என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - - பாகம் 47

முபாரக்கின் திருமணத்திற்கான பர்ச்சேஸ், மற்ற ஏற்பாடுகள் அனைத்தும் தடபுடலாக நடந்தது. அந்த மாதம் தொடங்கியதில் இருந்தே அனைத்து நண்பர்களும் பிசியாக இருந்தனர்.

விஜி, ரம்யா, காயத்ரி அனைவருக்கும் விடுமுறை என்பதால் காயத்ரி பத்து நாட்கள் முன்பே விஜி ரம்யா இருவருடன் அவளது பாட்டி வீட்டில் வந்து தங்கிவிட்டாள். திருமணத்திற்கு ஒருநாள் முன்பு அவர்களின் குடும்பங்களை ஏற்றி வர ரியாஸின் டெம்போ டிராவலர் தயாராக இருந்தது. முபாரக்கின் புதிய அக்ஸெண்ட் கார் வாஷிங்கிற்கு கொடுக்கப்பட்டு பளபளவென்று இருந்தது.

திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு, நர்கீஸ் மற்றும் குடும்பத்தினருக்காக கடலூரில் உள்ள ஒரு கெஸ்ட் ஹவுஸ் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. அதில் மணப்பெண்ணிற்கு மருதாணி இடும் சடங்குகள் செய்யப்பட்டன, பெண்ணிற்கு தோழிகளாய் ராதா, ஜெயா ஆகியோர் தஞ்சையில் இருந்தும் விஜி, ரம்யா, காயத்ரி போன்றோரும், ரகுவின் சகோதரிகள் இருவரும் இருந்தனர்.

அங்கே முபாரக் வீட்டில் வானுக்கும் மருதாணி இடப்பட்டது. அவனுக்கு தோழர்களாக கடலூர் அணி மொத்தமும் இருந்தது.

மறுநாள் திருமண நாள் அன்று காலை பஜர் தொழுகை முடிந்ததும் திருமண சடங்குகள் தொடங்கப்பட்டன. மணப்பெண்ணிற்கு அழகான பட்டாடை உடுத்தி மாப்பிள்ளை கோட் சூட்டுடன் கம்பீரமாக நிற்க சில குரான் ஷரத்துகள் ஓதப்பட்டன. ஒரு கட்டத்தில் இருவருக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. பின்பு முபாரக்கை ஒரு பல்லக்கு போன்ற சாதனத்தில் அமர வைத்து கடலூர் முத்துநகர் பள்ளிவாசலுக்கு ஊர்வலமாய் கொண்டுசென்று அங்கே மணம் புரிவதற்காக உண்டான மண்டபம் போன்ற அமைப்பில் மணப்பெண், மணமகன் மற்றும் இருதரப்பிலும் மூன்று மூன்று சாட்சிகள் அழைக்கப்பட்டனர். மணமகனிடம் முதலில் இமாம் (பள்ளிவாசலில் குரான் ஓதும் நபர்) "இந்த பெண்ணை உனக்கு மணந்து கொள்ள சம்மதமா" என்று கேட்டதும் "குபூல்" (சம்மதம் என்பதன் உருது சொல்) என்று மூன்று முறை சொன்னான் முபாரக்.

அதே கேள்வி நர்கீஜிடம் கேட்கப்பட்டது. அவளும் "குபூல்" என்று மூன்று முறை சொல்ல, சாட்சிகள் கையெழுத்திட திருமணம் இனிதே நிறைவேறியது. அங்கிருந்தது மீண்டும் பல்லக்கில் அமர்ந்து முபாரக் மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டான். அங்கே மணமேடையில் மணமகன் இருக்கையில் முபாரக்கை அமர விடாமல் அவனது நண்பர்கள் தடுத்து பணம் கேட்கும் விளையாட்டு நிகழ்த்தப்பட்டது. பத்தாயிரம் ரூபாய் கொடுப்பதன் பேரில் முபாரக்கிற்கு இருக்கையில் உட்கார அனுமதி கிடைத்தது. அந்த பத்தாயிரம் ரூபாய் வைத்து அதற்கு மேல் காசு போட்டு அன்று மாலை மண ஜோடிக்கு பரிசு வாங்கி கொடுக்க வேண்டும் என்பது தமிழக இஸ்லாமியர்களின் சிறிய கோட்பாடு. பின்பு மேலும் சில சரத்துகள் ஓதப்பட்டு ஹிந்துஸ்தானி கச்சேரியும் நடந்தது.

