நிம்மதி தேடும் கவிதைகள்

கருத்துச் செறிவாலும்
உணர்ச்சிப் பெருக்காலும்
சிறுத்த கருப்பொருள்
பருத்து விளங்கும்

உச்சம் அடைந்து
உள்ளம் குளிர்ந்து
நடுங்கும் மேனியில்
பரவசம் பொங்கும்

படிக்கும் எல்லோரையும்
போலவே நம்மையும்
துடிக்கும் உயிருடன்
கடத்திச் செல்லும்

அழகியல் ஆழத்தில்
அழகாய் அழுத்தி
எரிமலை குழம்பென
பெருவெளி கக்கும்

பிறிதொரு கவிதை
மழையென வந்து
அணைத்திடும் வரையில்
கனன்று நிலைக்கும்

நெஞ்சில் இருக்கும்
மஞ்சத்தில் சுகமாய்
வஞ்சனை இன்றியே
படுத்துக் கிடக்கும்.

இத்தகை கவிதை
எத்தனை உண்டு
அத்தனை தனிலும்
வித்தகம் மொண்டு

பாடு பொருளதை
வீடு பொருளாக்கி
ஓடும் மனத்தினை
ஒரு நிலைப்படுத்தும்.

கனவுகள் மாறிட
கற்பனை ஊறிட
நினைவில் எழுந்து
நிம்மதி தேடும்.

.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (9-Oct-17, 4:13 pm)
பார்வை : 189

மேலே