குடும்பத் தலைவனின் உன்னதச் செயல் – இன்னிலை 34

நேரிசை வெண்பா

எய்ப்பில்வைப் பாக வருவாயி லைந்தொன்றை
மெய்ப்பிணி சேய்வரைவிற் கூட்டிடுக - கைப்பொருள்
இட்டிலுய் வாயிடுக்க வீங்கவிழை யற்கவாய்
வட்டன் மனைக்கிழவன் மாண்பு. 34 – இன்னிலை

பொருளுரை:

கைப்பொருள் வருவாய் குறைந்தால் செலவு ஏற்படும் வழிகளைச் சுருக்க வேண்டும். தன் வச்தியைப் பெருக்கி ஆடம்பரமாகக் காட்ட விரும்ப வேண்டாம். பொருளைத் திரட்டுவதே குடும்பத் தலைவன் செயலாகும்.

தனக்கு வரும் வருவாயில் ஐந்தில் ஒருபங்கை, தன் உடல் இளைத்த முதிர்ந்த பருவத்திற்குத் தேவையான சேமிப்புப் பொருளாகவும், உடற்பிணிக்கு வேண்டும் மருந்துண்டற்குரிய பொருளாகவும், மக்கட்கு மணம் புரியும் செலவிற்குரிய பொருளாகவும் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.

விளக்கம்:

வரவுக்குத் தக்கவாறு குறைந்தளவே செலவே செய்யவேண்டும்; வரவிற்கு மேற்செலவு செய்வது தகாததாம்.

"அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல,
இல்லாகித் தோன்றாக் கெடும்'

என்பது இங்கு கருதத்தக்கது.

வீங்க-பெருக. இது தன்னைப் பிறர்க்குப் பெருக்கிக் காட்ட என்ற பொருளைத் தந்தது.

வெளித்தோற்றம் பெருமையாகக்காட்டுவது, இதனை "ஆடம்பரம்" என்பர். அதனாற் பயனில்லை என்பதன் பொருட்டு "விழையற்க" என்றார்.

வட்டல் - திரட்டுதல்; இது பொருளைத்திரட்டுதல் என்ற பொருளைத்தந்தது. "பொருளில்லார்க்கு இவ்வுலக மில்லாதி யாங்கு" என்ற குறளடியை நினைவு கூர்தாழ் நல்லது.

குறிப்பு: எய்ப்பு, வைப்பு என்பன முதுமையையும் பொருளையும் உணர்த்தின.

இப்பொழுது எல்லோரும் கடன் பெற்று அடுக்கு மாடிக் கட்டடம், கார் போன்ற வாகனங்கள், விலை உயர்ந்த தொலைக் காட்சிப் பெட்டிகள் மற்ற ஆடம்பரப் பொருட்களை மாதத் தவணையாகக் கட்டும் வசதியையும், credit card போன்றவற்றையும் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும். ஆசை காட்டிக் கடனைக் கொடுக்கும் நிறுவனங்கள் பின்னால் கிடுக்கிப் பிடி போடுவதையும், பல அகால மரணங்கள் நிகழ்வதையும் பத்திரிக்கைகளில் வாசித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Sep-17, 3:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 69

மேலே