சுடர் பறவை

சுடர் பறவை

எம் போன்றோரை
பெற்றெடுத்த அன்னையரே...
உம் சுவாசத்தின் சுவடுகள்-
எம் இதயங்களில்
நொடிதோறும்
துடித்துக் கொண்டே உள்ளன...
அதே
வாசத்துடனும்
பரிசத்துடனும்.

உம்
மென்மேனியின்
தொடுதல்களை எண்ணியே
உயிர் சமைக்கிறோம்.
தீண்டலில்
துளிர்க்கிறது
அருவியின் துளிர்ப்புகள்
மிக அருகில்
இன்றும்.

எம்
உடல் நதிகளில்
நித்தம் நித்தம்
நீந்திக் களிக்கின்றன
நீவீர் விதைத்த
கனவுப் பரிசல்கள்
செல்களாய்.

உம்
அணைப்புகளில்
கனன்ற கனப்புகளின்
சுடர் பறவைகள்
கனந்தோறும்
கடக்கின்றன
நீவிர் காட்டிய
கனவு தேசங்களை நோக்கி.

அன்பு இழைகள்
அற விழுதுகள்
பண்பு மழைத்துளிகள்...
மனித நேயத்திற்கான
அன்னையரின்
சமர்ப்பணங்கள்!

சோதரர்களே!
தேசங்கள் கடக்கலாம்...
கற்றைகள் விரியலாம்...
இல்லங்கள் வசமாகலாம்...
உறவுகள் பெருகலாம்...
நட்புகள் முகிழ்க்கலாம்...
என்றாலும்
என்றாலும்
சுவாசிக்கப்
பழகுவோம்.

பாச நேசத்துடன்
அரவணைத்து வார்தெடுத்த
அன்னையருடனும்
அவர்தம்
அரவணைப்புகளோடும்
நம்மினிய
புது உறவுகளோடு
சுவாசம் உள்ளவரை!

- சாமி எழிலன்
23 09 ௨௦௧௭

9080228609

எழுதியவர் : சாமி எழிலன் (23-Sep-17, 11:50 am)
Tanglish : sudar paravai
பார்வை : 68

மேலே