சிநேகிதனே -அத்தியாயம் - 04

....சிநேகிதனே....

அத்தியாயம் : 04

"என்னாச்சு மேடம்..??ஏன் அமைதியாயிட்டீங்க...உன்னோட எல்லாக் கேள்விகளுக்கும் என்கிட்ட பதில் இருக்கு மித்ரா..ஆனால் என்னோட கேள்விகளுக்குத்தான் உன்கிட்ட பதிலே இல்லையே....

இப்போது அவன் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இருக்கிறதோ இல்லையோ...என்னைக் கூறும் போடும் அவனது பார்வைகளுக்குத்தான் என்னால் பதில் பார்வைகளைக் கொடுக்க முடியவில்லை...

அவன் கண்களில் எரிந்து கொண்டிருந்த அனலைப் போக்கும் வழி எனக்குத் தெரியாமலில்லை...ஆனால் அதைப் போக்கிவிட்டால் அவனது வாழ்க்கையை நானே குழி தோண்டிப் புதைப்பது போல் ஆகிவிடுமே...

அதற்காகவா நான் இத்தனை வருடங்களாக ஓடி ஒளிந்து கொண்டேன்...அன்றே என்னால் அவனது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை...இதில் இப்போது மட்டும் நான் அவனிடம் எதைக் கூறி என்னை விளக்குவேன்...?

அன்று அவனிடமிருந்து தப்பிக்க முடிந்த என்னால்,இன்று அவனிடமிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்...

இதே பழைய என் சரணாக இருந்திருந்தால்,என்னைப் புரிந்து கொண்டிருப்பான்...ஆனால் இப்போது தான் அவன் கேள்வியின் நாயகனாக மாறிவிட்டானே...?

இதை நினைக்கும் போதே என்னால் எனையே மன்னிக்க முடியவில்லை...அவனது இந்த மாற்றத்திற்கு முழுக்க முழுக்க நான் மட்டுமே தானே காரணம்...அவனைப் இப்படிப் பார்க்கவா அன்று நான் அவனைப் பிரிந்து சென்றேன்...

"என்னாச்சு...??...பேச்சையே காணோம்...?இன்னும் என்ன சொல்லி இவனை ஏமாத்தலாம்னு யோசிச்சிட்டு இருக்கியா...??.."

"பொய் சொல்லுறதுக்கு உனக்கு சொல்லித் தரனுமா என்ன...நீ தான் அதில டாக்டர் பட்டம் வாங்கியவளாச்சே...??.."

"சரண்...பிளீஸ்...இதோட நிறுத்திக்கோ...இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாத....என்னோட பொறுமைக்கும் ஒரு அளவிருக்கு..."

"நீ பேசுற எல்லாத்தையும் நான் பொறுமையா கேட்டிட்டே இருக்கன்னா....அதுக்கு காரணம் தப்பு என் மேல இருக்கு என்றதால தான்..."

"அதுக்காக நீ என்ன வேணும்னாலும் பேசலாம்...அதை நான் கேட்டிட்டே இருப்பேன்னு மட்டும் நினைக்காத சரண்..."

அவன் என் மனதைக் கிழித்தெறியும் நோக்கத்தோடு தான் பேசிக் கொண்டிருக்கிறான் என்பதை என் உள்ளம் அறிந்திருந்தாலும்,அவனது வார்த்தைகள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருந்தன..அதையும் நான் உயிருக்குயிராய் நேசிக்கும் அவனின் வாயால் கேட்பதென்பதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை...

"இதோ பார்டா...உண்மையைச் சொன்னதும் கோபம் அப்படியே பொங்கிட்டு வாறதை...உன்னோட உண்மையான முகத்தை தானே அன்னேக்கே பார்த்தேனே மித்ரா...இன்னும் எதுக்குடி நடிச்சு நாடகமாடிட்டு இருக்க...??.."

அவ்வளவுதான்...இதற்கு மேலும் அவன் சொல்வதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருக்க என் மனம் எனக்கு இடம் கொடுக்கவில்லை...என் கட்டுப்பாட்டையே நான் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்த வேளையில் அவன் என் சுயமரியாதையை உரசிப் பார்த்த அந்த நேரத்தில் என் உதடுகளிற்கு பதில் என் கை அவன் கன்னத்தில் பதிந்து மீண்டிருந்தது...

ஏன் எதனால்,எனக்கு அப்படியொரு கோபம் வந்ததென்று தெரியவில்லை...

என்னைப் புரிந்து கொள்ள வேண்டியவனே என்னைத் தவறாக எண்ணியதன் விளைவாக வந்த கோபமா...?இல்லை என்னவன் எப்படி என்னை சந்தேகம் கொள்ளலாம் என்றதில் அவன் மேல் வந்த கோபமா என்பதை என்னால் இனங்கண்டு முடியவில்லை...

நான் அவனை அறைந்த அறையில் அவனுக்கு வலித்ததோ,வலிக்கவில்லையோ...??அறையை வாங்கிக் கொண்டு அவன் என்னைப் பார்த்த பார்வையில் அவனைக் காட்டிலும் அதிகமாய் எனக்கு வலித்தது...


தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (10-Oct-17, 6:43 am)
பார்வை : 400
மேலே