நவோதயா பள்ளி என்ன செய்யப் போகிறோம் ----நம் பார்வைக்கு

வரலாற்றைத் திருப்புகிற தீர்ப்பொன்று வந்திருக்கிறது. “தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க அனுமதியளிக்கப்படுகிறது. 8 வாரத்துக்குள் இதற்கான தடையில்லாச் சான்றிதழ்களைத் தமிழக அரசு வழங்க வேண்டும். மாவட்டம்தோறும் அதற்கான இடத்தை ஒதுக்கி, உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்துதருவதில்தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று ஆணையிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

கணிசமான மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ள தீர்ப்பு இது என்பதில் சந்தேகமில்லை. ‘இந்தி படிக்க நமக்கிருந்த தடை தகர்ந்துவிட்டது’ என்ற மகிழ்ச்சியல்ல அது. தமிழகத்தில் ஒரே பாடத்திட்டம் நடைமுறையில் இல்லை. அரசுப் பள்ளிகள், சமச்சீர் கல்வித்திட்டத்தைப் பின்பற்றுகிற மெட்ரிக் பள்ளிகள், அதைப் பின்பற்றாத மெட்ரிக் பள்ளிகள், மத்திய பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிற கேந்திரிய பள்ளிகள், தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள், சர்வதேச(?) பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிற குளோபல் பள்ளிகள் என்று 6 வகையான பள்ளிகள் இருக்கின்றன. மாநிலப் பள்ளிகளைவிட, மத்திய பள்ளிகள் தரமானவை என்றும், மத்திய பள்ளிகளைவிட சர்வதேசப் பள்ளிகள் தரமானவை என்றும் நம்பப்படுகிறது. ஏழைகளுக்கு ஒரு பள்ளி, நடுத்தர வர்க்கத்தினருக்கு வேறு பள்ளி, உயர் வர்க்கத்துக்கு வேறு பள்ளி என்ற வேறுபாடு இருக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளியைவிடக் குறைந்த கட்டணத்தில், மத்திய பாடத்திட்டக் கல்வி கிடைத்தால் ஏழை, நடுத்தர மக்கள் வரவேற்கவே செய்வார்கள். அவர்களில் பலர் கேந்திரிய பள்ளிகளுக்கு முயற்சித்து, ஒரு சீட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ரூ. 2 லட்சம் கேட்கிறார்கள் என்ற உண்மையைப் புரிந்துகொண்டு பின்வாங்கியவர்கள்.

இந்த நேரத்தில் நவோதயா பள்ளிகள் ஏன் தமிழகத்தில் மட்டும் அனுமதிக்கப்படவில்லை என்ற வரலாற்றை அதை விரும்புகிற மக்களுக்கு சொல்லிக்காட்ட வேண்டிய கடமை ஊடகங்களுக்கு இருக்கிறது.

இந்தித் திணிப்பும் இந்தி எதிர்ப்பும் கடந்த 80 ஆண்டுகளாக நடந்துவரும் தொடர்கதை. “இந்தியா ஒரே நாடாக நீடிக்க வேண்டும் என்றால், இந்தியே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும்” என்று மத்திய அரசு தொடர்ந்து சொல்கிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களோ, “மாநில மொழிகளையும் மத்திய ஆட்சி மொழியாக அறிவித்துவிட்டால், ஏன் இந்தியா பிளவுபடப் போகிறது?” என்ற நியாயமான எதிர்வாதத்தை முன்வைக்கின்றன.

ராஜாஜி காலத்திலிருந்து...

