எது கலாச்சாரம் , யார் அதை வடிவமைத்தார்

சின்னவயசில் கோழியச்சுற்றுகிற சேவலைப்பார்க்கும் போதெல்லாம் ஒரு கேள்வி எழும் இவை இரண்டும் எப்போது கல்யாணம் பண்னிக்கொண்டன என்று.தாய் பிற ஆடவனுடன் பேசும்போது சேலைத் தலைப்பை பிடித்து இழுத்து வீட்டுக்கு வா என்று அடம்பிடிக்காத குழந்தைகள் இருப்பதில்லை.அது என்ன வகையான பொஷெசிவ் என்று இனம் கண்டு பிடிக்க முடியாது.எழுத்து, சிந்தனை, செயல் எல்லாமே ஆண்வயப்பட்டதாகவே களத்திற்கு வருகிறது. கொஞ்சம் குறைய நிறைய்ய ஆணவத்தோடும் களமிறங்குகிறது.

நம்மில் எத்தனை பேருக்கு காதல் பிடிக்கும்.இந்தக் கேள்விக்கு தயங்காமல் 99.99 சதம் ஆதரவுக்குரல் தான் வரும்.எத்தனை தகப்பன்களுக்கு காதலைப்பிடிக்கும்,அதுவும் பெண்ணைப்பெற்ற தகப்பன்களுக்கு?.மௌனம்,திசை திருப்பல் வியாக்கியானம் தான் வரும்.என் சொந்த தாய் மாமன் அவனுக்கு என்னைவிட ஒரே ஒரு வயது
தான் அதிகம்.கல்லூரிக்காலத்தில் அவன் காதல் பிரசித்தமானது.ஒரு ஐந்துவருடம் ஊரில் அவன் பேச்சுத்தான் பேசப்படும்.அவனைக்காதலித்த பெண்னுக்கு அடி உதை. அப்புறம் பள்ளிக்குடம் கட்.அப்புறம் வீட்டைவிட்டு வெளியே போகும் சுதந்திரம் கட்.எல்லா வேலிகளில் இருந்தும் காதல் ஒவ்வொரு முறையும் புதிய புதிய பாதைகளை உருவாக்கிக் கொடுக்கும். கொடுத்தது.காதலுக்கு ஆதரவான கோஷ்டி,எதிரான கோஷ்டி என ஊர் ரெண்டானது.இறுதியில் அந்தப்பெண்ணின் குடும்பம் ஊரைக்காலி பண்ணிக் கொண்டு ஒரேயடியாக வெளியூர் போய்விட்டார்கள்.

ஆனல் அது இறுதியல்ல.போன இடத்தில் அவளுக்கு பேய் பிடித்துக்கொண்டது.பிடித்த பேயை விரட்ட ஸ்ரீவில்லிப்புத்தூர் கொண்டு போனார்கள்.இவனும் போனான்.'கள்ளம்பெருசா,காப்பாம்பெருசா'என்கிற சொலவடை முழுதாகப் புரிந்தது.பிறகு போலீஸ் டேஷன், அவனுக்கு ரிமாண்ட். அத்தோடு முடிந்து போனதென்று அவனும் அவளும் உட்பட ரெண்டு பக்கமும் ஒதுங்கிக் கொண்டார்கள்.ரெண்டு வருடம் கழித்து திடீரென ஒரு நாள்மாலையும் கழுத்துமாக வந்து நின்றார்கள். அலுத்துப்போன பெற்றோர்கள்,அதற்குமேல் ஏதும் செய்ய முடியதவர்களாக பெற்றோர்கள் ஒதுங்கிக்கொண்டார்கள்.பின் ஏற்றுக்கொண்டார்கள்.இது, இந்தக் கதை ரெண்டு ஜாதிகளுக்குள் இல்லை நண்பர்களே கவிஞர் மீராவின் கவிதையை போல செம்புலப்பெயநீர் சொந்தத்துக்குள். காவியத்தில் காதலென்றால் கனிந்துருகும் மானிடம் நமது.அது இன்னொரு வீட்டில் நடக்கும் போது மட்டும்.

இருபது வருடங்கள் ஓடிப்போனது,என்னிடம் ஒரு பிராது வந்தது 'ஊரில் ஒரு பய நம்ம பொண்ணு பின்னால சுத்துறான் என்ன செய்யலாந் தம்பி' ஒரு பெரியவர் வந்து சொன்னார். யார் பொண்ணு என்கிற விபரம் கெட்டேன். சொன்னார்.தாய் தகப்பன் என்ன சொல்றாங்க என்று கேட்டேன். 'கொதிச்சுப் போயி இருக்காங்க,கேசு குடுக்கலாமா ,ரெண்டு தட்டு தட்டி வுடலாமா ஒரு ரோசன சொல்லு' என்றார்.ஒன்னுஞ்செய்ய வேண்டாம் புருசனும் பொண்டாட்டி யையும் தனியா ஒக்காந்து அவுக எப்பிடிக்கல்யாணம் முடிச்சாங்கண்ணு யோசிக்கச் சொல்லுங்க, எல்லாஞ்சுமூகமா முடிஞ்சிரும் என்று சொன்னேன்.அதன் பிறகு 'மழையில்ல,தண்ணியில்ல,இந்த பொம்பள ஆச்சியில வெலவாசியப்பாரு ஒங்க கம்மூனிஸ்ட்காரங்க சொல்றது சர்த்தாம்பா' என்று அரசியல் பேசிவிட்டு போய்விட்டார்.தூது அனுப்பிய தாய் தகப்பன் தான் முதலில் சொன்ன காதலர்கள்.முன்பாதியில் கதநாயக, நாயகியாய் இருந்தவர்கள் பின்பாதியில் வில்லனாக மாறுகிற சகஜமான கதை இங்கு,ஏராளம்.

