அன்னையர் தினம்

ஐயிரண்டு திங்கள் நொந்து பெற்ற உன்னையே!
மையிரண்டு விழிகளில் காத்து நின்றவள் அன்னையே!

தங்கமுலை கொண்டு பால் கொடுத்து,
அங்கமெலாம் சிலிர்க்க ஆனந்தம் கொண்டவளே!

உண்ணும் போது என்றாவது அன்னையை நினைத்ததுண்டா,
உன்னை மறந்து உண்ட ஓர் நாளும் அவளுக்கிங்கில்லையே!.

அன்னையே உன்னை போற்றி,
ஆயிரம் பாடலிருந்து பயனென்னவோ!
உன் பெருமையை மறந்த கூட்டம்,
கோடி தான் இந்நாட்டிலே.

உன்னை போற்றி கவி எழுத
பாடல் ஏதும் இல்லையே!
நின்னை கைவிட்ட கூட்டம் தனை
சாடும் நேரம் வந்ததே!

உற்ற சொந்த உறவெலாம்,
கற்ற கல்வி உயர்வெலாம்,
பெற்ற குழந்தை பேரெலாம்,
மண்ணுக்கு நீ வந்த பின்னலோ!.

இவ்வுலகம் வந்து சேரும் முன்னே,
உற்ற உறவு உனக்கு தாயல்லோ!.

மனைவி மக்கள் கூட வாழ தாயை
பாரமென நினைக்கும் பாவிகாள்
உன்னை பாரமென நினைத்திருந்தால்
தன் உடல் நோவ உனை சுமந்திருப்பாளோ!...
வேரை அறுத்துவிட்டு கிளைகளுக்கு
நீர் இறைத்து என் பயன்!!

பால்பட்ட மரத்தை வெட்ட நினைக்கும் மூடரே!...
பால் கொடுத்து தன்னை இழந்தவள் தாயல்லோ!

அன்னை ஒன்று இங்கிருக்க மறந்துவிட்டு
ஆலயம் சென்று பயன் என்ன? ஆங்கே
அன்னதானம், தர்ம வேள்வி செய்வதனால் பயன் என்ன?

வீடு வாசல் மனைவி மக்கள் சூழ
வாழ விரும்பும் மூடரே!!!
தெய்வமதை விரட்டிவிட்டு கோயில் பூசை விணல்லோ!..

மாரி கருமாரி காளி சண்டி தாய் தெய்வம் உண்டு இந்நாட்டிலே!
கற்சிலை தெய்வமென நித்தம் வணங்கும் பாவிகாள்,
கையேந்தி பிச்சை புகும் தெய்வமதை
கோவில் வாசலில் விட்டவன் நீ அல்லோ!..

பெற்ற தாயிடம் கணக்கு பார்க்கும் ஈனனே,
அவள் கணக்கு பார்த்தாள், ஈடு கட்ட
ஏழு பிறவிதான் போதுமோ!...

இறந்த பின்னே பிண்டம் வைத்து சோறு படைக்கும் வீணரே,
இருக்கும் போது கஞ்சி கூட கொடுக்க மறந்த கேவல ஜென்மம் நீயல்லோ!...
கேடு கெட்ட பிறவி நீயல்லோ!..
பாவி உன் கையில் வாங்கி உண்பதை விட
இறப்பதே அவளக்கு மேல் அல்லோ😢!..

அன்னையே,
உன்னையே - நித்தம்
எண்ணியே
வாழும் நிலை மாறி
இன்று மட்டும் ஒரு நாள்
நினைக்கும் மூடர் கூட்டமே!..

எழுதியவர் : ஜித்து (8-Oct-17, 2:11 pm)
Tanglish : annaiyar thinam
பார்வை : 545

மேலே