தேசியவாதியான ராஜாஜி 1937-ல் முதல்வரானார். “இந்தியா விரைவில் விடுதலை பெறும். இதுவரையில் ஆங்கிலம் ஆட்சிமொழியாக இருந்தாலும், விடுதலைக்குப் பிறகு கண்டிப்பாக நம் தலைவர்கள் இந்தியைத்தான் ஆட்சிமொழியாக்குவார்கள். எனவே, முன்கூட்டியே தமிழர்களை இந்தி படிக்க வைத்துவிட்டால், பின்னாளில் அவர்களுக்குப் பாதிப்பு குறைவாக இருக்கும்” என்று கருதினார் ராஜாஜி. அரசுப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டுவந்தார். அவருக்கு முன்பே சென்னை மாகாணத்தை 17 ஆண்டுகள் ஆண்டுவிட்ட (1920 முதல் 1937 வரை) நீதிக்கட்சியினரோ தொடர்ந்து இந்தித் திணிப்பை எதிர்த்து வந்தவர்கள். இளம் தலைமுறையும் ‘திராவிட நாடு’ கனவில் இருந்ததால், இந்தியைக் கடுமையாக எதிர்த்தனர். விளைவாக, முதல் இந்தி எதிர்ப்புப் போர் 1938-ல் தொடங்கியது. இந்தித் திணிப்பு திரும்பப் பெறப்பட்டதால், போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்தியா விடுதலை பெற்று, குடியரசாக மாறியதும் அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. அந்தச் சட்டம் ராஜாஜி கணித்தபடியே, “அனைத்திந்திய ஆட்சி மொழியாக இருக்கும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை ஆட்சிமொழியாக்க வேண்டும்” என்று சொன்னது. ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் பலருக்கு இந்தி தெரியாது என்பதால், எல்லோரையும் தயார்படுத்துவதற்காகக் கால அவகாசம் அளித்து, 1965 ஜனவரி 26-ம் தேதி இந்தியை நாட்டின் ஆட்சிமொழியாக மாற்றுவது என்று சட்டம் போட்டார்கள். இந்தி இந்தியாவின் தனி ஆட்சிமொழியாக (ஆங்கிலம் அறவே நீக்கப்படும்) முடிசூட்டப்போகிறது என்றதும், தமிழகம் கிளர்ந்தெழுந்தது. தமிழ்நாட்டில் காங்கிரஸை ஒட்டுமொத்தமாகத் தூக்கியெறிந்தார்கள் தமிழக மக்கள். இந்தித் திணிப்பு எதிர்ப்பு அரசு (திமுக) ஆட்சிப்பொறுப்பேற்றது. வாக்காளர்களின் விருப்பப்படி, இருமொழிச் சட்டத்தை நிறைவேற்றினார் அண்ணா. அதாவது, தமிழகத்துக்குத் தாய்மொழி தமிழ், தொடர்பு மொழி ஆங்கிலம் மட்டும் போதும். பள்ளிகளில் இவ்விரு மொழிகள் மட்டுமே கற்பிக்கப்படும் என்று சட்டம் போட்டார். அதை அப்படியே தொடர்ந்தார் கருணாநிதி.

இந்தியின் நுழைவு

நெருக்கடிநிலை 1975-ல் நடைமுறைக்கு வந்தது. மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வி, பொதுப் பட்டியலுக்குப் போனது. என்.சி.சி.யில்கூட இந்தியில் கட்டளையிடக் கூடாது என்ற நிலை மாறி, தமிழே இல்லாமல் இந்தி, ஆங்கிலம் மட்டுமே கற்பிக்கிற பள்ளிகளும் தமிழகத்துக்குள் நுழைந்தன. அதனைத் தடுக்கும் அதிகாரமின்றி விழித்தது தமிழக அரசு. மாநில அரசு அங்கீகாரம் அளிக்கும் பள்ளிகளில் மட்டும், இந்தியைத் தடுக்கிறது தமிழக அரசு. அதன் ஒரு பகுதிதான் நவோதயா பள்ளிகளைத் தடுத்ததும்.

