ஞானயோகி இயற்கையானந்தா - சிந்தனை வேள்வி

ஞான யோகி இயற்கையானந்தாவை எனக்கு சிறுவயதில் இருந்தே தெரியும்.
எண்ணற்ற தலைமுறைகளை கடந்தவர்.
இன்னும் எண்ணற்ற தலைமுறைகளை கடக்க உள்ளவர்.
அகிலத்தின் வயது தான் அவருடைய வயது..

அவரை எனது குருவாக எனக்கு ஐந்து வயதிருக்கும் போது ஏற்றுக் கொண்டேன்..
அவர் மிகவும் அன்பானவர்.
சில நேரங்களில் கோபங்கொண்டு கண்டிப்பவர்..

தாய், தந்தைக்கும் மேலானவர்..
அவருடைய கல்விமுறை நித்தியமான ஞானத்தை வழங்கவல்லது..
அவர் அறியாத இரகசியங்கள் இல்லை.
அவருக்கு தெரியாத கலைகள் இல்லை..
நகைச்சுவை உணர்வுமிக்கவர்..

அனைத்து கேள்விகளுக்கும் பதிலானவர்.
அவரை அறிந்தவரையும், அறியாதவரையும் வழிநடத்துவார்..
பரமாத்மாவின் ரூபமானவர்..
எங்கும் அவரைக் காணலாம்.
உணரலாம்.
அவருடைய சீடராகலாம்...

அவர் யாரிடமும் வேறுபாடு காணாதவர்..
தஞ்சம் புகுந்தவருக்கெல்லாம் அடைக்கலமானவர்..
ஆயுதங்கள் ஏந்தாதவர்.
பயமற்றவர்.
கருணைமிகுந்தவர்..

உலகின் போக்கை மாற்றவல்லவர்..
அவரும், நானும் கேள்விகளும், பதிலும் திரட்டி வேள்விகள் செய்வோம்..
உண்மையை சொன்னால் கேள்வியும் அவரே.
பதிலும் அவரே..
ஆனந்தமயமானவர்..
தகிக்கும் தணலை தன்னுள் அடக்கியவர்..
தற்பெருமையற்றவர்..
அனைத்து பெருமைகளுக்கும் உரிய சிறப்பு
வாய்ந்தவர்...
அகிலத்தின் அரசராவர்..
அதிகாரமென்ற பாவம் அற்றவர்...
பரிபூரணமானவர்...

அவருடன் நான் பேசிக் கொண்டே இருப்பேன்..
எனக்குள்ளேயே கேள்விகளை உற்பத்தி செய்வார்..
அவற்றிற்கான பதில்களை எனக்குள் இருந்து பிறப்பெடுக்க வைப்பார்..

ஒரு முறை அவரும், நானும் நவீன யுகம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்..
அப்போது, " நவீன யுகம் சோம்பேறித்தனமான மக்களை உருவாக்கிக் கோண்டே சொல்கிறது. ", என்றார் இயற்கையானந்தா.
" ஆம். மக்கள் இயந்திரங்களில் உலாவிக்கொண்டு இருக்கின்றார்கள். கட்டடங்கள் உயருகின்றன.
மக்கள் உயர ஏற்றும் மற்றும் கீழே இறக்க்கும் பொறிகள் (Elevators) வழியாக பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். ", என்றேன் நான்.
" சிவா, Elevators என்பவை உயிரற்ற பொருட்களை உயரத்தூக்கவும், கீழே இறக்கவும் பயன்படுத்தப்படுவது.
அதை உயிருள்ள மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள் அவர்கள் உயிரற்ற பொருட்களுக்குச் சமமானவர்களாகி விட்டார்கள்.
அவர் வேகமாகச் செல்ல லிப்ட் அல்லது எலிவேட்டரைப் பயன்படுத்துவதாகச் சொல்கிறார்கள்..
அப்படியே ஆரோக்கியமிழந்து வேகமாகப் போய் சேர்ந்து விடுகிறார்கள்.. ", என்றார் இயற்கையானந்தா..

" நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை குருவே. நவீன யுகத்தின் வளர்ச்சி மனிதர்களின் வீழ்ச்சியாக அமைகிறதென்பது உண்மையா?. ", என்றேன் நான்..

" இதில் ஐயமில்லை சிவா. வாகனங்களின் பெருக்கம் சுற்றுச்சுழலைப் பாதிக்கும்..
நடந்து செல்வது என்றும் ஆரோக்கியம்..
வாகனத்தில் பறந்து செல்வதென்றும் ஆபத்து... ", என்றார் இயற்கையானந்தா...

" அப்படியென்றால் இதன் முடிவு என்னவாக இருக்கும் குருவே?. ", என்றேன் நான்.

