பேதைமை - கலி விருத்தம்

தெண்ணீர் பரந்து திசைதொறும் போய்க்கெட்ட
எண்ணெய்கொண்(டு) ஈட்டற்கு இவறுதல் என்ஒக்கும்
பெண்மனம் பேதித்து ஒருப்படுப்பென் என்னும்
எண்ணில் ஒருவன் இயல்புஎண்ணும் ஆறே. 49 வளையாபதி

பொருளுரை:

பெண்ணினது மனத்தியல்பினை மாற்றி ஒருமுகப்படுத்துவேன் என்று கூறுகின்ற ஆராய்ச்சி இல்லாத மடவோனுடைய தன்மையை நினைக்கும் பொழுது, அம்முயற்சி எதனை ஒக்குமெனின், தெளிந்த நீரிலே பெய்யப்பட்டு நான்கு திசைகளினும் பரவிச் சென்று அழிந்து போன எண்ணெயை மீண்டும் ஒருசேரக் கொண்டுவந்து சேர்த்தற்கு அவாவுதலையே ஒக்கும் என்பதாம்.

விளக்கம்:

பெண்ணின் மனம் இயல்பாகவே பன்முகப்பட்டுச் செல்வதாம், அதனை ஒருமுகப்படுத்த முயலுதல் நீரிற் பெய்யப்பட்டுத் திசையெல்லாம் சிதறிப்போன எண்ணெயை மீண்டும் ஒருசேரக் கூட்டிக் கைக்கோடற்கு விரும்புவது போன்றதொரு பேதைமைத்து எனப்படும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Sep-17, 1:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 160

மேலே