கேட்டால் 'எங்கள் காதல் தெய்வீகமானது,இதுக சும்மா டைம்பாசுக்கு கடல போடுதுக' என்று சொல்லுவார்கள்.காலங்காலமாக பெற்றோர்களின் வார்த்தைகள் மாறிவரும் கருத்து மாறாது. இந்தச்சாதாரணக் கதையை வலையுலகத்துக்குள் நுழைந்து அவர்கள் படிக்கப் போவதில்லை என்கிற தைர்யத்தில் எழுதிவிட்டேன்.ஆனால் யாரும் வெளியில்சொல்ல முடியாத காதல் கதைகள் கோடி கோடி கொட்டிக்கிடக்கிறது. அவை யாவும் கெட்டிப்படுத்தப்பட்ட சமூகச்சுவர்களின் மறுபக்கம் உருவாகும் இருட்டுக்குள் புதைந்து கிடக்கிறது.வண்ண வண்ணக்கோலங்கள் படம் பார்க்கிற யாருக்கும் அதில் எந்த விமர்சனமும் வராது உள்ளூர ரசிப்போம்.அந்தக் கதை மாந்தர்களுக்கு கிடைக்கிற காட்டு சுதந்திரத்தை ஒரு நாளாவது அனுபவிக்கவேண்டும் என்கிற ஆவல் வந்து போகும்.அது துஷ்யந்தனுக்கும் சாகுந்தலைக்குமென்றால் காவியமாகும்.நடப்பில் என்றால் கள்ளத்தனமாகும்.

இது சரியா தவறா என்கிற வாதம் ஒரு புறம் கிடக்கட்டும்.இந்த வாதமே தவறானது இல்லை ஒருதலைப்பட்சமானது என்று புரியலாம்.இங்கு நடப்பது மோனோ ஆக்டிங் மட்டுமே.ஏனெனில் காலங்காலமாக இங்கே வாதியும் பிரதிவாதியுமாக ஆண்களாகவே இருக்கிறோம்.'எலே ஊதாரிப்பெயலே நீ பெரிய சண்டியர்னு ஓண்ட அடங்கிப்போலடா,இந்த பச்சமண்ணுக தெருவுல அலையுமேங்குற கவலயிலதான் ஓண்ட சவண்டு போய்க்கெடக்கேன்' ஊரில் நடக்கிற புருசன் பொண்டாட்டி சண்டைகளில்,மிகச்சரளமாக வந்து விழும் வார்த்தைகளிவை.மாணாவாரிக் கிராமங்களின் தெருப்புழுதிகளில் வந்து விழுகிற இந்த வார்த்தைகள் பெரிய பெரிய வீடுகளின் அறைகளைத்தாண்டி வெளியே கேட்காமல் அமுங்கிப்போகலாம்.சொல்லிய வார்த்தைகளை விட சொல்லாத மௌனத்துக்கு சக்தி அதிகம்.அடங்கிப்போவது வெடித்துச் சிதறுவது இந்த இரண்டில் எது கலாச்சாரம் என்பதுதான் கேள்வி இப்போது ?

நண்பர்களே ஒரு தென்மாவட்டத்து குக்கிராமத்தில் இருந்து கொஞ்சம் நகர்ந்து சாத்தூருக்கு வந்த புரிதல் இது.சென்னைப் பெருநகர் வாழ்க்கை,வேகம்,நெரிசல் இவையெல்லாம் எனக்கு சர்க்கஸ் பார்க்கிற அனுபவம்தான்.அங்கிருந்து கிளம்புகிற இந்த வாதத்தை முழுமையாக அறிய வலை ஒரு வெளியாகிறது. எனவே


உயர்திரு மருத்துவர் ருத்ரன்,
மதிப்பிற்குறிய மருத்துவர் ஷாலினி,
பாலாண்ணா (வானம்பாடிகள்),
யாராவது ஒரு பெண்பதிவர்
மற்றும் மாதவராஜ்

ஆகியோர் விரிவாகப்பேசினால் தேவலாம்.
@ காமராஜ்

எழுதியவர் : (14-Sep-17, 11:53 am)
பார்வை : 79

சிறந்த கட்டுரைகள்

மேலே