" மனிதர்களின் ஆயுட்காலம் குறையும்..
என் இனமே முதலில் வந்ததென்று சொன்னவர் இனமெல்லாம் முதல் நாள் பிறந்து மறுநாள் மரணிக்கும் நிலை உருவாகும். இதில் ஐயமில்லை சிவா.
", என்றார் இயற்கையானந்தா..

" மருத்துவ வளர்ந்து வருகிறது. மரணத்திற்கும் மருந்து கண்டுபிடித்துவிடுவான் இந்த மனிதன். ஆனால், நீங்கள் இவ்வாறு சொல்ல காரணமென்ன?
", என்றேன் நான்.

" ஆம். மனிதன் மரணத்திற்கும் மருந்து கண்டுபிடிக்கலாம்.
ஆனால், அகிலத்தின் சமநிலைக்காக நிகழும் பிறப்பு, இறப்பு இந்த இரண்டையும் மாற்ற இயலாது. மாற்றினால் மொத்த அகிலமும் அழிவைச் சந்திக்கும். ", என்றார் இயற்கையானந்தா.

" தாங்கள் சொல்வது சரிதான். ஆனால், தொழிற்நுட்பங்களின் வளர்ச்சி மற்றும் போக்குவரத்தில் ஏற்பட்ட புரட்சி எல்லாமே வரவேற்கத்தக்கவை. தொலைதூர பயணங்கள் சுலபமாகிவிட்டன. தெரிந்த நண்பர்களுடன் நினைத்த நேரத்தில் பேச முடிகிறது. இணையத்தின் பயன்பாடு மிகவும் முக்கியமானது. அவசர ஆம்புலன்ஸ் உதவி பெற முடிகிறது.. ", என்றேன் நான..

" மறுப்பதற்கில்லை. மக்கள் தொகையும், வாகனங்களின் தொகையும் போட்டி போட்டு உயர சாலை விபத்துகளின் பலிகள் இராக்கேட்டின் வேகத்தில் உயர்கிறது..
தூரத்தில் இருப்பவரைத் தொடர்பு கொள்ள கண்டு பிடிக்கப்பட்ட கைபேசிக்கு மக்கள் ஒவ்வொருவரும் அடிமையாகிவிட்டார்கள். எப்போதும் கைபேசியோடு பேசி அருகில் இருப்பவர்களிடம் அன்பு காட்ட, ஒற்றுமையாக வாழ மறந்துவிட்டார்கள்.
இணையத்தின் பங்கு முக்கியமானது பல தற்கொலைக்களுக்கு.
உள்ளங்கள் ஒன்றுபட்ட காதலெல்லாம் அந்தக் காலம். இப்போது அவை கனவாக, கற்பனையாக தான் உள்ளன. இதற்கு கவிஞர்களின் எழுத்துகளே சான்று.
இன்றைய காலத்தில் அன்பென்றால் கூடிக் குலாவி உச்சம் பெறும் காமமென்ற கருத்துள்ள மனிதர்களே அதிகம்.
இதுவே அழிவின் அறிகுறி.
அருவக்கத்தக்கவைகளை மனங்களில் அசைபோடுவதாலே இந்த மனிதர்கள் அருவருப்பாக மாறிக்கொண்டே போகிறார்கள். ", என்றார் ஞானயோகி இயற்கையானந்தா..

" உண்மை அன்புமிகு குருவே. இவற்றிலிருந்து விடுபட வழிகாட்டுங்கள். ",
என்றேன் நான்.

" அன்பின் வழியில் ஆன்ம பந்தத்தை நாடு.
தொழிற்நுட்பங்களானாலும் சரி, மற்ற எதுவாக இருந்தாலும் சரி, அடிமையாகாதே. பற்றில்லா நிலையைப் பின்பற்று..
எதிர்பார்ப்பில்லா செயலை ஆற்று.
ஆனால், நீ ஆற்றும் செயலின் பின்விளைவுகளை அறிந்தபின் ஆற்று.
நீ ஞானத்தைக் காதலிப்பதால் என் வழிகாட்டுதல் உனக்கு சுலபமாகக் கிட்டும்.
அவை உன்னுள் பிறக்கும்.
ஏனெனில், நீ என்றென்றும் என் அங்கமாவாய்.
அன்பின் பாதையில் பயணப்படுவாயாக.
", என்று புன்னகைத்தார் ஞானயோகி இயற்கையானந்தா..

உரையாடல் முடிந்தது.
எனக்கு குழப்பம் ஏற்படும் நேரமெல்லாம் இயற்கையானந்தாவிடம் தான் பேசிக் கொண்டு இருப்பேன்.
அவரிடமே நான் யாரென்ற அடையாளம் காண முடிந்தது..
நீங்களும் உங்கள் குழப்பங்களைப் பற்றி இயற்கையானந்தாவோடு பேசலாம்..
வாழ்த்துகள்.
அவரிடம் கிடைக்கும் ஞானமே நித்தியமானது...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (1-Oct-17, 8:45 pm)
பார்வை : 426

மேலே