சற்று நேரத்திற்கு பிறகு உணவு பரிமாறப்பட்டது. நெய் வாசமும், மாமிசமும் வெகு ருசியாகவும் நேர்த்தியாகவும் அத்தனை பண்டங்களும் தயார் செய்யப்பட்டிருந்தன.

மாப்பிள்ளை தோழர்களுக்கு விமரிசையாக தரப்படும் "கலிமா விருந்து" முபாரக்கின் தோழர்கள் அனைவருக்கும் பல புதிய வகை பலகாரங்களுடன் பரிமாறப்பட்டது.

பின்பு அனைவரும் சாப்பிட்டுவிட்டு ஓய்வில் இருக்க, மலை மீண்டும் மண கொண்டாட்டங்கள் ஆரம்பம்.

முபாரக்கிற்கு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு புது பல்சர் பைக் அன்பளிப்பு அளிக்க, ஆர்ப்பரிப்பு அதிகமானது. அரிசி அளந்து போடும் விளையாட்டு முதலில் ஆரம்பமாக விட்டுக்கொடுக்கும் பழக்கத்தை மணப்பெண் எடுத்துக்காட்ட அந்த விளையாட்டானது ஆடப்படுவது மரபு.மூன்று முறை அளந்து போடும் அந்த விளையாட்டிற்கு, மூன்றாவது முறை பெண் அளந்து போடாமல் கணவனுக்கு விட்டு கொடுப்பது போன்ற நிகழ்வாகும். அதன்பிறகு மணமகன் மணமகள் தோழா தோழிகளின் பொருட்களை எடுத்துக்கொண்டு பேரம் பேசுவது போன்ற விளையாட்டுகளும், கணவன் புரிந்து கொள்ளும் மனைவி விட்டுக்கொடுக்கும் பல விளையாட்டுகள் அரங்கேறின.

இறுதியாக காசு வைத்து பல்லாங்குழி ஆடும் மரபு செய்யப்பட்டது. பெண்ணானவள் விட்டுக்கொடுத்தே ஆடுவாள். கணவன் கையில் அதிக செல்வம் சேரும். அதை அப்படியே எடுத்து மனைவியிடம் கணவன் கொடுப்பதாகும் இந்த விளையாட்டு.

இதில் மனைவி விட்டுக்கொடுப்பதும், கணவன் அதனால் நிறைய சம்பாதிப்பதும் அதை அப்படியே அவளது கைகளில் கொடுத்து உன் சந்தோஷத்திற்காக தான் நான் சம்பாதிக்கிறேன், உன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வேன் என்று மணமகன் புரிந்து கொள்வதை எடுத்துரைக்குமாறும் நடப்பது மரபு.

இரவு விருந்துக்கு பிறகு அனைவரும் முபாரக்கின் வீட்டில் கூட, மணநாள் இனிதே நிறைவேறியது.

ஈஷா தொழுகைக்கு பின்னர் முபாரக் நண்பர்களிடம் வந்தான்.

"மச்சி, எல்லாரும் ஹேப்பி தான டா" என்றான் முபாரக்.

"எல்லாம் ஹேப்பி டா, நீ இனிமே எங்களை மறக்காம இருந்தா சரி" என்றான் ரியாஸ்.

"அது என்ன டா அப்டி சொல்ற, என்னிக்கும் நீங்க தான் டா எனக்கு முக்கியம்" என்றான் முபாரக்.

"முபாரக்....இதுவரைக்கும் நர்கீஸ் உன்னை பேர் சொல்லி கூப்பிட்டா, இனிமே எப்படி கூப்பிடுவா" என்றான் பிரவீன்.

"மாமா னு கூப்பிட சொல்லி இருக்கேன்" என்றான் முபாரக்.

