங்க உரிமையானது போராட வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல, நமது முரண்பாடான நடத்தையுடனும் அது மோத வேண்டியிருக்கிறது. அந்தரங்கத் தகவல்களை முக்கியமாக மதிக்கும் மக்கள், அவற்றால் அனுகூலம் கிடைக்கும் என்றால் அன்றாடப் பரிமாற்றங்களின் வழியே அவற்றைப் பகிர்ந்துகொள்ளத் தயங்கவும் மாட்டார்கள் எனும் அமெரிக்க நீதித் துறை வல்லுநர் ரிச்சர்ட் போஸ்னரின் வார்த்தைகளையும் இந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

2012-ல் அந்தரங்கம் தொடர்பாக அரசின் நிபுணர் குழு பரிந்துரைத்த ஒன்பது கொள்கைகளையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அவை: தகவல் சேகரிக்கப்படுவது குறித்து இணையப் பயனாளருக்கு முன்பே தெரிவிப்பது; வெளியேறுவதற்குப் பயனாளருக்கு வாய்ப்பு வழங்குவது; தகவல்களின் தன்மையையும் அவை சேகரிக்கப்படுவதற்கான நோக்கத்தையும் கட்டுக்குள் வைப்பது; சேகரிக்கப்பட்ட தகவல்களைப் பயன்படுத்த பயனாளர்களுக்கு அனுமதி வழங்குவது; சேகரிக்கப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது; அங்கீகாரமற்ற முறையில் தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படுவதைத் தடுப்பது; தகவல் சேகரிப்பவரை அவற்றுக்குப் பொறுப்பானவராக்குவது ஆகியவை.

நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான மத்திய அரசின் ஆணையத்தையும் கருத்தில் கொண்டிருக்கும் உச்ச நீதிமன்றம், இணைய அந்தரங்கம் தொடர்பான தெளிவான வழிகாட்டுதல்களை எதையும் கொடுக்கவில்லை. அந்த ஆணையம் இனிமேல்தான் தனது பரிந்துரைகளை வழங்கவிருக்கிறது. “அதன் முடிவுகளின் தொடர் நடவடிக்கைகளாக, தேவையான, முறையான அத்தனை நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

ஆனால், வெறுமனே எதிர்பார்ப்பு மட்டும் போதுமானதல்ல. 2016-ன் இறுதியில் இந்தியாவில் இணையப் பயன்பாட்டாளர்களின் மொத்த எண்ணிக்கை 39 கோடியைத் தாண்டிவிட்டது. முந்தைய காலாண்டைவிட இது 18.04% அதிகம். அதாவது, 39 கோடி பேரின் சுயவிவரங்கள் - மற்றொரு வழக்கில் இதே நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் இவை. “இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதானிருக்கிறது” என்கிறது நீதிமன்றம், கிட்டத்தட்ட ஆபத்தை உணர்த்தும் தொனியில்!

தி இந்து (ஆங்கிலம்),

தமிழில்: வெ.சந்திரமோகன்

பி.ஜே.ஜார்ஜ்

எழுதியவர் : (14-Sep-17, 10:36 am)
பார்வை : 40

சிறந்த கட்டுரைகள்

மேலே