முப்பொருளுண்மை தெளிவான் அருஞ்சீலன் – இன்னிலை 16

இன்னிசை வெண்பா

முப்பொருள் உண்மை தெளிவான் அருஞ்சீலன்
முப்பொருள் உண்மை யுடையான் அருமுனிவன்
முப்பொருள் உண்மை மடுப்பானிறை யாங்கு
முப்பொருள் உண்மைக் கிறை. 16 இன்னிலை

பொருளுரை:

அறம் பொருள் இன்பம் என்ற மூன்று பொருள்களின் உண்மை இயல்புகளை யுணர்ந்து தெளிந்தவன் அருமையான நல்லொழுக்க முடையவனாவான்.

அம்மூன்று பொருள்களின் உண்மையறிவுடையவன் அரிய தவ முனிவனாவான்.

அம்மூன்று பொருள்களின் உண்மையை மனிதர்கட்குக் காட்டி வளர்ப்பவன் அரசனாவான்,

அம்மூன்று பொருள்களும் மெய்ப் பொருளுக்கு உறைவிடமாம்.

கருத்து: அறம் பொருள் இன்பம் என்ற மூன்று பொருள்களின் இயல்புணர்ந்து தெளிந்தவன் நல்லொழுக்கம் உள்ளவன் ஆவான். அவற்றை அறிந்தவன் முனிவன்; அவற்றை மனிதர்க்குக் காட்டிப் பெருக்குவோன் அரசன். பரம்பொருட்கு இருக்குமிடமும் அவையாம்.

விளக்கம்:

உண்மை தெளிவான் என்றது, அறம் இத்தன்மையுடையது; இவ்வாறு செய்யவேண்டும்; இன்ன பயனைத் தரும் என்றும்,

பொருள் என்பது இது; பொருளை இன்னவாறு ஈட்டவேண்டும்; இவ்வாறு செலவழிக்கவேண்டும்; அதனால் இன்ன பயன் விளையும் என்றும்,

இன்பம் என்பது இன்னது; அதனை இவ்வாறு துய்த்தல் வேண்டும்; அதனால் விளையும் பயன் இது என்றும்

ஒவ்வொன்றினியல்பும் கல்வி கேள்வி வாயிலாக அறிந்து ஐயம் நீங்கித் தெளிந்தவன் என்பதையுணர்த்தும். தெளிந்தவன் முறையறிந்து அவற்றைத் தேடித் துய்த்து வாழ்வதனால் அவன் நல்லொழுக்கமுடையவனாவான் என்றார்.

முனிவர்கள் அவற்றைத் தேடமாட்டார்; ஆதலின் அவற்றின் இயல்பறிந்தவரை முனிவர் என்றார்.

இம்மூன்றையும் மக்கள் முறையே தேடி வாழும்படி காவல்புரிபவன் அரசன் என்பது கருதி 'மடுப்பவன் இறை' என்றார்.

உண்மைக்கு - மெய்ப் பொருளுக்கு இஃது பரம்பொருளாகிய கடவுளுக்கு எனப் பொருள் தந்தது.

உண்மைக்கு முப்பொருள் இறை என முடிக்க - இறைவன் இம்மூன்று பொருள்களிலும் தங்கியிருப்பான் என்பது.

எனவே இம்மூன்று பொருளையுணர்ந்து வாழ்வு நடத்துவோர்க்கு இறைவனருள் எளிதில் கிட்டும் என்பது கருத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Sep-17, 8:39 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 53

மேலே