"சரி சரி, நீ போ, பிசியா இருக்கவேண்டிய நேரம்" என்றான் ரியாஸ்.

மறுநாள் பொழுது விடிந்தது.

அனைவரும் பிரிந்து சென்றனர். அவரவர் வேலைகளை பார்க்க தொடங்கினர்.

முபாரக் - நர்கீஸ் ஜோடி பல்லாண்டு வாழ அனைவரும் வாழ்த்த அவர்களின் திருமணம் இனிதே முடிந்தது.

ஓராண்டுகாலம் எப்படி போனதென்றே தெரியவில்லை, மிகவும் வேகமாக நகர்ந்தது.

விஜி-பிரவீன் இருவரும் மேலும் மேலும் நெருக்கமாகினர்.

இருந்தாலும் பிரவீன் தனது காதலை விஜியிடம் எடுத்துரைக்கவே இல்லை. அவளது படிப்பு கெடும் வகையில் எதுவும் செய்யக்கூடாது என்றிருந்தான்.

காயத்ரி அடிக்கடி முபாரக்கின் அறிவுரைகளை கேட்டும், அண்ணா என்ற ஸ்தானத்தை மதிக்கும் வகையில் பலமுறை அவனுக்கு போன் செய்தும் மெசேஜ் செய்தும் நிரூபித்தாள்.

விஜி, ரம்யா இருவரும் கூட அனைவருக்கும் சமமாக மெசேஜ் செய்து தங்களின் நட்பை பலப்படுத்திக்கொண்டனர்.

விஜி காயத்ரி இருவரும் தங்கள் கல்லூரியின் இறுதி ஆண்டை முடிக்க கொஞ்ச நாட்களே எஞ்சி இருந்தது. ரம்யாவோ சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர்ந்து ஒரு வருடம் முடியும் தருவாய்.

அதற்குள் முபாரக் - நர்கீஸ் ஜோடிக்கு பாத்திமா, அப்துல்லாஹ் என்று ஒரே பிரசவத்தில் பிறந்த இரண்டு குழந்தைகள் பிறந்தன.

ரம்யா சென்னையில் இருந்து எப்போதெல்லாம் விழுப்புரம் வருகிறாளா அப்போதெல்லாம் நண்பர்களின் கூட்டத்தை பார்க்க தவறுவதில்லை.

இறுதி தேர்வுகள் நெருங்கும் தருவாயில் விஜிக்கும் காயத்ரிக்கு கேம்பஸ் இன்டர்வியூ வந்தது. குளோபல் டெக் எனப்படும் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் கிளை நிறுவனம் இவர்கள் இருவரையும் தேர்வு செய்தது. சேர்ந்த முதல் மூன்று மாதத்திற்கு பிறகு ட்ரெயினிங்கிற்காக ஆஸ்திரேலியா அனுப்பப்பட்டனர். ஒன்பது மாத காலம், அந்த பிரிவு ப்ரவீனுக்கும் சரி விஜிக்கும் சரி மிகவும் கொடுமையானதாக இருந்தது. வாரம் ஒருமுறை யாஹூ மெசெஞ்சரில் வீடியோ கால் செய்துகொள்வது தான் அவர்கள் அடைந்த ஒரே ஆறுதல்.

ஒருவரை ஒருவர் ஒரு வார இடைவெளிக்கு பின் பார்த்துக்கொள்வது ஏதோ யுகம் யுகமாக பார்த்துக்கொள்ளாதது போல தோன்றியது இருவருக்கும்.

ஒன்பது மாதங்கள் கழிந்து விஜி காயத்ரி இருவரும் திரும்பி வரும்போது முபாரக் - நர்கீஸ் தங்கள் குழந்தைகளுடன் பிரவீன் ரியாஸ் சமேதம் சென்னை ஏர்போர்ட்டில் வண்டியுடன் காத்திருந்தனர்.

எழுதியவர் : ஜெயராமன் (20-Sep-17, 10:21 am)
சேர்த்தது : நிழலின் குரல்
பார்வை : 241

மேலே