அது மத்திய அரசுப் பள்ளிதானே என்று சிலர் கருதலாம். இல்லை, மாநில அரசின் பங்களிப்புடன் கூடிய பள்ளி. மாநில அரசு 30 ஏக்கர் நிலத்தை இலவசமாகத் தருகிறது. கூடவே, புதிய கட்டிடம் கட்டப்படும் வரையில் வாடகையில்லாமல் ஒரு பள்ளிக்கட்டிடத்தையும், ஆசிரியர்களுக்கான குடியிருப்பையும் மாநில அரசே வழங்க வேண்டும். இவ்வளவு உதவிகளைச் செய்கிறபோது, எங்களது இருமொழிக் கொள்கையை ஏற்றால் என்ன என்பது தமிழக அரசின் வாதம். “6 முதல் 10 வரையில் தமிழையும்தானே கற்பிக்கிறோம். 11, 12-ல் வேண்டும் என்றால் தமிழையும் விருப்பப்பாடமாகத் தேர்வு செய்துகொள்ளலாம்” என்றது மத்திய அரசு. எல்லாம் சரி, விருப்பப் பாடமாகத் தமிழைத் தேர்வுசெய்துகொள்ளலாம் என்றால் எல்லோரும் தமிழைத் தேர்வுசெய்வார்களா என்ற கேள்வி இருக்கிறதல்லவா? தமிழுக்கு முன்னுரிமை அல்லவா கொடுத்திருக்க வேண்டும்!

மத்திய அரசின் வாதத்தை ஏற்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது, நவோதயா பள்ளிகளைத் திறக்கலாம் என்று. அதிமுக என்ன செய்யப் போகிறது?

முழுதாக நனைக்கப்போகிறதா?

நம்மைப் போலவே மொழியுணர்வு மிக்க பல மாநிலங்கள் நீண்ட காலமாக நவோதயா பள்ளிகளை எதிர்த்துவந்தன. கல்வி பொதுப் பட்டியலுக்குப் போனதும், முழுசாக நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்று தங்கள் முடிவைக் கைவிட்டுவிட்டன. (கடைசியாக அந்தப் பட்டியலில் சேர்ந்தது மேற்கு வங்கம்.) ஆனால், தமிழகம் இன்னமும் முழுசாக நனையவில்லை. தமிழ் மக்களை இந்தியால் முழுதாக நனைக்க முடியாது! வரைபடரீதியான, வரலாற்றுரீதியான உண்மை இது. ‘தமிழக அரசு முழுதாக நனைக்கப்போகிறதா?’ என்பதுதான் கேள்வி.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தால் ஆட்சிக்கு வந்த திமுக, நவோதயா பள்ளிகளை அனுமதித்தால் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகும், ஆளாகியிருக்கும். அதிமுக அனுமதித்தால் அந்த அளவுக்கு விமர்சனம் வராதுதான். ஆனால், “அண்ணா நிறைவேற்றிய இருமொழிக் கல்விச் சட்டம் நடைமுறையில் இருக்கும் ஒரு மாநிலத்தில், இந்தியை முதலில் அனுமதித்தது அண்ணா பெயரை வைத்துக்கொண்டிருந்த அதிமுகதான்” என்று வரலாற்றில் பதிவாகும்.

தாங்கள் பாஜக ஆதவாளர்களாக இருக்கலாம், ஆனால், பாஜக இல்லை என்பதை நிரூபிக்க எடப்பாடி அரசுக்கு வரலாறு தந்திருக்கும் வாய்ப்பு இது.

இன்னொரு விஷயம். ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் வெறுமனே நவோதயா பள்ளிகளை எதிர்ப்போம் என்று சொன்னால் மட்டும் போதாது. இந்தி எதிர்ப்பு முழக்கத்தால் ஆட்சியைப் பிடித்த நாம், கேரளத்தைப் போல மத்திய அரசுப் பள்ளியே என்றாலும், மாநில மொழி கட்டாயம் என்று இங்கே சட்டமியற்றத் தவறிவிட்டோம் என்ற உண்மையையும் ஒப்புக்கொள்ள வேண்டும். மக்களின் கனவான ஒரே பாடத்திட்டம் வேண்டும் என்றால், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரி ஒரே குரலில் பேச வேண்டும். மாநில அரசிடம் அனுமதி பெற்ற தனியார் பள்ளிகள் பல, திருட்டுத்தனமாக இந்தி கற்பிப்பதைக் கண்டும் காணாமல் இருக்காமல், துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால், பணக்காரர்கள் படிக்கிற தனியார் பள்ளிக்கு ஒரு நீதி, ஏழைகள் சேர வாய்ப்புள்ள நவோதயா பள்ளிகளுக்கு ஒரு நீதி என்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்!

-கே.கே.மகேஷ்,


Close (X)

0 (0)
  

மேலே