போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோதக் கடத்தலுக்கு எதிரான உலக தினம்

சட்ட விரோதப் போதைப் பொருள் பயன்பாட்டையும் கடத்தலையும் எதிர்த்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ஆம் நாள் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோதக் கடத்தலுக்கு எதிரான உலக தினம் கடைபிடிக்கப் படுகிறது. முதன் முதலில் 1987-ல் இந்த நாள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் கடைபிடிக்கப் பட்டது. ஐக்கிய நாடுகளின் புள்ளி விவரப்படி உலகம் முழுவதும் 2.30 கோடி மக்கள் போதைப்பொருளைப் பயன்படுத்துகின்றனர். ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் அறிக்கை 2007-ன் படி, உலக முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 32,200 கோடி யு.எஸ். டாலருக்கான போதைப்பொருள் வணிகம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் கருத்து வாசகம் “முதலில் கேளுங்கள்”.

“முதலில் கேளுங்கள்” என்பது போதை மருந்து பயன்பாட்டைத் தடுப்பதற்கான ஆதரவை அதிகரிக்க எடுக்கப்படும் முன்முயற்சி. இது அறிவியலை அடிப்படையாகக் கொண்டது. இவ்வாறு இது, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமுதாயங்களின் நன்மைக்கான ஒரு பலனளிக்கும் முதலீடு ஆகும். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கூறுவதைக் கேட்பதே அவர்களுக்கு உதவும் முதல் படி. இதனால் அவர்கள் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வளருவார்கள்.

போதைப் பொருள் பயன்பாடு மிகவும் கடுமையான சுகாதாரப் பிரச்சினையாகும். உடல்நலத்தைச் சீர்கெடச் செய்வதோடு, பொருளாதார இழப்பு, திருட்டு, வன்முறை, குற்றம் போன்ற சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளையும், சமூக ஒதுக்கம், ஒட்டுமொத்த சமூக வீழ்ச்சி போன்ற பக்க விளைவுகளையும் உண்டாக்குகிறது.

போதைப் பொருள் கடத்தல் உலகம் முழுவதும் நடைபெறுகிறது. ஆனால் சில நாடுகள் கடத்தலுக்கு மையப்புள்ளிகளாக விளங்குகின்றன. இந்தியா அதன் நிலவியல் இருப்பு நிலை காரணமாகப் போதைப் பொருள் கடத்தலுக்கும், பயன்பாட்டுக்கும் பலிகடா ஆகியுள்ளது. போதை மற்றும் மனநிலை மாற்றப் பொருட்களைத் தடுக்க இந்திய அரசு 1988-ல் ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது. இருந்தாலும் போதைப்பொருள் கேடு பரவலாகத் தொடர்ந்து வருகிறது. பஞ்சாபில் ஏறத்தாழ 75% இளைஞர்கள் ஏதோ ஒருவகையான போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளனர். மாநகரங்களில் மது பழக்கத்தோடு போதைப் பழக்கமும் இளைஞர்களிடத்திலும் பெண்களிடத்திலும் கூட அதிகரித்து வருவதாக நம்பப்படுகிறது. மேற்கத்திய தாக்குறவு, மாறிவரும் குடும்ப உணர்வு, சகாக்களின் அழுத்தம் போன்றவை போதைப் பழக்கத்துக்கான சில காரணங்கள்.

தில்லியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட மறுவாழ்வு மையங்கள் போதைக்கு அடிமையானவர்களை மீண்டும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்குத் திருப்பிக் கொண்டுவர ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன.

போதைப்பொருளில் இருந்து சமூகத்தை எவ்வாறு காக்கலாம்?

தடுப்பு மற்றும் நலமேம்பாட்டில் கவனம் செலுத்துதல்: சமநிலை உணவு, உடல்பயிற்சி, தகுந்த ஓய்வு, பொழுதுபோக்கு ஆகியவற்றால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்குதல், ஆக்கபூர்வமான பொழுதுபோக்குகளை உருவாக்குதல், நேர்சிந்தனைகள், சமுதாய செயல்பாடுகளில் ஈடுபடுதல் போன்றவை புகைத்தல், மது, போதை ஆகிய கெட்ட பழக்கவழக்கங்களைத் தடுக்க வல்லவை.

யோகா, தியானப் பயிற்சிகள்: போதைப் பழக்கத்தைத் தடுப்பதிலும், போதைக்கு அடிமையானவர்களை மீட்பதிலும் இவை பயனளிப்பவை ஆகும்.

சிகிச்சை வாய்ப்புகள்

போதைப் பழக்கத்தை ஒரு பிரச்சினையாக அங்கீகரிப்பதே சிகிச்சைக்கான முதல் படி. இரண்டாவது படி உதவியைப் பெறுவது. உலகின் பல இடங்களில் ஆதரவுக் குழுக்களும் தொழில் ரீதியான சேவைகளும் கிடைக்கின்றன.

உளவியல் சிகிச்சை-

ஒரு சிறப்பு மருத்துவருடன் நேருக்கு நேர் அல்லது குடும்ப சிகிச்சைமுறை அளிக்கப்படலாம். போதைப்பொருளுக்கான அடங்கா வெறி, போதைப்பொருளைத் தவிர்த்தல், ஏற்படக்கூடிய சுணக்கம் ஆகியவற்றைக் கையாளுவதின் மூலம் போதைப் பழக்கத்தை மாற்றும் சிகிச்சையைப் பலனளிக்கும் விதத்தில் நடைமுறைப்படுத்தலாம். நோயாளியின் குடும்பமும் இணைந்து ஈடுபட்டால் நல்ல பலன் ஏற்படும் சாத்தியக் கூறுகள் உண்டு.

சுய-உதவிக் குழுக்கள் -

நோயாளி தம்மைப் போலவே பிரச்சினை உள்ளவர்களைச் சந்திப்பதின் மூலம் உத்வேகம் அடைகின்றனர். கல்வி மற்றும் தகவலுக்கும் சுய உதவிக் குழுக்கள் உதவிகரமாக இருக்கின்றன. அல்ககாலிக் அனானிமஸ், நர்கோட்டிக்ஸ் அனானிமஸ் போன்றவை உதாரணங்கள். நிக்கோடினுக்கு அடிமையானவர்களுக்கு குழுவில் இணையும் மருத்துவர்களிடம் இருந்து உதவி பெற்றுக் கொள்ளலாம்.

போதை நிறுத்தப் பின்விளைவுகள் –

நோயாளியின் உடலில் இருந்து விரைவில் போதை தரும் பொருட்களை அகற்றுவதே முக்கிய நோக்கம். சில சமயம் போதைப் பொருளின் சிறு அளவைப் படிப்படியாக குறைத்துக் கொடுத்து வருவதும் உண்டு. சில நோயாளிகளுக்குப் பதில்பொருட்கள் கொடுக்கப்படும். சூழ்நிலைக்கு ஏற்ப மருத்துவர் உள் அல்லது வெளி நோயாளியாக சிகிச்சைக்கு பரிந்துரைப்பார்.

எழுதியவர் : (22-Sep-17, 4:18 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 1884

சிறந்த கட்டுரைகள்

மேலே