மரணிக்கும் தருணத்தில்

மெய் உறங்க உயிர் உறங்கும் நேரம்.
மெய் பொய்யாய் போகும் நேரம்.

மாபெரும் மனிதரும்
மரணிக்கும் நேரம்
மறவாமல் உடன் வரும்
பிணம் என்ற பெயரும்.

ரதம் ஏறிச் சென்றாலும்
சவம் என்றே ஊர் சொல்லும்.

வருங்காலப் பிணங்களெல்லாம்
வந்து
இடுகாடு பார்த்துச் செல்லும்.

மனிதா,
வெல்லவே பிறந்ததாய்
மார்தட்டிக் கொண்டாயே!

எழும்பின்றி நாவிலே
நடனங்கள் புரிந்தாயே!
பெரும் பேர் எடுத்ததாய்
மிதப்பிலே திரிந்தாயே!

இன்று பிணம் என்ற
பெயர் கொண்டு
நெருப்பிலே எரிந்தாயே!

ஆடம்பரம் தேடி அலைந்த நீ
இன்று
ஆடி அடங்கிவிட்டாய்.

மாட மாளிகைகள் இருக்க
இன்று
மயானம் சேர்ந்துவிட்டாய்.

மரியாதை மறந்தாய்.
மனிதத்துவம் துறந்தாய்.
மக்கிப் போகும் உடம்பிற்கு
மாயும் வரை சேர்த்தாய்.
நீ சேர்த்தது சேராமல் இன்று
மண்ணோடு சேர்கிறாய்.


பெற்றவன் மறந்து
பெற்றதை வதைத்து
பேரின்பம் காண நினைத்தோரே,

சுற்றம் ஒதுக்கி
சுகம் கேட்டோரே,

மனிதாபிமானத்தை மண் என
மிதிக்கும் மாமனிதர்களே!

இலையுதிர் காலம்
எதிர்நோக்கிக் காத்திருங்கள்.

சருகுகளாய் ஓட்டிச் செல்ல
காலன் காற்றாய் வருகிறான்.

எழுதியவர் : யுவா ச. (23-Sep-17, 11:02 pm)
சேர்த்தது : yuva s
பார்வை : 71

மேலே