மறனுடை ஆளுடையான் மார்பு ஆர்த்தல் துன்பம் - இன்னா நாற்பது 18

இன்னிசை வெண்பா

உரனுடையா னுள்ள மடிந்திருத்த லின்னா
மறனுடை யாளுடையான் மார்பார்த்த லின்னா
சுரமரிய கானஞ் செலவின்னா வின்னா
மனவறி யாளர் தொடர்பு. 18 இன்னா நாற்பது

பொருளுரை:

திண்ணிய அறிவுடையவன் மனம் சோம்பியிருப்பது துன்பமாகும்.

வீரமுடைய ஆட்கள் பலம் உடைய ஒருவன் மார்பு தட்டி போருக்கு அழைப்பது துன்பமாகும்.

செல்வதற்குச் சிரமமான அடர்ந்த காட்டு வழியில் செல்வது துன்பமாகும்.

மன வறுமையுடைய தூய்மையும், மனத்திண்மையும் இல்லாதவரின் சேர்க்கை துன்பம் தருவதாகும்.

மார்பு ஆர்த்தல் - மார்பு தட்டிப் போர்க்கெழுதல்; காரணம் காரியத்திற்காயிற்று.

வீரரையுடையான் தானே போர்க்குச் செல்லுதல் வேண்டாம் எனப்படுகிறது.

வலிய சண்டைக்குச் செல்லுதல் கூடாது.

மனவறியாளர் - மனநிறைவில்லாதவர்; புல்லிய எண்ணமுடையார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Sep-17, 8:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 80

மேலே