நான் சொன்னப் பொய்கள்

நான் சொன்னப் பொய்கள்....(3)

அன்று வைகுண்ட ஏகாதசி ..... இரவு.... தெரு விளக்கு ஒளியில் அண்டை வீடுகளில் வசிக்கும் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தேன்.... எல்லோர் வீட்டு திண்ணைகளிலும் மூதாட்டிகள் கதைகள் பேசிக் கொண்டிருந்தனர்..... சிலர் தாயக்கட்டை உருட்டினர்... பல்லாங்குழி பரம்ப்பதம் என விளையாட்டுகள் ஆங்காங்கே... ஆடுபவர்களை ஆரவாரமாய் கைத்தட்டி உற்சாகப் படுத்த சுற்றி நிற்கும் வாலிப வட்டம்.....

என் தாயார் என்னை உறங்க வரச் சொல்லி அழைக்கும் குரல் கணீரென..... ஆனால் எனக்கோ விளையாட்டைத் தொடர ஆசை.... மூதாட்டிகள் எப்படியும் விடிய விடிய விழித்திருப்பார்கள்.....ஆனால் என் விளையாட்டுத் தோழமைகள் இன்னும் சற்று நேரத்தில் வீட்டிற்கு சென்றுவிடுவார்கள்...... அவர்களைப் போகாமல் தடுக்க என்ன செய்வது..... எனக்குக் கைவந்தக்கலை கதை சொல்வது....... எப்படித் தொடங்கினாலும் என் கற்பனாசக்தி அதி வேகத்தில் இயங்கும்..... எனக்குத் தேவையான நேரம் வரை கதை வளரும்........கதை சொல்லத் தொடங்கினேன் .....தாத்தா பாட்டி அப்பா சொன்னக் கதைகளில் ஆரம்பமானது என் கதை சொல்லும் படலம்.....
அடுத்து என் சொந்தக் கட்டுக் கதைகள் அவிழ்த்து விடப்பட்டது..... கேட்கும் கூட்டத்தின் ஆர்வம் என் கட்டுக்கதையை விறுவிறுப்பாக்கியது........

இறுதியில் இன்று இரவு வைகுண்ட ஏகாதசியில் சொர்க வாசல் திறக்கப்படும் கதை........மேலுலகில் தேவர்கள் சிவன் பிரம்மா விஷ்ணு மூன்று தேவியர் நாரதர் அனைவரையும் கண்விழித்தால் பார்த்துவிடலாம் என ஆர்வத்தைத் தூண்டினேன்......அதுவும் சொர்க்க வாசலின் திறவுகோல் என் தந்தையிடம் தான் உள்ளது என்று ஒரு மிகப் பெரியப் பொய்யை முத்தாய்ப்பாய் கட்டிவிட்டேன்.... (என் தந்தையின் பெயர் வைகுண்டம் ) அப்பா பள்ளியின் தலைமை ஆசிரியர் என்பதால் அனைவருக்கும் அவர்மீது பயம் கலந்த மரியாதை.........அதனால் அனைவரும் ஓரளவிற்கு நம்பிவிட்டனர்.... அவர்கள் நம்பும்படி நான் ஏற்கெனவே பார்த்ததாய் என் அனுபவத்தை சுவாரஸ்யமாய் விவரித்தேன்........அவர்கள் ஆர்வக் கோளாறு......சாதகமாய் விளையாட்டு என் விருப்பம் போல் தொடர்ந்தது.... இரவு 9 மணியை நெருங்கியது..... என் அம்மா என்னை அழைக்க தெருவுக்கே வந்துவிட்டார்..... இவ்வளவு நேரம் தூங்க வராமல் என்ன விளையாட்டு வேண்டிக் கிடக்கிறது....உள்ளே வா என்று அதட்டி என்னை அழைத்தார்.....

பாவம்! என்னை நம்பி சொர்க்க வாசல் திறப்பைக் காண ஆவலுடன் காத்திருந்த நட்பு வட்டங்களுக்கு பெருத்த ஏமாற்றம்..... ஆனாலும் அதில் ஒரு துடுக்கு... டீச்சர் அமுதா அப்பா எப்ப வருவார் என்று கேட்டாள்...... இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்..... நீங்களும் வீட்டுக்குப் போய் தூங்குங்கள் என்று என் அம்மா ஆசிரியருக்குரிய மிடுக்கில் கட்டளையிட்டார்.....

அப்பாடா......நாம் சொன்னக் குட்டு வெளிவரவில்லை என்று நிம்மதிப் பொருமூச்சில் நான்......ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி வரும்போதும் என் குழந்தைப்பருவ நட்புகள் .....கவலையின்றி ஆடித்திரிந்த நிகழ்வுகள்.....நான் கட்டியக் கதைகள் அடுக்கடுக்காய்.....நினைவுக்கு வரும்......இதழோரத்தில் புன்னகையும்..... அதனுடன் இனம்புரியாத சோகமும் ஒட்டிக் கொள்ளும்.....உண்மையில் என் சொர்கவாசல் திறவுகள் என் தந்தையின் அன்பு தானே.....!பறித்துக் கொண்டானே இறைவன்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (19-Sep-17, 8:48 pm)
பார்வை : 160

மேலே